56 ஆண்டுகளாக ’நெஞ்சிருக்கும் வரை’ தித்திக்கும் திரைப்படம்!

‘முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்!’
ஸ்ரீதரின் ‘நெஞ்சிருக்கும் வரை’
ஸ்ரீதரின் ‘நெஞ்சிருக்கும் வரை’

காதலையும் அதன் அடர்த்தி மற்றும் ஆழத்தையும் விதம்விதமாகச் சொன்னவர் புதுமை இயக்குநர் ஸ்ரீதர். ஸ்ரீதரின் பல படங்கள் நம்மை ஏதோ செய்யும். என்னவோ பண்ணும். அப்படி நம்மைத் தூங்கவிடாமல், துக்கித்துக் கிடக்க வைத்ததுதான் ‘நெஞ்சிருக்கும் வரை’ திரைப்படம்.

ரகுராமனும் பீட்டரும் நண்பர்கள். பசி என்பது மூன்று வேளையும் வரும் என்றாலும். இவர்களுக்கு உணவு மூன்று நாட்களுக்கு ஒருவேளைதான் கிடைக்கும். பாரம் சுமக்கும் வண்டி இழுக்கும் இவர்களில், பீட்டர் மயங்கிச் சரிகிறான். நெஞ்சு வலியால் அவதிப்படுகிறான். நண்பனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அவன் வயிற்றுக்கும் சேர்த்து உழைக்கிறான் ரகு.

எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழுவது போல் இருக்கிறது வீடு. அந்த வீட்டை தனக்கும், மகளுக்கும் வைத்துக்கொண்டு, இன்னொரு போர்ஷனை ரகுவுக்கும் பீட்டருக்கும் வாடகைக்கு விடுகிறார் அந்தப் பெரியவர். ஆனால், வயிற்றுக்கே ‘இழுத்துக்கோ பறிச்சிக்கோ’ என்றிருக்க, வாடைகை பாக்கியோ ஏறிக்கொண்டே போகிறது. அவரும் திட்டிக்கொண்டே இருக்கிறார். பெரியவரின் மகள் ராஜிதான், அவர்களுக்கு எப்போதும் அன்பைக் கொடுக்கிறாள். எப்போதாவது சோறு கொடுக்கிறாள்.

ராஜியின் மீது ரகுவுக்குக் மெல்ல அரும்புகிறது காதல். ஆனால் சொல்ல தைரியமில்லை. தெருமுனையில் நான்கைந்து ரவுடிகள் ராஜியிடம் சேட்டை செய்ய, ரகுவை துணைக்கு அழைக்கிறாள். குறிப்பிட்ட இடம் வரை துணைக்கு வர, ‘’இனிமே உங்க வழில நீங்க போங்க, என் வழில நான் போயிக்கிறேன். இனி எனக்கு பயமில்லை’’ என்கிறாள் ராஜி. அந்த ‘வி’ வடிவிலான திசையில் இருவரும் நடந்துசெல்கிறார்கள். இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

அப்போதுதான் ரயிலடியில் சிவாவைச் சந்திக்கிறான் ரகு. அவனின் நேர்மைகுணமும் உண்மைத்தன்மையும் பிடித்துப் போகிறது ரகுவுக்கு. ‘’சொத்துபத்தெல்லாம் இருக்கு. கேஸ் நடந்துக்கிட்டிருக்கு. கேஸ்ல ஜெயிச்சாத்தான் என் வாழ்க்கை. அதுவரைக்கும் வேலைக்குப் போகலாம்னுதான் சென்னைக்கு வந்தேன்’’ என்கிறான். அவனை, தன்னுடன் சேர்த்துக்கொண்டு, தன் குடியிருப்பிலேயே அடைக்கலம் கொடுக்கிறான் ரகு.

ராஜிக்கும் சிவாவுக்கும் பார்த்தமாத்திரத்திலேயே பூக்கிறது காதல். அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்கும் போது வழக்கம் போல் துணைக்கு வரக் கேட்கிறான் ரகு. ஆனால், ‘’இன்னும் சாப்பாடு ரெடியாகலை’’ என்று பொய்சொல்கிறாள் ராஜி.

பிறகு ரகு கிளம்பிச் சென்றதும் சிவாவிடம் சென்று துணைக்கு அழைக்கிறாள். அந்த ‘வி’ வடிவ தெருக்கள் பிரியும் இடத்தில் வேறுவேறு திசைக்குப் பயணிக்கும் வேளையில், ‘’என் கூட முழுசா வரமாட்டீங்களா?’’ என்கிறாள் ராஜி. ‘’எதுவரைக்கும்’’ என்று கேட்கிறான் சிவா. ‘’இந்த ஜென்மம் முடியறவரைக்கும்’’ என்று சொல்லி நாணுகிறாள். சிவா புரிந்துகொள்கிறான். இந்தக் காதலை ரகுவிடம் சொல்ல, அவன் ஆத்திரம் அடைகிறான். பிறகு இருவரும் பரஸ்பரம் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து, அந்தக் காதலுக்கு உதவுகிறான். தன் காதலை அப்படியே விழுங்கி விடுகிறான்.

ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை
ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை

இந்த நிலையில், கோர்ட் தீர்ப்பு சாதகமாக வருகிறது சிவாவுக்கு. சொத்து கிடைக்கிறது. அதற்காக ஊருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வந்து ராஜியை அழைத்துச் செல்வதாகச் சொல்லிச் செல்கிறான் சிவா. இந்தநிலையில், ராஜியின் அப்பா இறக்கிறார். அந்தத் தருணத்தில், ‘’எனக்கு மகன் ஸ்தானத்துல நீ இருந்து, அவளை உன் தங்கச்சியா நினைச்சு, அவளை வாழவைக்கணும்’’ என்று சத்தியம் வாங்கி இறக்கிறார். நண்பன் சிவாவும் இன்றைக்கு வருவான், நாளைக்கு வருவான் என்று காத்திருக்கிறான். காத்திருக்கிறார்கள். நடுவே, நெஞ்சுவலியால் அவதிப்படும் நண்பன் பீட்டரும் இறந்துபோகிறான்.

சொத்து வந்ததும் சில வேலைகளை முடுக்கிவிட்டு, சென்னைக்கு வருகிறான் சிவா. ஆனால், இங்கேயோ ராஜியையும் ரகுவையும் தப்பாக இணைத்து கேலிச் சித்திரம் வரைந்து வைத்திருக்கிறது சமூகம். எனவே கோபத்துடன் திரும்பிச் செல்கிறான். இதனிடையே, ராஜியை அழைத்துக் கொண்டு, சிவாவைப் பார்க்கச் செல்கிறான் ரகு. ‘திருமணம் செய்துகொள்’ என்கிறான். ‘முடியாது’ என மறுக்கிறான் சிவா. அவனை அடித்து, மிரட்டி, பணியவைக்கிறான். வேறு வழியில்லாமல், அரைமனதுடன் கல்யாணம் பண்ணிக்கொள்கிறான்.

வி.கோபாலகிருஷ்ணன், சிவாஜி, முத்துராமன்
வி.கோபாலகிருஷ்ணன், சிவாஜி, முத்துராமன்

ஆனால் ரகுவையும் ராஜியையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறான். குத்திக்காட்டிப் பேசுகிறான். ரகுவை, வீட்டுக்கே வரக்கூடாது என்கிறான். சிவா குடிக்கிறான். தன்னிடம் வேலை பார்ப்பவரின் தங்கையின் அழகில் சொக்கிப் போகிறான். அதைப் பயன்படுத்தி, சொத்துகளை தன்வசப்படுத்த வேலைபார்ப்பவன் திட்டம் போடுகிறான்.

ஆசை ஆசையாகக் காதலித்தவனைக் கல்யாணம் செய்த ராஜிக்கோ நிம்மதியே இல்லை. குடியும் சல்லாபமுமாக இருக்கும் கணவனைப் பார்த்து நொந்து கதறுகிறாள் ராஜி. இதைத் தெரிந்த ரகு, சிவாவிடம் நியாயம் கேட்க, அவன், ‘’என் மனைவிக்கும் உனக்கும்தான் தொடர்பு இருக்குதே... எல்லாம் தெரியும் எனக்கு’’ என்று சொல்ல, எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காத சிவாவின் மனதை மாற்ற, தன் உயிரையே கொடுக்கிறான் ரகு. பிறகுதான் புரிந்துகொள்கிறான் சிவா. ராஜியையும் சேர்த்துக்கொள்கிறான். இதுதான் ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் சாராம்சம்!

ரகுவாக சிவாஜி. சிவாவாக முத்துராமன். ராஜியாக கே.ஆர்.விஜயா. ராஜி அப்பாவாக வி.எஸ்.ராகவன். பீட்டராக வி.கோபாலகிருஷ்ணன். சிவாவின் மேனேஜராக மாலி. அவரின் தங்கையாக கீதாஞ்சலி. அவ்வளவுதான் கதாபாத்திரங்கள்.

வங்க நாடகமான ‘சுதா’ தாக்கத்தில் இருந்து ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் கதையை ஸ்ரீதரும் சித்ராலயா கோபுவும் உருவாக்கினார்கள். ‘காதலிக்க நேரமில்லை’, ‘வெண்ணிற ஆடை’ போல இதை வண்ணப்படமாக எடுக்காமல், கறுப்பு வெள்ளைப்படமாக எடுத்தார் ஸ்ரீதர். இந்தப் படத்தின் முக்கால்வாசி இருட்டாகத்தான் இருக்கும். வறுமையின் குறியீடாக இப்படிக் கையாண்டார்.

அதுமட்டுமா? சிவாஜி, கே.ஆர்.விஜயா, வி.கோபாலகிருஷ்ணன், முத்துராமன் முதலானோருக்கு மேக் அப்பும் போடாமலே படமெடுத்தார். படம் முழுக்க கிழிந்த சட்டையும் சாதாரண ரப்பர் செருப்புமாக வலம் வந்து, இயல்பான நடிப்பை வழங்கி நம்மை உருக்கிவிடுவார் சிவாஜி.

'எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு’ எனும் வைர வரிகள் கொண்ட ‘நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்’ என்ற பாடல் படமாக்கப்பட்ட விதம், ரொம்பவே பேசப்பட்டது.

’நெஞ்சிருக்கும் வரை’ சிவாஜி, முத்துராமன்
’நெஞ்சிருக்கும் வரை’ சிவாஜி, முத்துராமன்

மவுண்ட் ரோடு, எல்ஐசி, மெரினா பீச் சாலை, காந்தி சிலை, உழைப்பாளர் சிலை முதலான பகுதிகளில், சிவாஜி, முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன், மூவரும் பங்கேற்கும் அந்தப் பாடல் அழகுறப் படமாக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஷாட்டும் பிரமிக்கவைக்கும். என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு ரம்மியமாக இருந்தது.

மற்ற எல்லாப் பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதினார். ’எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ என்ற பாடலை பி.சுசீலா பாடினார். ’நினைத்தால் போதும் ஆடுவேன்’ என்ற பாடலை ஜானகி பாடினார். ’கண்ணன் வரும் நேரம் இது’ என்ற பாடலை பி.சுசீலா பாடினார். ‘முத்துக்களோ கண்கள்’ பாடலை யாரால்தான் மறக்கமுடியும்?

ஒரு மரம், கொஞ்சம் மணல் மேடு, ஒரு உடைந்த படகு, இருட்டு, மேக் அப் இல்லாத சிவாஜி, கே.ஆர்.விஜயா. பாடல் முழுக்க இந்த இடங்கள் மட்டுமே மாறிமாறி வரும். ‘சந்தித்தவேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை’ என்று ஹைபிட்ச்சில் டி.எம்.எஸ். நம்மை சிந்திக்கவிடாமல் செய்திருப்பார். ‘ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன’ என்று பி.சுசீலா தன் பங்குக்கு நாணத்தையும் வெட்கத்தையும் குழைத்திருப்பார். இன்றைக்கும் பலரின் காலர் டியூன் பாடல் இது! ’நரைகூடிக் கிழப்பருவமெய்தியிருந்தாலும்’ காதல் நினைவு முத்துக்கள், கண்களில் பனிக்கும்!

‘பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்ற இன்னுமொரு பாடலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. டி.எம்.எஸ்.குரலும், கவியரசரின் வரிகளும் மெல்லிசை மன்னரின் இசையும், நடிகர்திலகத்தின் பாந்தமான நடிப்பும், யார் வீட்டுக் கல்யாணத்துக்குச் சென்றாலும் இந்தப் பாட்டு மனசுக்குள் முணுமுணுக்கச் செய்துவிடும். கல்யாணப் பத்திரிகையையே பாடல் வரிகளாக்கியிருப்பார் கவியரசர்.

கோபத்திலும் ஸ்டைலாக... சிவாஜி
கோபத்திலும் ஸ்டைலாக... சிவாஜி

’நிகழும் பார்த்திப ஆண்டு/ ஆவணித் திங்கள் இருபதாம் நாள்/ திருவளர் செல்வன் சிவராமனுக்கும்/ திருவளர் செல்வி ராஜேஸ்வரிக்கும்/ நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து/ வாழ்த்தியருள வேண்டுகிறேன்/ தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன் ரகுராமன் ரகுராமன்/’ என்று பத்திரிகையை வாசித்துப் பாடுவார்.

கல்யாண வீடுகளில், யாரேனும் ஒருவர், டி.எம்.எஸ். போல் குரலெடுத்து இந்தப் பாடலைப் பாடுவார். அப்போது அவரையும் அறியாமல் சிவாஜியாகிவிடுவார். பலரின் கல்யாண கேசட்டுகளில் இந்தப் பாடலும் இசையும் வீடியோ எடிட்டர் கோத்திருப்பதை ரிலாக்ஸாக தூசுதட்டி போட்டுப்பாருங்கள். ‘பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்பதற்கு இணையான பாடல் இல்லை இன்று வரை அமையவே இல்லை!

1967ம் ஆண்டு, மார்ச் மாதம் வெளியானது ‘நெஞ்சிருக்கும் வரை’. படம் வெளியாகி, 56 ஆண்டுகளாகின்றன. ‘அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?/ வாழைத்தோரணம் மேளத்தோடு பூஜை செய்வதென்ன?’ என்கிற ‘முத்துக்களோ கண்கள்’ பாடலை கேட்கக் கேட்க, இனிப்பின் சுவையானது கூடிக்கொண்டேதான் இருக்கும். 'பூ முடித்தாள் இந்த பூங்குழலி/ புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி/ என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி/ அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி/ கண்ணில் நீரெழுதி/ கண்ணில் நீரெழுதி... என்று ’நெஞ்சிருக்கும் வரை’ இந்தப் பாடலின் ஆழ அடர்த்தியை உள்வாங்கி ரசித்துக்கொண்டேதான் இருப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in