ஷங்கரின் சகவாசமே இனி வேண்டாம்: வைகைப் புயல் வடிவேலு

வடிவேலு
வடிவேலு

இயக்குநர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ திரைப்பட பிரச்சினையில் சிக்கிய நகைச்சுவை நடிகர் வடிவேலு, தொடர்ந்து எந்தப் படத்திலும் நடிக்க முடியாமல் போனது. தயாரிப்பாளர் சங்கம் சார்பாக அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. கடந்த 10 ஆண்டுகளில் வெறும்6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் வைகைப் புயல் வடிவேலு.

தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கவுள்ள ‘நாய் சேகர்’ திரைப்படத்தில், வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது, இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை சுராஜ் மற்றும் வடிவேலு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தனர்.

வடிவேலு
வடிவேலு

வடிவேலு அளித்த பேட்டியில், “இந்த மாதிரி துன்பத்தை யாரும் அனுபவிக்க முடியாது. வைகைப் புயலான என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயல் அடித்துவிட்டது. தூக்கமே வராத நோயாளி ஒரு மருத்துவரை அணுகியபோது, அவர் அருகே நடக்கும் சர்க்கஸ் சென்று பபூன் செய்யும் கோமாளித்தனத்தைப் பார்த்தால் மன பாரம் இறங்கி நல்ல ரிலாக்சேஷன் கிடைக்கும். தூக்கம் நல்லா வரும்னு சொன்னார். அதற்கு அந்த நோயாளியோ அந்த பபூனே நான்தான் என்று சொன்னார். அந்த மாதிரி என் வாழ்க்கை ஆகிவிட்டது” என்றார் வடிவேலு. மேலும் அவர் பேசுகையில், “எனக்கு வாழ்வு கொடுத்தது லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரன். எனக்கு மட்டுமல்ல மக்களுக்கும் அவர் நல்லது செய்துள்ளார். என் பயணம் இனி நகைச்சுவைப் பயணமாகவே இருக்கும். கடைசிவரை மக்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பேன். தமிழக முதல்வருக்கும் என் மனமார்ந்த நன்றி. அவரைப் பார்த்த நாள்முதல் எனக்கு எல்லாம் நல்லதே நடக்கிறது. சீக்கிரம் படங்களில் நடிக்க வேண்டும் என முதல்வர் கூறியதை மறக்க முடியாது.

என்னை முடக்க நினைத்தவர்களுக்கு நான் சொல்வதெல்லாம்... எனக்கு எண்டே கிடையாது. பத்தாண்டுகளில் 6 படங்களில் நடித்தேன். இடைப்பட்ட காலத்தில் கால்வைத்த இடமெல்லாம் எனக்குக் கண்ணி வெடியாக இருந்தது. என் மீது கூறப்பட்ட அனைத்துப் புகார்களும் பொய். எனக்கு ரெட் கார்டு போட்டதாகச் சொன்னதும் பொய்யே. இனி ஷங்கர் ஏரியா பக்கமே போகமாட்டேன். அந்த சகவாசமே வேண்டாம். இனி வரலாறு சம்பந்தப்பட்ட படங்களிலும் நடிக்கமாட்டேன். அரசியலில் நடிப்பதைவிட மக்கள் விருப்பப்படி திரையில் நடிப்போம் என வந்துவிட்டேன். எதிர்காலத்தில் அரசியலில் வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. நான் மீண்டும் நடிக்க வருவதை அறிந்து நிறைய அழைப்புகள் வருகிறது. ‘சந்திரமுகி-2’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. லாரன்ஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் என்னை அழைத்துப் பேசியுள்ளார்கள். என் சம்பந்தப்பட்ட மீம்ஸ்களை உருவாக்கிய மீம் க்ரியேட்டர்கள் உலகத்துக்கே நகைச்சுவை கொடுத்துள்ளனர். உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. இப்போதைக்கு சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன் வெப் சீரிஸ் எதிலும் நடிக்கவில்லை. நண்பன் விவேக் இறந்தது பெரிய இழப்பு. தற்போது அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பவேண்டிய பொறுப்பையும் கடவுள் எனக்கு வழங்கியுள்ளார்” என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வடிவேலு பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in