‘டான் படத்தை நிராகரிச்ச ஹீரோ யார்னு தெரியுமா?’ - சிவகார்த்திகேயனிடம் கேட்ட உதயநிதி

‘டான் படத்தை நிராகரிச்ச ஹீரோ யார்னு தெரியுமா?’ - சிவகார்த்திகேயனிடம் கேட்ட உதயநிதி

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்த படம் ’டான்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்த இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது.

இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினருக்குக் கேடயம் வழங்கும் விழா நடந்தது. இதில் லைகா நிறுவனர் சுபாஷ்கரன், சிவகார்த்திகேயன், படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அப்பா- மகன் உறவை நெகிழ்ச்சியாகச் சொன்னதால் இந்தப் படம் கண்டிப்பாக ஓடும் என்று படம் பார்த்ததும் சொன்னேன். அது நடந்திருக்கிறது. படம் வெற்றி பெற்றுவிட்டதால், சில உண்மைகளை சொல்லலாம் என நினைக்கிறேன். ’சிவா, (சிவகார்த்திகேயன்) இது வேற ஒரு ஹீரோ கதைகேட்டு நிராகரிச்ச படம், அந்த ஹீரோ யாருன்னு தெரியுமா?’ அது நான்தான். இது நான் நடிக்க வேண்டிய படம். கதை பிடித்திருந்தது. இருந்தாலும் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம், இதில் ஸ்கூல் பகுதி ஒன்று வருகிறது. அதை என்னால் நிச்சயம் பண்ண முடியாது. அதனால் மறுத்தேன். நல்லவேளை நான் பண்ணவில்லை. யார், யார் எதைச் செய்ய வேண்டுமோ அது சரியாக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸ் எமோஷன் காட்சியையும் என்னால் சரியாகப் பண்ணியிருக்க முடியாது” என்றார்.

மேலும், “லைகா நிறுவனம் சுபாஷ்கரனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் பெரிய படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ’இந்தியன் 2’ படத்தின் வேலைகளையும் விரைவில் ஆரம்பிக்கப் போகிறோம்” என்று உதயநிதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in