தனுஷுடன் நடிப்பதில் பெருமைப்படுகிறேன்

‘வாத்தி’ சம்யுக்தா மேனன் பேட்டி
சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனன்

மலையாள திரையுலகில் சம்யுக்தா அறிமுகமாகி ஆறே ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள்ளாக மலையாளத்தின் முன்னணிக் கதாநாயகர்களான டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், ஜெயசூர்யா, பிருத்வி ராஜ் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்திருக்கிறார். தமிழில், 2018-ல் ‘களரி’ படத்தில் அறிமுகமாகி, அடுத்து ’ஜூலைக் காற்றில்’ படத்தில் நடித்தவர், தற்போது 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், தனுஷ் ஜோடியாக ‘வாத்தி’ பான் இந்தியப் படத்தில் மீண்டும் தன் வருகையை அழுத்தமாகப் பதிந்திருக்கிறார். இனி, காமதேனு மின்னிதழுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி...

உங்களைப் பற்றி காமதேனு வாசகர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்..?

பாலக்காட்டில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் நன்றாகவேப் பேசுவேன். +2 முடித்த பிறகு பி.ஏ எக்கனாமிக்ஸ் முடித்தேன். சிறு வயது முதலே அதிகமாக சினிமா பார்த்ததால், சினிமாவில் நடிக்க வேண்டும், பெரிய ஸ்டார் ஆகவேண்டும் என்பது என் கனவாகிப்போனது. விரும்பியது கிடைத்ததிலும் அதைத் தக்க வைத்துக்கொண்டதிலும் என்னை நினைத்து நானே பெருமைப்படுகிறேன்.

சொந்தக் காலில் நிற்கும் பெண்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் அப்படிப்பட்ட ஒரு பெண்தான். எமோஷனல் கேரக்டர் என்னுடையது. கொஞ்சம் துடுக்கும், நிறையத் துணிச்சலும் கொண்டவள். அதற்காக அசட்டுத் துணிச்சல் என்று நினைத்துவிட வேண்டாம். எதையும் மனதுக்குள் பூட்டி வைத்துக்கொள்ளமாட்டேன். எல்லோரையும் சமமாகப் பார்ப்பேன்; அப்படியே பழகுவேன். எல்லோரையும் சமமாக நடத்துகிறவர்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவ்வளவுதான் நான்.

மலையாளத்தில், ஜெயசூர்யாவுக்கு ஜோடியாக நீங்கள் நடித்து, கடந்த ஆண்டு வெளியான ‘வெள்ளம்’ பரவலாகப் பேசப்பட்டது. உங்கள் நடிப்பும் பாராட்டப்பட்டது. ஆனால், படம் தோல்வி அடைந்தது. அதில் உங்களுக்கு வருத்தம் ஏதும் உண்டா?

எப்படியில்லாமல் இருக்கும்? குடி மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையான குடும்பத் தலைவனால் ஒரு குடும்பம் எப்படிச் சிதைந்துபோகிறது, அவனுடைய மனைவி எந்தக் கட்டத்தில் கணவனைப் பிரிந்து தன்னுடைய தற்சார்பு வாழ்க்கையைத் தொடங்குகிறாள் என்பதை, உண்மையான ஒரு மனிதரின் வாழ்க்கையை ஆய்வு செய்து திரைக்கதை எழுதி அந்தப் படத்தை இயக்கியிருந்தார் பிரஜேஷ் சென்.

ஜெயசூர்யா சேட்டன் ‘வெள்ளம்’ முரளி என்கிற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார். முரளியின் மனைவி சுனிதாவாக நான் நடித்திருந்தேன். என்னுடைய நடிப்புக்கு நிறைய பாராட்டுகள். மிகச்சிறந்த விமர்சனங்கள் வந்தன. ரியல் கேஸ் ஸ்டடி மூலம் உருவான திரைக்கதையைக் கேட்டதுமே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், நானும் அதுபோன்ற பாதிப்பை கடந்து வந்திருக்கிறேன். இதற்குமேல் விரிவாக அதுபற்றி நான் பேச விரும்பவில்லை.

இயக்குநர் ஆய்வு செய்த உண்மைக் கதையுடன் தொடர்புடைய அந்த போதை அடிமை மனிதரின் மனைவியை, அதாவது உண்மையான சுனிதாவை நான் நேரில் சந்தித்தேன். அவரைச் சந்தித்தபோது அவருடைய தன்னம்பிக்கை எனக்கு அவ்வளவு உற்சாகத்தைக் கொடுத்தது. ‘வெள்ளம்’ மாதிரியான படத்தை சொசைட்டி புறக்கணிக்கிறது என்றால், சிக்கல் சொசைட்டியில்தான் இருக்கிறதே தவிர, ‘வெள்ளம்’ படத்தில் இல்லை. மிக ‘என்கேஜிங்’ ஆன படம் அது.

ஒரே நேரத்தில் சீரியஸ் ரோலிலும் இன்னொரு பக்கம் கமர்ஷியல் கதாநாயகியாகவும் நடிக்கும்போது என்ன கற்றுக்கொண்டீர்கள்?

மலையாளத்தில் நான் நடித்த மூன்றாவது படம் ‘லில்லி’. அதில்தான் நடிப்பின் நுட்பங்களைக் கற்றுகொண்டேன். அந்தப் படத்தில் எனது நடிப்பைப் பார்த்துதான் டோவினோ தாமஸுடன் ‘தீ வண்டி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. ‘லில்லி’ படத்தில் நடித்து முடித்தபின் அந்தக் கேரக்டரின் பாதிப்பு வீட்டுக்கு வந்த பிறகும் என் மண்டைக்குள் ஓடிகொண்டே இருந்தது. அப்போதுதான் ஒரு முடிவு செய்தேன். படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறும்போது எனது கதாபாத்திரத்தின் மனநிலையை ‘செட்’டிலேயே காஸ்ட்டியூமை கழற்றி வைப்பதுபோல் கழற்றி வைத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று. இப்போது அதற்குப் பழக்கப்பட்டு விட்டேன்.

‘தீ வண்டி’யில் ‘லிப் லாக்’ முத்தக் காட்சியில் நடித்தது சிரமமாக இருந்ததா? அதுபோன்ற காட்சிகள் சினிமாவுக்கு அவசியம்தானா?

அந்தப் படத்தில், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது அந்த முத்தம் என்று நீங்கள் படம் பார்க்கும்போது உணர்ந்தீர்கள்தானே? ஒரு செயின் ஸ்மோக்கர் காதலுக்காக, காதலிக்காக, மனைவிக்காக அதை விடும்போது, பெண் எவ்வளவு மகிழ்ச்சியானவளாக, புத்துணர்ச்சி கொண்டவளாக மாறிவிடுகிறாள். கதையில் முக்கிமான பகுதியாக முத்தக்காட்சி இருந்தால் யார் நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் நடிக்க நான் தயார்.

தமிழில் உங்கள் தொடக்கப் படங்கள் சரிவர உங்களுக்குக் கைகொடுக்கவில்லை. இப்போது தனுஷுடன் ‘வாத்தி’ எப்படி உணர்கிறீர்கள்?

‘களரி’, ‘ஜூலைக் காற்றில்’ நல்ல தொடக்கம்தான். ஆனால், இன்று சிறு படங்கள் முற்றிலும் புதிதாக இல்லாவிட்டால் கவனத்தை ஈர்க்க முடிவதில்லை. அந்தப் படங்களுக்கும் அதுதான் நடந்தது. இப்போது கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். இரண்டு முறை தேசிய விருதுபெற்றவர் தனுஷ். அவருடன் நடிப்பதில் பெருமைப்படுகிறேன். ஹைதராபாத்தில் நாளை படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்போதைக்கு ‘வாத்தி’ பற்றி இவ்வளவுதான் சொல்ல முடியும்.

‘பீம்லா நாயக்’ என்ற தெலுங்குப் படத்தில் பவன் கல்யாண் உடன் நடித்திருக்கிறீர்களே..?

ஆமாம்! தெலுங்கு சினிமாவின் ‘லீடர்’ பவண் கல்யாண் உடன் ‘ஸ்கீரின் ஸ்பேஸை’ பகிர்ந்து கொண்டதில் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ‘அய்யப்பனும் கோஷியும்’ மலையாளப் படத்தின் தெலுங்கு ரீமேக் அது. அதில் ராணாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். தெலுங்கில் எனக்கு அழகான தொடக்கம் என்பேன். கரோனா காரணமாக சங்கராந்திக்கு வெளியாக வேண்டிய படம் பிப்ரவரிக்கு தள்ளிப்போயிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in