அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இம்முறையேனும் ஈடேறுமா?

அஜித்
அஜித்

அஜித் ரசிகர்களின் தீபாவளி, பொங்கல், காதலர் தினம்.. இன்ன பிற கொண்டாட்டங்களுக்கான தினமாக எதிர்பார்க்கப்பட்ட, வலிமை திரைப்படத்துக்கான வெளியீட்டு தினத்தை, தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக, வலிமை அப்டேட் பெயரில் அஜித் குமார் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் நடத்தி வந்த அலப்பறைகள் புத்தாண்டில் முடிவுக்கு வந்தன. 2022 பொங்கல் ரிலீஸாக, ஜன.13 அன்று வலிமை திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இiத முன்னிட்டு வலிமை திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள், அஜித் குமார் ரசிகர்களால் திருவிழாக்கோலம் பூண்டன. பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றுக்கு அப்பால் அனைத்து சமூக ஊடகங்களிலும் டிஜிட்டல் விளம்பரங்களால் அமளிதுமளியாயின. முன்னதாக வெளியான ட்ரெய்லர் மற்றும் பாடல்வரி வீடியோக்கள் யூடியூபில் புதிய சாதனை படைத்தன.

தமிழ், தெலுங்கு, கன்னடம் வரிசையில் இந்தியிலும் வலிமை வெளியாகும் என போனி கபூர் அறிவித்தார். அஜித் குமாரின் புதிய திரைப்படம் தேசம் தழுவிய படமாக வெளியாவதில், அவரது ரசிகர்களை மேலும் குதூகலத்தில் ஆழ்த்தியது. பிரதான திரையரங்குகளை வலிமை ஆக்கிரமித்ததில், இதர திரைப்படங்கள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

ஆனால், ஒமைக்ரான் பரவல் காரணமாக பொங்கலுக்கு திட்டமிடப்பட்டிருந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்க ஆரம்பித்தன. ஆனபோதும் நம்பிக்கையோடு பட வெளியீட்டு அறிவிப்பை திரும்பபெறாது போனி கபூர் அமைதி காத்தார். அஜித் ரசிகர்களும் நம்பிக்கையோடு இருந்தனர். கடைசியில், அதிகரித்த கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அறிவிப்புகளால், வலிமை திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தத்தோடு அறிவிக்க வேண்டியதாயிற்று. அஜித் ரசிகர்கள் சோகப் பொங்கல் அனுசரித்தனர்.

பிப்ரவரி மாதம் பிறந்ததும், நாடு முழுக்கவுமே கரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கல்வி நிலையங்கள் உட்பட சகலமும் பழையபடி செயல்பட ஆரம்பித்துள்ளன. இதையடுத்து மறுபடியும் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.

அவர்களுக்கான இனிப்புச் செய்தியை, இன்று காலை போனி கபூர் அறிவித்தார். அதன்படி, பிப்.24 அன்று வலிமை திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது திரையரங்குகளுக்கு நிலவும் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடுகள் இரண்டொரு வாரங்களில் ரத்தாகும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருவதால், பிப்.24 தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்குத்தானே காத்திருந்தோம் என்றபடி, கொண்டாட்ட மோடுக்கு திரும்பியிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். ட்விட்டர் ஸ்பேஸில் அஜித் ரசிகர்களின் கூடுகை அறிவிப்புகள் உடனடியாக அலையடிக்க ஆரம்பித்துவிட்டன. பிப்.14-க்காக காத்திருந்த இளவட்டங்கள் பலரும், தங்கள் காத்திருப்பை பிப்.24-க்கு மாற்றியுள்ளனர்.

ஆனால், இதில் மீண்டும் கரோனா கண்படாதிருக்க வேண்டும் என்பதும் அஜித் ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. கடலலை போல வந்துசெல்லும் கரோனா அலை எப்போது அடங்கும், எப்போது வேகமாக எழும் என்பதை கணிப்பதும் கடினமாக இருக்கிறது. இந்த வகையில், மற்றுமொரு கரோனா அலை எழுந்து தங்கள் எதிர்பார்ப்பில் மண் விழாதிருக்க வேண்டும் என்பது அஜித் ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. வலிமைக்கு வலிமை சேரட்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in