பழைய காமெடியில் மீண்டும் மிரட்டிய வடிவேலு: வெடித்துச் சிரித்த நடிகை!

பழைய காமெடியில் மீண்டும் மிரட்டிய வடிவேலு: வெடித்துச் சிரித்த  நடிகை!

நடிகர் வடிவேலு, தான் நடித்த காமெடி காட்சியை ’சந்திரமுகி 2’ படப்பிடிப்பில் மீண்டும் செய்ததை பிரபல நடிகை உட்பட பலர் ரசித்தனர்.

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 'சந்திரமுகி'. இதில், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, வினித், சோனு சூட் உட்பட பலர் நடித்திருந்தனர். வித்யா சாகர் இசை அமைத்திருந்தார். கடந்த 2005-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது.

இதன் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாகவும், நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் கரோனா காலகட்டத்தில் அறிவித்திருந்தார், இயக்குநர் பி.வாசு. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் விலகியதால், லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மரகதமணி இசையமைக்கிறார். வடிவேலு, நடிகை ராதிகா, ரவிமரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு மைசூரு அரண்மனையில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. லாரன்ஸ், ராதிகா, வடிவேலு நடிக்கும் காட்சிகள் இங்கு படமாகி வருகின்றன.

இந்தப் படப்பிடிப்பு தளத்தில் ’சுறா’ படத்தின் தனது காமெடியை வடிவேலு மீண்டும் செய்தார். அந்தப் படத்தில் சங்கீத வித்வான், வெண்ணிற ஆடை மூர்த்தி பாடிக்கொண்டிருக்கும்போது, முன் வரிசையில் அமரும் வடிவேலு, முதலில் அவர் பாடலை ரசிப்பார். பிறகு ஹைபீச்சில் பாடினால், இதயம் வெடித்துவிடும் என்பது போல சைகை செய்வார். இந்த காமெடி காட்சி மிகவும் பிரபலமான ஒன்று.

இந்தக் காட்சியைதான் நடிகர் வடிவேலு, படப்பிடிப்பில் மீண்டும் செய்தார். அதைப் பார்த்து நடிகை ராதிகா, லாரன்ஸ் மற்றும் அங்கிருந்த சிலர் வெடித்து சிரிக்கின்றனர். இந்த வீடியோவை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in