‘ஆர்ஆர்ஆர்’ விழா பேச்சு: உதயநிதி மீது பாயும் அஜித் ரசிகர்கள்!

‘ஆர்ஆர்ஆர்’ விழா பேச்சு: உதயநிதி மீது பாயும் அஜித் ரசிகர்கள்!

'பாகுபலி' இயக்குநர் ராஜமௌலியின், 'ஆர்ஆர்ஆர்' பட விழாவில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்எல்ஏ பேசியபோது, "பொதுவாக சினிமா தொடர்பான விழாவில் நான் பங்கேற்பதில்லை. இந்த விழாவில் நான் பங்கேற்றது ராஜமௌலி சாருக்காகத்தான். அவரது மிகப்பெரிய ரசிகன் நான். 10 வருடத்துக்கு முன்பு அவரது மகதீரா (மாவீரன்) படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் ரிலீஸ் செய்தபோது, ராஜமௌலி சார் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். ‘சத்யம் தியேட்டர் எனக்கு ரொம்ப பிடிச்ச தியேட்டர். அங்கே பெரிய ஸ்கிரீனில் எப்படியாவது மகதீராவை ரிலீஸ் செய்ய வேண்டும்’ என்று. நாங்க அப்படித்தான் செய்தோம். படம் மிகப்பெரிய ஹிட். ட்ரிபிள் ஆர் படத்தை மூணு ஏரியாவுல 'ரெட் ஜெயின்ட்' தான் ரிலீஸ் பண்ணியிருக்கோம். இந்தவாட்டி நான் சொல்றேன், 'சத்யம்' தியேட்டர்ல மொத்தம் 6 ஸ்கிரீன் இருக்கு சார். எப்படியும் 5 ஸ்கிரீன்ல இந்தப் படம்தான் போடுவோம். இந்தப் படத்தின் வெற்றி உறுதி" என்று பேசினார்.

ஏற்கெனவே, அஜித்தின் 'வலிமை' திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதேநாளில் ஆர்ஆர்ஆர் படமும் வெளியாகும் என்று அறிவித்திருப்பது சர்ச்சையானது. ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகும்போது, இன்னொரு பெரிய படத்தையும் அதே நாளில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது திரைத்துறையின் எழுதப்படாத ஒப்பந்தம். அதை மீறும் வகையில் ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிடுவதுடன், முதல்வரின் மகனே அந்தப் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிடுவோம் என்று உறுதியளித்திருப்பது, சர்ச்சையாகியிருக்கிறது.

உதயநிதியின் இந்த உறுதிமொழியை கண்டித்து, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

"யாரு படம் வந்தாலும், நாங்க தான்டா உண்மையான ஹீரோ. சத்யத்தில் 5 ஸ்கிரீன்ல வலிமையும், ஒரு ஸ்கிரீனில் ஆர்ஆர்ஆரும் வெளியாகும். அதை நீங்க பார்க்கத்தான் போறீங்க" என்றும், "அஜித் தன்னுடைய பட விழாவை நடத்துவதுமில்லை, அதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுமில்லை. ஆனால், தானாக படம் ஓடுகிறது. அதுதான் எங்கள் வலிமை. ஆர்ஆர்ஆர் மாதிரி அரசியல்வாதிகளின் சப்போர்ட் தேடுவது எங்களுக்கு வழக்கமில்லை" என்றும், "திரைத்துறையை மறுபடியும் கருணாநிதி குடும்பம் வளைத்துவிட்டதை காட்டுகிறது இந்தப் பேச்சு" என்றும் விமர்சிக்கிறார்கள் தல ரசிகர்கள்.

திமுகவினரோ, "அந்த 4 தியேட்டர் விஷயத்தை ஒரு பேச்சுக்காகத்தான் உதயநிதி சொன்னாரே தவிர, அப்படியெல்லாம் அவர் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்த மாட்டார்" என்று விளக்கம சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in