தமிழ் சினிமாவில் எல்லோருமே தொழிலை நேசிக்கிறார்கள்!

’வள்ளி மயில்’ ஃபரியா அப்துல்லா பேட்டி
ஃபரியா அப்துல்லா
ஃபரியா அப்துல்லா

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘ஜதி ரத்னலு’ படத்தில் அறிமுகமானவர் ஃபரியா அப்துல்லா. அதில், நவீன் பொலிச்செட்டி ஜோடியாக, ‘சிட்டி’ கேரக்டரில் அசத்திய ஃபரியா, துள்ளலாக நடனமாடி தெலுங்கு ரசிகர்களின் பிரியத்துக்கு உரியவரானார். தற்போது தமிழில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ‘வள்ளி மயில்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஃபரியா, அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார். அதுசமயம் காமதேனு மின்னிதழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

ஃபரியா என்றால் என்ன அர்த்தம்? எந்த பின்னணியிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறீர்கள்?

ஃபரியா என்றால் மகிழ்ச்சிப் பிரவாகம் என்று பொருள். அம்மாதான் எனக்கு எல்லாம். எனக்கு நல்ல ரோல் மாடலும் அவர்தான். ஏழு தலைமுறைகளாக ஹைதராபாத் தான் எங்கள் பூர்விகம். சிறு வயது முதலே நடனம் பிடிக்கும், நன்றாக வரைவேன். அதனால் ப்ளஸ் ஒன்னில் ஓவியம் எடுத்துப் படித்தேன். கூடவே, நடனமும் கற்றுக்கொண்டேன்.

பத்தாம் வகுப்பு படித்தபோது ஆங்கில நாடகம் ஒன்றுக்கு அம்மா என்னை அழைத்துச் சென்றார். அதில் நடித்த நடிகர்களின் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. வீட்டுக்கு வந்ததும் நாம் ஏன் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகக்கூடாது என்று நினைத்தேன். அம்மாவிடம் எனது விருப்பத்தைச் சொன்னேன். “எதைச் செய்தாலும் முறையாகப் பயிற்சி எடுத்துக்கொள். உனது தேர்வு சரிதான். உனக்கு நடனம் நன்றாக வரும்போது நடிப்பு எளிதாக வந்துவிடும்” என்றார்.

அம்மா அப்படிச் சொன்ன அந்தக் கணமே நான் நடிகர் ஆகிவிட்டதுபோல் உணர்ந்தேன். அதன் பிறகு, காலேஜ் புராஜெக்ட் என்று பொய்சொல்லிவிட்டு, சில தியேட்டர் குழுக்களின் நாடக ஒத்திகைகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அங்கே நான் புரிந்துகொண்டது, வலிந்து வெளிப்படுத்துவது நடிப்பு அல்ல; நாம் நடிக்காமல் இருந்தாலே அதுதான் சிறந்த நடிப்பு என்று.

ஒரு படம் தான் வெளிவந்திருக்கிறது. ஆனால், நடிப்பு பற்றி இவ்வளவு பேசுகிறீர்கள்..?

அதற்கான தகுதி எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். 6 வருடம் 4 ‘மார்டன் பிளே’க்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு நாடகமும் 15 முறைக்கு மேல் மேடையேறியிருக்கின்றன. ஒவ்வொரு முறை நாடகம் நடக்கும் முதல் நாள் முழு ஒத்திகை நடக்கும். நவீன நாடகங்களில் நமது கதாபாத்திரத்தின் உடல்மொழியை, வசன உச்சரிப்பை இயக்குநர்தான் முடிவு செய்வார். ஆனால், வெப் சீரிஸுக்கோ, சினிமாவுக்கோ அதுபோன்ற ஆர்டிஸ்டிக் நடிப்பு தேவைப்படாது. நாடகத்தில் நடிப்பதில் பத்தில் ஒரு பங்கை நடித்தால் போதும். ‘ஜதி ரத்னலு’ படத்தில் அவ்வளவுதான் நடித்தேன். நடிப்புக்கு மிகவும் அவசியம் உடல்மொழியிலும் வசன உச்சரிப்பிலும் இருக்க வேண்டிய ஃப்ளோ. அதை நாடக மேடையில்தான் நான் கற்றுகொண்டேன்.

உங்கள் மணிக்கட்டில் யாருடைய பெயரைப் பச்சைக் குத்தி வைத்திருக்கிறீர்கள்?

இது பெயர் அல்ல. Veni... Vidi... Vici... என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த ஒரு லத்தீன் ‘பன்ச்’. ‘நான் வந்தேன்... பார்த்தேன்... வென்றேன்...’ என்பது இதன் பொருள். நான் வாசித்த ஒரு புத்தகத்தில் என் மனதுக்குப் பிடித்துப் போன வாசகம் இது. டாட்டு என்பது நம் உடலை அலங்கோலப்படுத்திவிடக்கூடாது. இப்போது நீங்கள் ‘இந்த டாட்டு எதற்காக?’ என்று கேட்கும்போது அதற்கு பெருமிதத்துடன் என்னால் பதில் சொல்ல முடிகிறது.

‘வள்ளி மயில்’ படத்தில், கோயில் திருவிழாக்களில் நடக்கும் தெருக்கூத்து நாடகங்களில் கதாநாயகியாக நடிப்பவராக வருகிறீர்கள் என்றும், ஊர் ஊராகப் போய் நாடகம் போட்டு பலரைக் கொலை செய்யும் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியானதே உண்மையா?

(சிரிக்கிறார்). இயக்குநரைவிட பத்திரிகையாளர்கள் தான் நல்ல கதைகளை எழுதுவார்கள் போலிருக்கிறது. கதை என்னைச் சுற்றி எழுதப்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், என்ன கதை, என்ன கதாபாத்திரம் என்று கேட்டால் சொல்லக்கூடாது என்று இயக்குநர் சுசீந்திரன் அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளார். அதை நான் இப்போதைக்கு மீற முடியாது.

‘வள்ளி மயில்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

முதலில் இயக்குநர் சுசீந்திரன் சாரிலிருந்து தொடங்குகிறேன். ஹைதராபாத்துக்கு வந்து அவர் கதை சொன்னபோது தமிழில் தான் சொன்னார். புரியாத இடங்களில் எனக்கு புரியவைக்க, தெலுங்கு தெரிந்த ஒரு உதவி இயக்குநரை அழைத்து வந்திருந்தார். அவர் கதையை விவரிக்கத் தொடங்கியதும் நான் கதைக் களத்துக்குள்போய் வள்ளி மயிலாக மாறி கதையைக் கேட்கத் தொடங்கிவிட்டேன். அந்த அளவுக்கு ரீரெக்கார்டிங் எல்லாம் வாயாலேயே வாசித்துக்கொண்டு கதை சொன்னார்.

கதை சொன்னபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் கடைசி நாள் படப்பிடிப்பு வரையிலும். அதேபோல் விஜய் ஆண்டனி சாருடன் 22 நாட்கள் நடித்தேன். சுசீந்திரனைவிட அவர் இன்னும் அடக்கமானவராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் எல்லோருமே ஹம்பிள் ஆகவும் தொழிலை நேசிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். போன வாரம் என்னுடைய பிறந்த நாள். அதற்காக புராண காலத்து வள்ளி கதாபாத்திர கெட்டப்பில் எனக்கொரு பிறந்த நாள் போஸ்டரை வெளியிட்டுக் கொண்டாடி விட்டார்கள். தமிழைப் பேசப் பேசத்தான் அது எவ்வளவு இனிமையான மொழி என்பதை உணர முடிகிறது. என்னுடைய இரண்டாவது தமிழ்ப் படத்தில் நடிக்கும்போது யாருடைய உதவியும் இல்லாமல் தமிழ் பேசக்கற்றுக்கொண்டுவிடுவேன்.

அட்டை மற்றும் படங்கள்: தீரன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in