
ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த 'லியோ' சீக்ரெட்டை அமைச்சர் உதயநிதி வெளிப்படையாக கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை(அக்.19) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, பெங்களூரு பகுதிகளிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 850-க்கும் மேற்பட்ட திரைகளில் இந்தப்படம் ரிலீஸாக உள்ளது. 'லியோ' படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்தப் படம் LCU-வில் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
படக்குழுவும் இப்போது வரை இதுகுறித்து சொல்லாமல் இதை சீக்ரெட்டாகவே வைத்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டிகளில் கூட இந்த சீக்ரெட் குறித்து உடைக்க மறுத்து விட்டார். ஆனால், இப்போது 'லியோ' படம் பார்த்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதைக் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு 'லியோ' படத்தின் ஸ்பெஷல் காட்சியைப் பார்த்துள்ளார். படம் பார்த்து முடித்த கையோடு, நள்ளிரவு 2 மணிக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தின் விமர்சனத்தை பதிவிட்டதோடு, அதில் எல்சியு என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் உதயநிதியின் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
மேலும், அந்தப் பதிவில்," விஜய் அண்ணாவின் 'லியோ' சூப்பராக உள்ளது. லோகேஷ் கனகராஜின் பிலிம் மேக்கிங் அருமை. அனிருத்தின் இசை மற்றும் அன்பறிவு மாஸ்டருக்கு பாராட்டுக்கள். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.