‘தடை உடை’: வைரமுத்து ட்வீட்டும் வலம் வரும் சர்ச்சைகளும்!

‘தடை உடை’: வைரமுத்து ட்வீட்டும் வலம் வரும் சர்ச்சைகளும்!

நடிகர் பாபி சிம்ஹா நடிக்கவிருக்கும் படத்துக்கு, கவிஞர் வைரமுத்து ‘தடை உடை’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டுக்கு கங்கை அமரன், சின்மயி ஆகியோர் எதிர்வினையாற்றியிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

இந்தப் படம் குறித்து சமீபத்தில் ட்வீட் செய்த வைரமுத்து, ’பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்திற்கு ’தடை உடை’ என்று பெயர் வைத்தேன். படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தேன். இந்தப் படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மாலை சூட்டி மகிழ்ந்தார்கள். சின்னச் சின்னக் கொண்டாட்டங்களே வாழ்க்கை’ என்று அதில் பதிவுசெய்திருந்தார்.

இந்தப் பதிவிற்கு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், இது குறித்து கங்கை அமரன் தனது சமூக வலைதளத்தில் ’கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம், கண்ணன் நடுவினிலே’ என்று கிண்டலாகப் பதிவுசெய்திருந்தார்.

இதேபோல் வைரமுத்துவின் பதிவை பாடகி சின்மயியும் ரீட்வீட் செய்திருந்தார். அதில், தமிழ்த் திரையுலகம் வைரமுத்துவுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருவதாகக் கூறியிருக்கும் சின்மயி, ‘தமிழ்நாட்டின் திரைத் துறையில் ஐசிசி (புகார் குழு) அமைக்கப்பட வாய்ப்பே இல்லை என்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை' என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in