‘நான் ஒன்றும் அப்பாவிப் பெண் அல்ல குட்டித் தம்பி!’ - கிரிக்கெட் வீரருடன் மோதும் ’லெஜண்ட்’ நடிகை

‘நான் ஒன்றும் அப்பாவிப் பெண் அல்ல குட்டித் தம்பி!’ - கிரிக்கெட் வீரருடன் மோதும் ’லெஜண்ட்’ நடிகை

பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா. சில இந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழில், 'லெஜண்ட்’ படத்தின் நாயகியாக நடித்துள்ளார். இவரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தும் காதலித்துவருவதாக கடந்த சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுதெலா சமீபத்தில் அளித்த பேட்டியில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், தன்னைச் சந்திக்க பல மணி நேரம் காத்திருந்ததாகத் தெரிவித்தார். இது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அளித்த பேட்டியில், ‘வாராணசியில் நடந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லி சென்றேன். அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது, ஆர்பி (ரிஷப் பந்த்) என்னைச் சந்திக்க வந்திருந்தார். ஆனால், உடல் சோர்வு காரணமாகத் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்தபோது அவர் எனக்கு 17 முறை ஃபோன் செய்திருப்பது தெரியவந்தது. எனக்காக அவர் பல மணி நேரம் காத்திருந்தார். மற்றவர்கள் என்றால், கண்டுகொள்ள மாட்டேன். ஆர்பி மீது மரியாதை இருந்ததால், அவரிடம் பேசி மும்பை வரும்போது சந்திப்போம் என்றேன். அங்கு சந்தித்தோம். அதற்குள் இந்த விஷயங்கள் ஊடகங்களில் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன’ என்று நடிகை ஊர்வசி ரவுதெலா கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், 'அற்பப் புகழுக்காகவும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பதற்காகவும் சிலர் நேர்காணல்களில் பொய் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். பின்னர் அடுத்த 7 நிமிடங்களுக்குள் அதை நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஊர்வசி ரவுதெலா, 'குட்டித் தம்பி! நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்கள். அவதூறு செய்ய நான் ஒன்றும் அப்பாவி பெண் அல்ல. உங்கள் விளம்பரத்துக்கு அமைதியான பெண்ணைப் பயன்படுத்த வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in