பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம், தப்பில்லை என பாடிய பாடகர்: வைரமுத்து சொன்ன அதிர்ச்சி பிளாஷ்பேக்

பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம், தப்பில்லை என பாடிய பாடகர்: வைரமுத்து சொன்ன அதிர்ச்சி பிளாஷ்பேக்

இளைஞர்களுக்காக நான் எழுதிய பாடல் ஒன்றின் ஒலிப்பதிவின் போது, “பிரியமான பெண்ணை ரசிக்கலாம்; தப்பில்லை என்பதை, பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்; தப்பில்லை எனப் பாடகர் பாடினார்” எனத் தனது பிறந்தநாள் விழா நிகழ்வில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்து தனது 70-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். தனது பிறந்தநாளையொட்டி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய வைரமுத்து, “பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படும் அறையில் சிவப்பு விளக்கு எரியும். அப்போது உள்ளே பாடகர் பாடுகிறார், பாடல்கள் ஒலிப்பதிவாகிக் கொண்டிருக்கிறது, வெளியிலிருந்து யாரும் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யும் வகையில் சிவப்பு விளக்கு எரியும். அந்த சிவப்பு விளக்கைப் பார்த்துக் கொண்டு நான் வெளியில் நிற்கிறேன். தேவா இசையில், இளைஞர்களின் சுதந்திரத்தைச் சொல்லும் வகையில் ஒரு பாட்டு எழுதியிருந்தேன்.

‘கிளியின் சிறகை கடன் கேட்கலாம்; தப்பில்லை. கிளிங்டன் வீட்டில் பெண் கேட்கலாம்; தப்பில்லை. பிரியமான பெண்ணை ரசிக்கலாம்; தப்பில்லை’ எனப் பாடல் வரிகளை எழுதியிருந்தேன். இந்த பாடலை ஒரு வட இந்தியப் பாடகர் பாடிக் கொண்டிருந்தார். பாடகர் உள்ளே பாடுவது எனக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்குத் தமிழ் வரலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தது. ‘பிரியமான பெண்ணை ரசிக்கலாம்; தப்பில்லை’ என்பதை, ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்; தப்பில்லை’ எனப் பாடினார். என்னால் இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கதவை ஓங்கித் தட்டினேன். என் தமிழைக் காப்பாற்றுவது மட்டுமில்லாமல், தமிழர் பண்பாட்டையே காப்பாற்ற வேண்டியிருக்கிறதே என்று ஓடினேன். அதற்குள் தேவா உள்ளே சென்று கவிஞருக்குத் தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா எனச் சொல்லி அவருக்கும் புரிய வைத்தார். உதித் நாராயணன்தான் அந்த பாடகர். நல்ல பாடகர். கள்ளம் கபடம் இல்லாதவர். பாவம் அவருக்கு மொழி தெரியாததால் இந்த தவறு நடக்க இருந்தது. இப்படித்தான் தமிழைக் காப்பாற்றி வருகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in