‘அப்பத்தா’ பாடலில் ‘கங்னம் ஸ்டைல்’ காட்டும் வடிவேலு

’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
‘அப்பத்தா’ பாடலில் ‘கங்னம் ஸ்டைல்’ காட்டும் வடிவேலு

லிரிக் வீடியோவுக்கு பதிலாக முழு பாடல் வீடியோவையும் வெளியிட்டு வடிவேலு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.

லைகா தயாரிக்க வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை திரைப்படம் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. பெரும் இடைவெளிக்குப் பின்னர் பிரதான வேடத்தில், தனது முத்திரை வசனங்கள் மற்றும் நடிப்பில் வடிவேலு தோன்றுகிறார். மீம்ஸ்களில் அதிகம் பகிரப்படும் வடிவேலு பாணி வசனங்களை உருவாக்கி, அவரது தனித்துவ நகைச்சுவைக்கு களம் அமைத்து தந்த சுராஜ் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ விரைவில் திரையரங்களில் தரிசனம் தர இருப்பதை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. வடிவேலு சொந்தக் குரலில் பாடி ஆடும் ‘அப்பத்தா’ பாடலை வெளியிட்ட லைகா நிறுவனம், ’இதோ சர்ப்ரைஸ்.. லிரிக் வீடியோக்கு பதில் இதோ முழு பாடல் வீடியோவையும் விருந்தளிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. துரை, அசல் கோளார் ஆகியோர் எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையமைத்த அப்பத்தா பாடலை வடிவேலு பாடியுள்ளார். பிரபுதேவா இசையமைத்த அப்பத்தா பாடலுக்கான நடன அசைவுகள் பலவும் தென்கொரியாவை சேர்ந்த ’சை’ பாணியில் அமைந்திருந்தன.

’கங்னம் ஸ்டைல்’ வீடியோவில் ’சை’
’கங்னம் ஸ்டைல்’ வீடியோவில் ’சை’

பத்தாண்டுகளுக்கு முன்னர் தனது ’கங்னம் ஸ்டைல்’ பாடல் மூலமாக தமிழகத்திலும் தனி ரசிகர்களை பெற்றவர் ’சை’(Psy). அண்மையில் ’பிடிஎஸ்’ குழுவின் சுகா உடன் சேர்ந்தும் ஆல்பம் வெளியிட்டு தனது ரசிகர்களை சை மகிழ்வித்துள்ளார். இவரது பிரத்யேக நடன அசைவுகளில் நகைச்சுவை தோய்த்து, பிரபுதேவா வடிவமைத்தவாறு ’அப்பத்தா’ பாடலில் வடிவேலு அட்டகாசம் செய்திருக்கிறார். பாடல் முழுக்க ரசிகர்களால் வெகுவாய் ரசிக்கப்பட்ட வடிவேலுவின் பிரபல வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ’அப்பத்தா’ பாடல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in