கலகத்தலைவன் விமர்சனம்: கவனத்துக்குரியவனா? கலகத்துக்குரியவனா?

கலகத்தலைவன் விமர்சனம்: கவனத்துக்குரியவனா? கலகத்துக்குரியவனா?

‘நெஞ்சுக்கு நீதி’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்திருக்கும் நடிகர் உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது. படம் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா?

வஜ்ரா கார்ப்பரேட் நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலையில் புதிதாக கனரக வாகனம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தும் பொருட்டு உற்பதியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த வாகனங்கள் வெளியிடும் புகை மாசு அரசு அனுமதித்தை விட அதிகம் என்ற ரகசியம் வெளியே வர நிறுவனத்துக்கு சிக்கல் வருகிறது. இதனால் வரும் பலகோடி ரூபாய் நஷ்டத்தைத் தடுக்கும் விதமாக, இது போன்ற கார்ப்பரேட் ரகசியங்களை கசியவிடும் ‘விசில் பவுலர்களை’ கண்டுபிடித்து அவர்களைத் தடுக்கவும் அழிக்கவும் அண்டர்கிரவுண்டில் நியமிக்கப்படுகிறார் ஆரவ்.

கார்ப்பரேட் நிறுவனங்களை கசியவிடுபவர் யார்? அதனால், என்ன லாபம், ரகசியங்களை கசியவிடுபவர்களை ஆரவ் கண்டுபிடித்தாரா? என்பதை பரபர திரைக்கதையுடன் ‘கலகத்தலைவன்’னாக படமாக்கி இருக்கிறார்கள்.

அத்துமீறும் கார்ப்பரேட், அதனால் பாதிக்கப்படும் கடைக்கோடி மனிதன் என்ற வழக்கமான கதையை, தன்னுடைய பரபரப்பான திரைக்கதையால் அலுப்புத் தட்டாமல் சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி. கார்ப்பரேட் அரசியல், அதற்கு துணைபோகும் அரசாங்கம், இவர்களுக்கு உதவும் அண்டர்கிரவுண்ட் மாஃபியா, இதனால் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் என பல பேச விஷயங்களைப் பேச முற்படும் கதையைப் பிரச்சாரத் தொனியாக மாற்றாமல் கேட் அண்ட் மவுஸ் திரைக்கதையாக தொய்வடையாமல் மாற்றியதில் வெற்றிப் பெற்றிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

வழக்கமாக தமிழ் சினிமாவில் இதுபோன்ற கார்ப்பரேட் முதலாளிகள் நேரடி வில்லன்களாக சித்தரிக்கப்படுவதும் அவர்களை எதிர்க்கும் கதாநாயகர்கள் என்ற ரீதியில் கதை இருக்கும். ஆனால், இதில் ஸ்மார்ட் வில்லனை கொண்டுவந்து ஹீரோவை துரத்தும் வகையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி இருப்பது படத்தின் பலம்.  

பரபர திரைக்கதையில் அலட்டிக்கொள்ளாத அளவான நடிப்புடன் அசத்தி இருக்கிறார் உதயநிதி. ஸ்மார்ட் மூவ் மூலம் வில்லனுக்கு டஃப் கொடுப்பது, வில்லன் துரத்தும் வேளையில் பத்துப்பேரை பறந்து அடிக்காமல் அவரது திருமாறன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நம்பும்படியான ஆக்‌ஷன் காட்சிகள், கதாநாயகியுடன் ஹேண்ட்பேக் சைக்காலஜி காட்சிகள் என நிறைவாக செய்திருக்கிறார்.

கதாநாயகனுக்கு இணையாக ஸ்மார்ட் வில்லனாக ஆரவ். இறுகிய உடம்பு, தெளிந்த பார்வையும், கொடூர கண்களுமாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார். வெல்டன்! படத்தின் ஓட்டத்தைக் குறைக்கும் படியாக கதையில் காதல் போர்ஷன் சில இடங்களில் துருத்திக் கொண்டிருந்தாலும் வரும் நேரங்களில் எல்லாம் அழகான நடிப்பில் திரை நிறைக்கிறார் நிதி அகர்வால். கலையரசனும் படத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

தில் ராஜ் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் கதைக்கு இன்னும் வலுவூட்டுகிறது. குறிப்பாக திருச்சி ரயில்வே ஸ்டேஷன் காட்சிகளும், க்ளைமாக்ஸூம் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையில் ஸ்ரீகாந்த் தேவா பரபரப்புக்கூட்ட, பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் ஆரோல் கரோலி பாஸ் மார்க் வாங்கி செல்கிறார்.

மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கும் கதாநாயகி கதாபாத்திரம், பெண்களிடம் ஆரவ் காட்டும் வன்முறையை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பது, படம் நெடுக வில்லனை இத்தனை ஸ்மார்ட்டாக காண்பித்து விட்டு, கதாநாயகனை வில்லன் நெருங்கும் வேளையில் டம்மி செய்வது என சில குறைகளும் இருக்கிறது. ஆனால், வழக்கமான கதையை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கிய விதத்தில் ‘கலகத்தலைவன்’னை திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in