அனுமதியின்றி யானைகளை வைத்து 'வாரிசு' பட ஷூட்டிங்: 7 நாட்களுக்குள் பதில் அளிக்க விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ்

அனுமதியின்றி யானைகளை வைத்து 'வாரிசு' பட ஷூட்டிங்:  7 நாட்களுக்குள் பதில் அளிக்க விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ்

நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்பட தயாரிப்பாளருக்கு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா உட்பட பலர் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு செய்தியாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் செய்தியாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அனுமதியின்றி யானைகளைப் படப்பிடிப்பில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதே இந்த தாக்குதல் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 'வாரிசு' படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகள் கொண்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விலங்கு நல ஆர்வலர் பால்ராஜ், தமிழக காவல் துறை தலைவர், மத்திய வனத்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், அனுமதி இல்லாமல் யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தியது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in