தாதாசாகேப் பால்கே விருது... கண்கலங்கிய வஹீதா... நெகிழ்ச்சி வீடியோ!

வஹீதா ரஹ்மான்
வஹீதா ரஹ்மான்

இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவதே `தாதாசாகேப் பால்கே விருது’. அது, இந்தாண்டு பழம்பெரும் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

85 வயதாகும் பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான் நம்ம, தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டில் பிறந்தவர். நடனம் மற்றும் நடிப்பின் மீது பேரார்வம் கொண்ட இவர் எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தின் மூலம் தன் முதல் சினிமா பயணத்தைத் தொடங்கியவர். இப்படம் 1956ம் ஆண்டு வெளியானது. ஆனால், தெலுங்கில் இவர் பணியாற்றிய அக்கினேனி நாகேஸ்வர ராவின் 'ரோஜூலு மராயி' படம் இதற்கு முன்பே 1955ம் ஆண்டில் வெளியாகிவிட்டது.

நடனக் கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்த இவர், அபாலே குரு தத் இயக்கிய 'Pyaasa' எனும் பாலிவுட் படம் மூலம் கதாநாயகியாக வலம் வரத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்துப் புகழையும், விருதுகளையும் குவித்தார்.

1971ல் வெளியான 'ரேஷ்மா அவுர் ஷெரா' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். மேலும், மத்திய அரசு இவருக்கு 'பத்மஸ்ரீ' மற்றும் 'பத்ம பூஷண்' விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது.

இந்தியில் பல படங்களில் நடித்து இந்தியத் திரைத்துறை வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தமிழில் 'விஸ்வரூபம்2' படத்திலும் கமல்ஹாசனின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பை கமல்ஹாசனே பாராட்டினார்.

தேசிய விருது விழாவில்...
தேசிய விருது விழாவில்...

நடிகை வஹீதா ரஹ்மான் கடந்த 1974ம் ஆண்டு ஷாஷி ரேகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்த நிலையில் காதல் உண்டாகி அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்த வஹீதா ரஹ்மான் கடந்த 2000ம் ஆண்டு கணவரின் இறப்புக்கு பின்னர் அவர் மும்பை சென்றுவிட்டார். தற்போது அவர் மும்பையில் தான் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் சாவித்திரி, சரோஜா தேவி, பானுமதி, சௌகார் ஜானகி போன்ற புகழ்பெற்ற ஹீரோயின்கள் போல், பாலிவுட்டின் பல்துறை கதாநாயகிகளில் ஒருவராக கருதப்படுகிறார் வஹீதா ரஹ்மான். கலைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது பெறும்போது கண்கலங்கியபடியே மேடை ஏறிய வஹீதாவின் நெகிழ்ச்சியான வீடியோவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in