’நம் சமூகத்தை சீரழித்துவிட்டோம்! - நடிகை ஊர்மிளா வருத்தம்

’நம் சமூகத்தை சீரழித்துவிட்டோம்! - நடிகை ஊர்மிளா வருத்தம்

’பிரார்த்தனையை எச்சில் துப்புவது என்று நினைக்கும் அளவுக்கு சமூகத்தைச் சீரழித்துவிட்டோம்’ என்று நடிகை ஊர்மிளா மடோன்கர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பாடகி லதா மங்கேஷ்கர் (92), கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 6) மரணம் அடைந்தார். இதையடுத்து நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முழு அரசு மரியாதையுடன் அவர் உடல், மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஷாருக்கான், பூஜா, ஊர்மிளா
ஷாருக்கான், பூஜா, ஊர்மிளா

இந்தி நடிகர் ஷாருக்கானும் அவர் மானேஜர் பூஜா தத்லானியும் லதா மங்கேஷ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது நடிகர் ஷாருக்கான், துஆ வாசிப்பது போலவும் பூஜா வணங்குவது போலவும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு, இதுதான் மத நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டு என்றக் கருத்துக்களோடும் இணையவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இதற்கிடையே, நடிகர் ஷாருக் கான் முகக்கவசத்தை விலக்கி காற்றில் ஊதுவது போல பாவனை செய்ததை, அவர் சிதையில் எச்சில் துப்பியதாகக் கூறி சிலர் சர்ச்சையை கிளப்பினர். இதற்கு அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை ஊர்மிளா மடோன்கரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவர், “பிரார்த்தனை செய்வதை எச்சில் துப்புவது என்று நினைக்கும் அளவுக்கு சமூகத்தைச் சீரழித்துவிட்டோம். சர்வதேச மேடைகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நடிகர் பற்றி விமர்சனம் செய்கிறீர்கள். இன்றைய அரசியல், கேவலமான நிலையை எட்டியிருக்கிறது. இதுபோன்ற விமர்சனங்கள் வருத்தத்தைத் தருகின்றன” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in