கான்ஸ் பட விழாவில் கால் பதிக்கும் ‘96’ நடிகை!

வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா

விஜய்சேதுபதி - த்ரிஷா ஆகிய இருவரது திரை வாழ்க்கையில் என்றைக்கும் மறக்க முடியாத படம் ‘96’. இந்தப் படத்தில் பள்ளிக் காலக் காதல் காலவோட்டத்தில் பிரிந்து பின்னர் 20 ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் சந்திப்பதுபோல கதை அமைக்கப்பட்டிருந்தது.

கதையானது விஜய்சேதுபதி - த்ரிஷா காதலை மையமாகக் கொண்டிருந்தாலும், இதில் புகைப்படக் கலைஞராக வரும் விஜய்சேதுபதியிடம் மாணவியாகச் சேர்ந்து, புகைப்படக்கலையை அவரிடம் கற்றுகொள்ள வரும் வர்ஷா பொல்லம்மாவின் கதாபாத்திரம் ரசிகர்களைப் படம் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பிலேயே வைத்திருந்தது.

வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா

இவர் ஒருதலையாக விஜய்சேதுபதியைக் காதலிக்கிறாரா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருந்துகொண்டே இருந்ததால், வர்ஷா பொல்லம்மா இப்போது வரை, தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமான ‘லவ் ஏஞ்சல்’ ஆகத் தொடர்கிறார். ‘96’ படத்துக்குப் பிறகு, விஜயின் ‘பிகில்’ உட்பட பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துவரும் பொல்லம்மா, சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார்.

தற்போது யாரும் எதிர்பாராத வண்ணம், வர்ஷா பொல்லம்மா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சினிமாவும் வீடியோ கேமும் இணைந்த ஒரு புதுமையான திரைப்படம் உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமாகத் திரையிடத் தேர்வாகியிருக்கிறது. இதைப்பற்றி வர்ஷா பொல்லம்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதைப் பற்றிப் பார்ப்போம்.

வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா

உலகின் பல பெரிய வளர்ந்த நாடுகளும் உலக சினிமாவில் புகழ்பெற்று விளங்கும் சில சிறிய நாடுகளும் சர்வதேசப் படவிழாக்களை நடத்தினாலும் பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரத்தில் 1951-ல் இருந்து மே மாதத்தில் நடைபெற்றுவரும் உலகப் புகழ்பெற்ற திரைப்படவிழாவாக கான்ஸ் (Cannes) விளங்கி வருகிறது. இந்தத் திரைப்பட விழாவுக்கு ஒரு திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமாக ஒரு திரைப்படம் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டால், அதை மற்ற உலக நாடுகள் கொண்டாடித் தீர்ப்பார்கள். அப்படிப்பட்ட கான்ஸ் படவிழாவில் தான் வர்ஷா பொல்லம்மா நடித்துள்ள இந்தப் புதுமையான சினிமா திரையிடத் தேர்வாகியிருக்கிறது.

மன்மார் கேம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் லைவ் ஆக்‌ஷன் கேம்/திரைப்படம் (Interactive Live Action Movie/Game) இரண்டும் சேர்ந்த கலவை இந்த படைப்பு. ஒரு திரைப்படம் எப்படி ஒரு வீடியோ கேமாகவும் ஒரேநேரத்தில் இருக்க முடியும் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். அதைத் தெரிந்து கொள்ளும் முன் இந்த ஆண்டு கான்ஸ் படவிழா எப்போது எனப் பார்ப்போம்.

மே 17 முதல் 20-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது ‘கான்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா’. 140 நாடுகளிலிருந்து 14,000க்கும் மேற்பட்ட திரைப்படப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இன்னபிற திரைப்பட ஆளுமைகள் பங்கெடுக்கும் இப்படவிழாவில் ‘Let’s Spook Cannes’ என்கிற தலைப்பின் கீழ் வீடியோ கேம் சினிமா உள்ளிட்ட புதுமையான உலகப் படைப்புகள் திரையிடத் தேர்வு செய்யப்படும். அதில்தான் வர்ஷா பொல்லம்மா நடித்திருக்கும் இந்தத் தமிழ் திரைப்படம் மற்றும் வீடியோ கேம் தேர்வாகி இருக்கிறது.

வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா

இந்தப் பிரிவின் நோக்கம் கேமிங் மற்றும் திரைப்படத் தயாரிப்பிற்கு உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து பரிந்துரைக்கப்படும் பல்வேறு வீடியோ கேம்களில் சிறந்த படைப்புகளைத் தேர்வுசெய்து காட்சிப்படுத்துவது.

இந்திய சினிமா மற்றும் கேமிங்கிற்கான ஒரு முக்கியமான சாதனையாக, மன்மார் கேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதுமையான அந்தத் திரைப்படம் 'இருவம்' என்று தலைப்பில் உருவாகியிருக்கிறது.

விளையாட்டு அல்லது சினிமா என்ற குறுகிய அளவில் நின்றுவிடாமல், பார்வையாளர்களையும் சினிமாவிற்குள் பங்கெடுக்க வைக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த ‘இருவம்’ இந்தியாவின் முதல் FMV (Full Motion Videos) வீடியோ கேம் திரைப்படம்.

வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா

அதாவது ‘இருவம்’ படைப்பில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் முடிவுகளை ஆடியன்ஸே தேர்ந்தெடுக்கலாம். ஆடியன்ஸ் தேர்தெடுக்கும் ஒவ்வொரு கிளைமாக்ஸும் வேண்டுகோளுக்கு இணங்க திரையில் பிரதிபலிக்கும். இக்கதையின் முடிவைத் தீர்மானிக்கப் போவதும் ஆடியன்ஸ் தான்.

ஆக, இதில் பார்வையாளர்களும் படைப்பாளிகள். இந்தப் புதுவித அனுபவத்தைத் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இப்படைப்பை உருவாக்கி யிருக்கிறார்கள்.

வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா

முதலில் மெளனப்படங்கள் பின் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணப்படம், 3D, மோஷன் கேப்சரிங் என மாறி வந்து இன்று 21-ம் நூற்றாண்டில் கதை சொல்லலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த கான்ஸ் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் ‘இருவம்’ தேர்வாகியிருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமைதான்.

இந்நேரம் இந்தப் படத்தை உருவாக்கிய படைப்பாளி யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உங்களுக்கு உருவாகியிருக்கும். ‘கெட் ஹேப்பி' என்ற ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கிய மனோஜ் அண்ணாதுரைதான் ‘இருவம்’ திரைப்பட கேமை இயக்கியிருப்பவர். சினிமா மற்றும் வீடியோ கேம் ஆகிய இருபெரும் துறையை இணைத்து, எளிய மக்களும் பயன்படுத்தும் செல்போன் குறுந்திரையில் பார்க்கும் வண்ணம் இதை உருவாக்கியிருக்கிறார்.

வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா

இதில்தான் நமது ‘லவ் ஏஞ்சல்’ நடிகை வர்ஷா பொல்லம்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொழிலன், கார்த்திக் ஜீவானந்தம் மற்றும் மனு மித்ரா ஆகியோரைக் கொண்ட மன்மார் குழு இந்த புதுமையான படத்தை லைவ் ஆக்‌ஷன் மற்றும் 3டி அனிமேஷன் மூலம் உயிர்ப்பிக்க நீண்ட கால உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அர்ஜுன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், இளையராஜா.எஸ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். திமோதி மதுகர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா

’இருவம்’ திரைப்படம் படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in