‘அப்பத்தா’ பாடல் யாருக்கான எசப்பாட்டு?: ‘கோளார்’ மூலம் வெடிக்கும் வடிவேலு

‘அப்பத்தா’ பாடல் யாருக்கான எசப்பாட்டு?: ‘கோளார்’ மூலம் வெடிக்கும் வடிவேலு

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில், தனது திரைப்பயணத்தின் புதிய கணக்கை தொடங்கி இருப்பதோடு, பழைய கசப்பு கணக்குகளையும் பழி தீர்த்திருக்கிறார் வடிவேலு என்பதுதான் லேட்டஸ்ட் கோலிவுட் களேபரம்.

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வழியாக மாஸ் ரீ-எண்ட்ரி தருகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் நகைச்சுவை ட்ராக்குகளுக்கு பெயர்பெற்ற சுராஜ் இயக்கத்தில், வடிவேலு மீண்டும் கதாநாயகனாக தோன்றும் இந்த திரைப்படம் திரைக்கு முன்னேயும் பின்னேயும் எதிர்பார்ப்புகளை எகிற விட்டிருக்கிறது. ரசிக எதிர்பார்ப்புகளை மேலும் கிளறும் விதமாக அண்மையில் அந்த திரைப்படத்தின் முதல் சிங்கிளாக ’அப்பத்தா’ பாடல் வெளியானது.

வழக்கமான லிரிக் வீடியோவாக அல்லாது, முழு பாடலையும் படக்குழு வெளியிட்ட விதமும் ஆச்சரியம் அளித்தது. ’ரசிக எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய லிரிக் வீடியோ போதாது; அதனால் முழு வீடியோவையும் வெளியிடுகிறோம்’ என்று பட நிறுவனம் விளக்கமெல்லாம் கொடுத்தது. அப்பத்தா பாடல் வரிகளை ஊன்றி கேட்டவர்களுக்கே பின்னர் அதன் பின்னணி புரிந்தது. எம்ஜிஆர், ரஜினி காந்த் என திரையுலகை கட்டி ஆண்ட உச்ச நட்சத்திரங்கள் பாணியில் பாடல் வரிகளில் தனிப்பட்ட சேதிகள் பலவற்றையும் பரிமாறச் செய்திருந்தார் வடிவேலு.

சந்தோஷ் நாரயணன் இசையில், பிரபுதேவா வடிவமைத்த நடன அசைவுகளுடன், வடிவேலு சொந்தக் குரலில் பாடி ஆடும் அப்பத்தா பாடல் யூடியூபில் ஹிட்டும் அடித்திருக்கிறது. பாடல் வெளியான இரண்டே நாளில் 6 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. அப்பத்தா பாடலின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ரியாக்‌ஷன் வீடியோ என யூடியூப் வீடியோ கிரியேட்டர்கள் தனியாக பார்வைகளை அள்ளி வருகின்றனர். மொழி தெரியாதவர்கள்கூட அப்பத்தா நடன அசைவுகளை வலையேற்றி சிலாகிக்கின்றனர். இவற்றுக்கு மத்தியில் தாமதமாகவே அப்பத்தா பாட்டின் வரிகளில் பொதிந்திருந்த மறைபொருள்கள் பொதுவெளியில் புலப்பட ஆரம்பித்தன.

விஜய் டிவியின் நடப்பு சீஸன் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்து, சக பெண் போட்டியாளர்களிடம் வரம்பு தவறியதாக பார்வையாளர்களின் கண்டனத்துக்கு ஆளானவர் ’அசல் கோளார்’. சுயமாக இவர் பாடும் கானா பாடல்களின் பிரபல்யம் காரணமாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவரை, தங்களது வாக்களிப்பின் வாயிலாக பார்வையாளர்களே வெளியே அனுப்பினர். இந்த அசல் கோளார், துரை என்பவருடன் இணைந்து எழுதிய அப்பத்தா பாடல் வரிகள் நெடுக வடிவேலுக்கான ’கோளாறும்’ கோர்த்து விடப்பட்டிருக்கிறது.

வைகைப்புயலை வம்பிழுத்தவர்கள், முடக்க முயற்சித்தவர்கள், சுயம்புவாக மீண்டது, தனது தனிப்பட்ட இயல்புகள் என பலதையும் கலந்து, வடிவேலுவின் மனக்கொந்தளிப்பையும் அப்பத்தா பாடல் வெளிப்படுத்தி இருக்கிறது. பாடல் வரிகளில் பொதிந்திருக்கும் பொடி எவருக்கானது, அது எந்த பிரச்சினைய சுட்டுகிறது என்றெல்லாம் விவாதங்கள் கூடியிருக்கின்றன. ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கு வடிவேலு மேற்கொண்ட ஒப்பந்தம் சிக்கலில் விழுந்ததில் ரெட் கார்டுக்கும் ஆளானார். இது தவிர வடிவேலுவை வலிய வளைத்த தேர்தல் பிரச்சாரம், வடிவேலு இடத்தை நிரப்ப அவரை நகலெடுக்கும் நடிகர்கள், மீண்டும் அவரை சினிமாவில் நுழைய விடாது சதிராடிய பெரும் லாபி.. என சகலத்துக்கும் சூடு வைத்திருக்கிறார் வடிவேலு.

அப்பத்தா பாடலின் தொடக்கம் கதையோட்டத்தில் அமைந்த போதும், அதற்கடுத்த வரிகள் அனைத்தும் கதைக்கும், நிஜத்துக்குமாய் ஊடுபாவுகின்றன. ’டாக்ஸ்’ என்ற வார்த்தையெல்லாம் கதைக்கு உகந்ததென்றாலும், வடிவேலு மனக்குமுறலுக்கு வடிகாலாகவும் வெளிப்பட்டிருக்கின்றன. சர்ச்சைக்கு ஆளாகி இருக்கும் அப்பத்தா வரிகளில் சில இங்கே:

’கால்வைக்கும் இடமெல்லாமே கண்ணி வெடி

காண்ட்ராவெர்சியை தாண்டினேன் பிளான் பண்ணி

சராசரி லைஃப் வாழ அயம் நாட் ரெடி

சர்வைவ் பண்ண தேடிக்கிட்டேன் தனி வழி

நான் உண்டு என் வேலை உண்டு என இருந்தேன்

டாக்ஸால அந்த வேலையையும் இழந்தேன்’

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in