வெளிச்சம் பெறாத மின்மினிகள்

அரிய பாடல்கள்... அறியாத குரல்கள்!
வெளிச்சம் பெறாத மின்மினிகள்

நம் மனதுக்கு நெருக்கமான மனிதர்களின் முகங்கள், அவ்வப்போது மனதில் நிழலாடுவது போலத்தான் இசையும். நமக்குப் பிடித்தமான பாடல்கள் மனதுக்குள் வந்து வந்துபோகும். தொலைதூரப் பயண நேரங்கள், மனம் நொந்த தருணங்கள் அப்பாடல்கள் நமக்கு அருமருந்தாக இருக்கும்.

மன அழுத்தம் நிறைந்தவர்களுக்கு இசையைக் கொண்டு மருத்துவம் செய்யும் அளவுக்கு, வெளிநாடுகளில் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. தமிழில் எத்தனையோ அற்புதமான பாடல்களைத் தந்த டாக்டர் கல்யாண், வெளிநாட்டில் தற்போது அந்த வேலையில் ஈடுபட்டுள்ளார் என்பதை நினைக்கும்போது மனம் மகிழ்ச்சியடைகிறது. நீண்ட நாளுக்குப் பின் நண்பனைக் கண்டதுபோல, சில பாடல்களை நாம் கண்டடைவது உண்டு. இது எந்தப் படம், யார் பாடியது என்ற குழப்பமும் அப்போது ஏற்படும். அதாவது, அந்த நண்பனின் பெயரை நினைவில் கொண்டுவர எத்தனிப்பதற்கான முயற்சியைப் போல. அப்படி ஒரு பாடலைத்தான் சமீபத்தில் கண்டடைந்தேன்!

எனக்குத் தெரிந்து தமிழ் இசைப்பரப்பில் அதிக பாடகர், பாடகியரை அறிமுகம் செய்து வைத்தவர்கள் சங்கர்- கணேஷ் தான்.

இலங்கை வானொலியில் ஒரு காலத்தில் கேட்ட பாடல். பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடியதாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், விஜயபாஸ்கர், இசைஞானி இளையராஜா ஆகியோர் பிரபலமாக இருந்த காலத்திலேயே சங்கர்- கணேஷ் இரட்டையர்கள் வழங்கிய ஏராளமான பாடல்கள் புகழ் பெற்றவை.

எனக்குத் தெரிந்து தமிழ் இசைப்பரப்பில் அதிக பாடகர், பாடகியரை அறிமுகம் செய்து வைத்தவர்கள் சங்கர்- கணேஷ் தான். அவர்கள் அறிமுகம் செய்துவைத்த பல பாடகர்கள், பாடகிகள் தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் புகழ்பெற்ற படைப்பாளிகளாக மாறியிருக்கிறார்கள். சிலர் அடையாளமே இல்லாமல் தொலைந்தும்போயிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர், நான் கேட்ட பாடலும் ஒரு அரிதான குரல்தான். சங்கர் - கணேஷ் இசையில் இப்படியெல்லாம் படங்கள் வந்தனவா என்று தேடவேண்டிய நிலையிருக்கிறது. ஏனெனில், குறைந்த பட்ஜெட் படங்களில்கூட மிக அற்புதமான பாடல்களை அவர்கள் வழங்கியுள்ளனர்.

1980-ம் ஆண்டு, கோவிந்தன் இயக்கத்தில் வெளியான படம் ‘நிஜங்கள் நிலைக்கின்றன’. இப்படத்துக்கு, சங்கர்- கணேஷ் வழங்கிய பாடல்கள் இசைக்கொடை என்றே சொல்லலாம். இப்படத்தில் தமிழின் மிகச்சிறந்த டூயட் பாடலை அவர்கள் வழங்கியுள்ளனர்.

‘பார்வையோ உன்னிடம்
லால லா லால லா
போகுமோ வேறிடம்
லால லா லால லா
நீ நடக்கும் பாதையிலே
என்றும் செல்லும் எந்தன் பாதம்
உன்னைத் தேடியே...’

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய இந்த வரிகளைப் பாடியவர்கள், என்.வி.ஹரிதாஸ், வாணி ஜெயராம். பாடல் முழுவதும் வழிந்தோடும் சந்தோஷம் மிகுந்த ஹம்மிங் நம் மனதைத் தாலாட்டும். இந்தக் குரலைத்தான் ஜெயச்சந்திரன் குரல் என்று நீண்ட நாட்கள் நினைத்திருந்தேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடல், தமிழின் ஆகச்சிறந்த குரல்வளம் கொண்ட கலைஞர் பாடியது. குடியில் விழுந்த கோபுரம் அவர். இயக்குநர் மகேந்திரனின் ‘மெட்டி’ படத்தில், ‘சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே’ பாடிய கே.பி.பிரம்மானந்தம்தான் அந்த மகத்தான கலைஞன்.

‘நிஜங்கள் நிலைக்கின்றன’ என்ற படத்தின் பெயரை நீங்கள் உச்சரிக்கும்போது, இனி பிரம்மானந்தத்தை நினைக்காமல் இருக்க முடியாது. எஸ்.பி.சைலஜாவுடன் இணைந்து அவர் பாடிய அந்தப் புகழ்பெற்ற பாடல்:

‘துள்ளுது துள்ளுது உள்ளங்கள் துள்ளுது
பொங்குது பொங்குது எண்ணங்கள் பொங்குது
மாலை அந்திவேளை ஆகாயமே நானல்லவோ
மேகம் நீயல்லவோ....
துள்ளுது துள்ளுது உள்ளங்கள் துள்ளுது...’

குயிலின் இனிமையோடு இப்படியான குரல்களைக் கேட்கும்போது, வயது இளைத்துப்போகிறது என்பது உண்மைதான். கிட்டத்தட்ட அந்தக் காலத்துக்கே நம்மை இந்தப் பாடல் அழைத்துச் செல்கிறது. இந்தப் பாடலும் கவிஞர் முத்துலிங்கத்தின் கற்பனைதான்.

படத்தின் தயாரிப்பாளரோ, படத்தின் இயக்குநரோ புதிதாகச் சிலரைப் பாட வைப்பதுண்டு அல்லது அவர்களே பாடுவதுண்டு. அப்படியான சமாச்சாரங்கள் சங்கர் - கணேஷ் இசையிலும் நடந்துள்ளன. 1992-ல் மோகன்குமார், கலைச்செல்வி, செந்தில், செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் நடித்த படம் ‘சகலகலா வாண்டுகள்’. இந்தப் படத்தில் மலேசியாவைச் சேர்ந்த ஓமேரோ அறிமுகமானார். பாடல்களை பஞ்சு அருணாசலம், முத்துலிங்கம், கங்கை அமரன் எழுதினர். ஜுபிடர் செல்வகுமார் இயக்கிய இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியான வி.எம்.சொர்ணராஜா ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

‘வேலுப்பய மனசுக்குள்ளே
விஷயம் ஒண்ணு இருக்குது
அதே வெளிப்படையாக
சொல்ல வேளை நெருங்குது...’

இந்தப் பாடல் யாருக்கு என நினைக்கிறீர்கள்? நகைச்சுவை நடிகர் செந்திலுக்குத்தான். குழுவினருடன் வி.எம்.சொர்ணராஜா பாடிய இந்தப் பாடல், படத்தில் எதற்காக வைக்கப்பட்டது என்று நொந்து போகும் அளவுக்குக் காட்சிகள் அபத்தமாக எடுக்கப்பட்டிருக்கும்.

தேசப்பற்று படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் அர்ஜுனின் ஆரம்பகாலப் படங்களில் அவருக்கு இரவல் குரல்தான். எஸ்.என்.சுரேந்தர்தான் பல படங்களில் அர்ஜுனுக்குப் பின்னணி பேசியிருப்பார். ஆனால், அந்த அர்ஜுனையே பாடவைத்த பெருமை சங்கர் - கணேஷ் இரட்டையர்களுக்கு உண்டு.

1995-ல் பிரிதிவிராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘முதல் உதயம்’. அர்ஜுன், சுமா ரங்கநாத் நடித்த இப்படத்துக்கு சங்கர் - கணேஷ் இசையமைத்தனர்.

அர்ஜுன் மற்றும் குழுவினர் பாடிய பாடலிது.

‘ராசி நல்ல ராசி ஊரும் பேசும்
என்னோடு ராசி எல்லாமே ஈசி
தொட்டாலும் பட்டாலும்
பொன்னாகும் பாரு’

தமிழைக் கடித்துப் பேசிப் பழக்கப்பட்ட அர்ஜுன், இந்தப் பாடலை அழகாகவே பாடியிருக்கிறார். அர்ஜுன் என்றவுடன் நடிகை சுலக்சனாவையும் சங்கர் - கணேஷ் பாடவைத்தது நினைவுக்கு வருகிறது.

1983-ம் ஆண்டு ரகு இயக்கத்தில் சுரேஷ், சுலக்சனா நடிப்பில் வெளியான படம் ‘புத்திசாலி பைத்தியங்கள்’. காமெடி கலந்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், பிரசன்னா என்ற பாடகருடன் இணைந்து சுலக்சனா பாடியுள்ளார்.

'காக்கா கருப்பு ரோஜா செவப்பு
நான் தான் கண்டுபிடிச்சேன்
தண்ணியும் குளிரும் தீயோ கொதிக்கும்
தத்துவமோ சொல்லி முடிச்சேன்...’

எனப் பிரசன்னா பாடுவார். இடையில் வார்த்தைகளை மறந்து, ‘காக்கா சிவப்பு’ என்பார், ‘மக்கு அது கருப்பு’ என சுலக்சனா திருத்துவதுடன் சில வரிகளையும் பாடியுள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த நடிகர் சுருளிராஜனின் டைமிங் சென்ஸ் காமெடியும், அவரது உடல் மொழியும் தமிழ் சினிமாவில் அவருக்குத் தனித்த அடையாளத்தைப் பெற்றுந்தந்தது. அவர் கமிட்டான படங்களின் எண்ணிக்கை அதிகம். அவர் இறப்புக்குப் பின், 2 வருடங்கள் கழித்தும் அவர் நடித்த படங்கள் வெளிவந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவரின் கரகரப்பான குரல் போலவே குரலை மாற்றி சில படங்களில் மலேசியா வாசுதேவனும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடியுள்ளனர். ‘உப்புமா கிண்டி வையடி அடியே’ என ‘கீதா ஒரு செண்பகப்பூ’ படத்தில் மலேசியா வாசுதேவனும், ‘உல்லாச பறவைகள்’ படத்தில் ‘எங்கெங்கும் கண்டேனம்மா...’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் சுருளிராஜனுக்காக குரலை மாற்றிப் பாடியிருப்பார்கள்.

ஆனால், சுருளிராஜனையே சொந்தக்குரலில் சங்கர் கணேஷ் பாடவைத்துள்ளார். 1979-ம் ஆண்டு ஸ்ரீ மீனாட்சி இந்திரா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் ‘பால்காரி’. இந்தப் படத்தின் பாடல்களைக் கவிஞர் வாலி எழுதினார். சுருளிராஜனும், சச்சுவும் பாடுவது போன்று அமைக்கப்பட்ட இந்தப் பாடலில், எல்.ஆர்.ஈஸ்வரி சுருளியைக் கிண்டலடித்துப் பாடுவது படு தமாஷ். ‘பால்காரன் பொண்டாட்டி பட்டணத்து சீமாட்டி’ எனத் தொடங்கும் இப்பாடலில், ‘என்ன மச்சான் நீ பாடுறது அசல் கன்னுக்குட்டி கத்துற மாதிரியே இருக்கு?’ என எல்.ஆர்.ஈஸ்வரி கலாய்ப்பார். அத்துடன் சுருளிராஜன் கரகரத்த குரலைப் போலவே பாடுவார். ‘என்னாடி கிண்டலா பண்ற..?’ என்பார் சுருளி. அதாவது சச்சுவை அவர் கண்டிப்பதுபோல கண்டிப்பார். இப்படி வித்தியாசமான பாடல் சங்கர் - கணேஷ் இசையில்தான் வெளிவந்தது.

தெலுங்கில் பாடிக்கொண்டிருந்த லதா ராணியைத் தங்களது படத்தில், சங்கர் - கணேஷ் பாட வைத்தனர். 1982-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சில்க் ஸ்மிதா நடிப்பில் வெளியான படம் ‘பட்டணத்து ராஜாக்கள்’. இப்படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.என்.சுரேந்தருடன் இணைந்து லதா ராணி பாடிய இந்த பாடல் வானொலி நேயர்களுக்கு பிடித்தமானது.

‘காதல் எனும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி...
என மலேசியா வாசுதேவன் தொடங்க,

‘சொல்லாமலே நான் செய்கிறேன்
கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி...’

என எஸ்.என்.சுரேந்தர் பாடுவார். ஆனால், இப்பாடல் முழுவதும் ‘ம் ம் ம் லா லா லா ஆஹாஹா ம் ம் ம்’ என அழகான ஹம்மிங்கை மட்டும் லதா ராணி வழங்கியிருப்பார். ரசிக்கவைத்த குரலுக்குச் சொந்தக்காரர் இவர்.

‘ஏன்டி முத்தம்மா’ பாடலைப் பாடிய இசையமைப்பாளர் சந்திரபோஸின் குரலை, அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அவரைப் போலவே ஒருவர் பாடல் பாடியிருக்கிறார் என்றால், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

1979-ம் ஆண்டு ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிரமிளா நடிப்பில் வெளியான படம் ‘ஜெயா நீ ஜெயிச்சுட்டே’. இந்தப் படத்தில்தான் சந்திரபோஸ் வாய்ஸில் ஒருவர் பாடியுள்ளார். ஆனால், மிக வேகமான தாளக்கட்டுடையது இந்த பாடல்.

‘எதிலே இல்லை கணக்கு இனி எண்ணிப்பாரு

உனக்குள் புதுப்புது கணக்கு தெரியும்
உன் புத்தியைத் திட்டு புரியும்...’

ஸ்ருதி விலகாமல் மிக அழகாக இந்த பாடலைப் பாடிய பாடகர் சக்திதாஸ். சங்கர் - கணேஷ் இசையில்தான் இந்த பாடல் வெளிவந்தது. இந்தப் படத்தில் ‘ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வகையில் ஏமாளி’ என்ற பாடலை கணேஷ் பாடியுள்ளார்.

பத்மஸ்ரீ டி.எம்.சௌந்தரராஜன் போல பாட முயன்று தோற்றுப் போனவர்கள் நிறைய பேர் உண்டு. அதற்கு உதாரணம் அவரது மகன் டி.எம்.எஸ்.செல்வகுமாரும்தான். அவர் 1984-ம் ஆண்டு சங்கர் - கணேஷ் இசையில் ‘இதயம் தேடும் உதயம்’ படத்தில் எஸ்.பி.சைலஜாவுடன் இணைந்து ஒரு டூயட் பாடல் பாடினார். ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தது போன்ற தாளம்.

‘செவ்வந்தி சேலையில் பௌர்ணமி பொன்மயில்
மின்மினி வீதியில் வந்தால் மேகம் தேராக தென்றல்
பின் செல்ல தேவி வந்தாள் தேவனின் தோள் சேர...’

ஆனாலும், டிஎம்எஸ் குரலில் இருந்த கம்பீரம் இவரிடம் காணவில்லை. ஏ.டி.அல்லிராஜன் தயாரித்து இயக்கிய படம் ‘மனம்விட்டு பேசுங்கள்’. இப்படத்தில் சங்கர் - கணேஷ் இசையில் ஒரு அற்புதமான பாடல் இருக்கிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்தப் பாடல் முழுவதும் ஒரு பெண்ணின் குரல் சிரிப்பு, நடிப்பு, கொஞ்சல் என கேட்கவே வித்தியாசமாக இருக்கும்.

‘ஏம்மா டாக்டர் ஏதோ மேட்டர்
உன்னோடு நான் பேச வந்தேனே
உன்னைப் பார்க்கையில் உடல் கொதிப்பதென்ன
மனம் துடிப்பதென்ன சொன்னாலே ஆகாதோ...’ என
எஸ்பிபி கேட்க ‘நோ’ என்று ஒற்றை வார்த்தையில் பாட்டைத் தாங்கும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், பாடகி ரமணி. சங்கர் - கணேஷ் குரலில் பல பாடல்களைப் பாடியவர் இந்தப் பாடகி.

இவரைப் போன்றே இன்னொரு பாடகி ஹேமலதா. சங்கர் - கணேஷ் இசையில் சில பாடல்களைப் பாடியுள்ளார். பிரபு இயக்கத்தில் ‘ரோஜா மலரே’ (இது முரளி நடித்த படமல்ல!) படத்தில் ஹேமலதா பாடிய ‘ராசா நில்லு இது ரோஸா’, ‘உம்மேலே ஆசைதான்’ பாடல்களுக்கு சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இசை வழங்கியுள்ளனர்.

இசைஞானி இசையில் ‘சின்னக்குயில் பாடுது’ படத்தைப்பற்றி அறிந்தவர்கள், சங்கர் கணேஷ் இசையில் வெளியான ‘வண்ணக்குயில்’ படத்தை அறிந்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

இந்தப் படத்தில் மனோ பாடிய அற்புதமான பாடல் இடம் பெற்றுள்ளது. அவருடன் இணைந்து பாடிய பாடகி தமிழில் மிக முக்கியமானவர். அவர் பெயர் ரஞ்சனி. அவரும், மனோவும் இணைந்து பாடிய அந்த பாடல்,

‘ஆயிரம் தாமரை ஊர்வலம் போகின்ற நேரம்

ஆனந்த ராகத்தில் நான் தருவேன் ஒரு கீதம்...’

சங்கர் - கணேஷ் வழங்கிய அழகிய டூயட் பாடலிது. குழந்தைக் குரல் என்றால், எம்.எஸ்.ராஜேஸ்வரிதான் எல்லோருடைய ஞாபகத்துக்கும் வரும். இதன்பின், கலர் படங்களில் எஸ்.ஜானகி குழந்தையைப் போல குரலை மாற்றிப் பாட ஆரம்பித்தார். இப்படி ஒரு மழலைக் குரலுக்குச் சொந்தக்காரர்தான் இந்த டூயட் பாடலைப் பாடிய ரஞ்சனியும்.

பேபி ஷாம்லிக்குப் போட்டியாக பேபி ஸ்ரீதேவி நடித்த படம் ‘தெய்வக்குழந்தை’. செந்தில்நாதன் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இந்தப் படத்தில் குட்டியானை ஒன்று நடித்தது.

‘விநாயகர் பாரு வித்தை காட்டுவாரு...
ஐந்து பத்து காசு போடுங்க எல்லோரும்
ஆனை குட்டி ஆட்டம் பாருங்க...’
என்ற பாடலை பேபி ஸ்ரீதேவி பாடுவது போன்று காட்சியமைக்கப்பட்டிருக்கும். அவருக்குக் குரல் கொடுத்து பாடியவர்தான் ரஞ்சனி. இதே படத்தில் ‘முத்து முத்து மாரியாத்தா’ பாடலையும் அவர் குழுவினருடன் இணைந்து பாடியுள்ளார். இதே படத்தில் குழந்தை குரலில் எஸ்.ஜானகி பாடிய ‘ஆனாவும் ஆவனாவும் சொல்லித்தந்தீங்க’ என்ற பாடலும் உள்ளது.

1992-ம் ஆண்டு ராம.நாராயணன் இயக்கத்தில் பேபி ஷாம்லி நடித்த படம், ‘தேவர் வீட்டுப் பொண்ணு’. விஜயகுமார், சுருதி, நிழல்கள் ரவி நடித்த இந்தப் படத்துக்கு சங்கர் - கணேஷ் இசையமைத்தனர்.


‘தேவரய்யா... தேவரய்யா
எங்கள் தெய்வம் தேவரய்யா
பசும்பொன் பெத்தெடுத்த தங்கம்மய்யா
பயமே கண்டறியா சிங்கம்மையா...’

என்று குழந்தை குரலில் பாடியதும் ரஞ்சனிதான். ஆனால், இவர்தான் பாடினார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

எந்தப் பாடலுக்கு யாரை அழைக்க வேண்டும் என்ற மிகச் சிறந்த இசையறிவு உள்ள இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ்.

குறைந்த பட்ஜெட்டில் வெளியான படங்களில் நிறைவாக சங்கர்- கணேஷ் இசையமைத்த படம் என்று பட்டியலிட்டால், ‘நீதி தூங்காது’ படம் அதில் சேரும். மிக அழகான கர்னாடக இசையை அவர்கள் வாரி வழங்கியுள்ளனர்.

‘கண்ணா உன்னை நினைத்தேன் கண்டு ரசித்தேன்
உந்தன் மனதில் நான் இல்லையோ...
மன்னா உன்னை பார்த்தேன் மனம் மகிழ்ந்தேன்
உந்தன் கனவில் நான் வரவில்லையா?’

இந்த அழகிய பாடலைப் பாடியவர் குமாரி கிரிஜா. இப்படி தமிழ் சினிமாவில் ஏராளமான பாடகர், பாடகியரை உருவாக்கிய சங்கர்-கணேஷ் இரட்டையர்கள், மலையாள தேசத்தைச் சேர்ந்த பாடகிகள் பலரையும் தமிழில் பயன்படுத்தியுள்ளனர். அதில் ஒருவர் அம்பிலி. ‘கண்ணீர் பூக்கள்’ படத்தில் இவர் பாடிய ‘மாடிவீட்டு மாமா யாரைத் தேடிப் போனா’ பாடலைக் கேட்டுப்பாருங்கள். எந்தப் பாடலுக்கு யாரை அழைக்க வேண்டும் என்ற மிகச்சிறந்த இசையறிவு உள்ளவர்கள் சங்கர் - கணேஷ் என்பதை அறிவீர்கள்.

நடிகர் நாகேஷின் பல பாடல்களுக்குக் குரல் கொடுத்தவர் பாடகர் ஏ.எல்.ராகவன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே ஏ.எல்.ராகவன் குரலில் மற்றொரு பாடகர் இருந்துள்ளார். 1983-ம் ஆண்டு கோமல்சுவாமி நாதன் இயக்கத்தில் ராஜேஷ், வனிதா, ரவீந்தர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அனல்காற்று’.

கவிஞர் இளையபாரதி எழுதிய இந்தப் பாடல், சங்கீத ராணி வாணிஜெயராமின் அழகிய ஹம்மிங்கோடு தொடங்கும்.

‘பொன்னுதய தென்றலிலே
பூத்தாடும் புஷ்பங்களே
பூ இதயம் புல்லரிக்க
பூபாளம் பாடுங்களேன்...’

என்று தொடங்கும் பாடலில், இணைந்து பாடியவர் சந்திரசேகர சாண்டில்யன். அப்படியே ஏ.எல்.ராகவன் குரல் போலிருக்கிறது. சங்கர் - கணேஷ் இசையில் மிளிர்ந்த பாடலிது.

1981-ம் ஆண்டு திலக் என்ற பாடகரை, சங்கர் - கணேஷ் அறிமுகப்படுத்தினர். ‘ஒரு பூ பூத்தது’ படத்தில் அவர் தனித்துப் பாடிய ‘சித்தாடை மேலே சிலுக்குபாவாடை’ பாடல் ஆட்டம் போட வைக்கும். இதே படத்தில் டி.கே.கலாவுடன் இணைந்து அவர் பாடிய அற்புதமான டிஸ்கோ பாடல் உண்டு.

‘இதயத்திலே புதுமைகள்
இருமனத்தின் உரிமைகள்
இணைந்திடும் பறவைகள்
மலர்ந்திடுதே இனிமைகள்...’

தமிழ் சினிமாவில் நல்ல குரல் வளக்கலைஞராக அறிமுகமான திலக், அதன்பின் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

1991-ம் ஆண்டு எஸ்.பூப்பாண்டியன் இயக்கத்தில் வெளியான பக்திப் படம் ‘அம்மன் காட்டிய வழி’. அரவிந்த், கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு சங்கர் - கணேஷ் இசையமைத்தனர். இப்படத்தில் ஒரு டாக்டர் பாடல் பாடியுள்ளார். ஜெயபாரதியுடன் இணைந்து பாடிய அந்த டாக்டர் பெயர் ராமநாதன்.

‘சின்னப்பெண்ணே காத்திருக்கேன் வாடி
அலைகடல் ஓரம் வாசம் வச்சு நானும்
அடியே கிளியே வந்தால் மோகம் தீராதோ...’

எனத் தொடங்கும் கிராமத்து கீதம் இப்பாடல். ஜெயபாரதியின் குரல் அற்புதமாக இருக்கிறது. இதே படத்தில் கிராமத்து பாடகர் புதுவைபன்னீர் ராஜா மற்றும் குழுவினரை சங்கர் - கணேஷ் பாட வைத்துள்ளனர்.

‘மேட்டுக்குடி நாயகியே
திருவடையம்மா மாரியம்மா
கேட்டுக்கடி சேதியம்மா
தேடி வந்தோம் உன்னையம்மா...’

‘அங்களாம்மா...’ என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடலை ஞாபகமூட்டும் இந்தப் பாடல்.

இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்ட இத்தனைப் பாடல்களில் ஒன்றிரண்டையாவது ஏதோ ஒரு நேரத்தில் நாம் ரசித்திருப்போம். ஆனால், யார் பாடியது என்ற தேடுதல் நமக்கு இருப்பதில்லை. வானத்தில் இருக்கும் நிலவை ரசித்துப்பழகிய நமக்கு மின்மினிகளின் (நட்சத்திரங்கள்) அழகு எங்கே தெரியப் போகிறது?

கட்டுரையாளர்: எழுத்தாளர், பத்திரிகையாளர்

Related Stories

No stories found.