
‘வாலி’ பட வழக்கில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நேரில் ஆஜராகி சாட்சியம் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாலி’. இந்தப் படத்தின் வெற்றி நடிகர் அஜித்தின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக அமைந்தது. இந்தப் படத்தின் இந்தி உரிமையை பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் பெற்றுள்ளார்.
இதை எதிர்த்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்திருந்தார். ஆனால் கதை, அதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்.ஜே. சூர்யா வழங்கவில்லை என்றும் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி கடந்த 2021ம் ஆண்டில் உயர்நீதிமன்றம் போனி கபூர் இந்தி ரீ மேக்கை துவங்க இடைக்கால அனுமதி வழங்கியது.
இதனை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்ஆர் ஷா முன்னிலையில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற விசாரணையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றுக்கூறி எஸ்ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான வழக்கு தொடர்பாக, நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி கின்ஸ்லி கிறிஸ்டோபர் முன் நேரில் ஆஜராகி, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா சுமார் இரண்டரை மணி நேரம் சாட்சியம் அளித்தார். குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.