வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ

அப்டேட்.. அப்டேட்.. என்று ஆலாய் பறந்த ரசிகர்களுக்காக சிறு படையலே தந்திருக்கிறது வலிமை படக்குழு. ‘வலிமை மேக்கிங் வீடியோ’ என்ற பெயரில் 3.03 நிமிட வீடியோவை இன்று(டிச.14) வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கேற்ப வீடியோ வெளியான தருணத்திலிருந்து அஜீத் ரசிகர்கள் அதன் கூறுகளை சிலாகித்தும், பகிர்ந்தும் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தில் இடம்பெறும் பைக் சாகசம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கிய விதமே இந்த மேக்கிங் வீடியோவில் முத்தாய்ப்பாய் இடம்பெற்றிருந்தது. இடையில் அரை நிமிடத்துக்கு, கரோனா காரணமாக விழுந்த இடைவெளியை சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ரசிகர்களின் அப்டேட் கோரும் குரல்களையும் அதில் பதிவுசெய்ய மறக்கவில்லை.

குழுவினருடனும், தனியாகவும் பைக் சாகசம் மேற்கொள்ளும் அஜித் தொடர்பான காட்சிகள், ஓடும் கனரக வாகனங்களிலும், வெவ்வேறு இடங்களில் வில்லன்களுடனான மோதல்களிலும் அஜித்தின் அதகள காட்சிகளே மேக்கிங் வீடியோவின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது. ஒரு பைக் சாகசக் காட்சியில் அஜித் விபத்துக்குள்ளாகிறார். அடுத்து நடந்தது என்ன என்பதை, திரைப்படத்துக்கு இணையான சுவாரசியத்துடன் இந்த மேக்கிங் வீடியோ சித்தரிக்கிறது. 2022 பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் என்பதை இந்த மேக்கிங் வீடியோ உறுதிப்படுத்தி உள்ளது.

இன்னும் ஒரு வாரத்துக்கேனும் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்பது குறைந்திருக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in