ஓடிடி உலா: ‘உடன்பிறப்பே’ - நெஞ்சை நீவும் நவீன பாசமலர்

ஓடிடி உலா:
 ‘உடன்பிறப்பே’ - நெஞ்சை நீவும் நவீன பாசமலர்

அண்ணன் - தங்கை பாசத்தில் நெக்குருகும் நவீன பாசமலர் காவியமே ’உடன் பிறப்பே’ திரைப்படம். திரைத் துறையில் ஜோதிகாவின் அரை செஞ்சுரிக்கான அடையாளத்துடன் அமேசான் ப்ரைம் வீடியோவில் இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி இருக்கிறது.

வேங்கைவாசல் கிராமத்தில், எடுத்ததற்கெல்லாம் அடிதடி மூலமே மக்களுக்கான நியாயத்தை நிலைநாட்டுபவர் சசிக்குமார். இவரது பாசமலர் தங்கை ஜோதிகா. தங்கையின் கணவர் (சமுத்திரக்கனி) நீதி, நியாயம், கடமை, கட்டுப்பாடு இத்தியாதிகளோடு வாழ விரும்புகிறார். மாமன் - மச்சானின் இந்த அடிப்படை குணமே குடும்பத்தின் இணக்கத்தில் குண்டுவைக்க, அண்ணன் - தங்கை பாச உறவும் துண்டாடப்படுகிறது. இரு குடும்பத்துக்கும் இடையிலான பள்ளம் தூர்க்கப்பட்டதா, பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்ந்தனவா என்பதே ‘உடன்பிறப்பே’ திரைப்படம்.

பாசமலரே...

‘பாசமலர்’ தொடங்கி ‘கிழக்குச் சீமையிலே’ வரை எத்தனை முறை அடித்துத் துவைத்தாலும் வெளுக்காதது அண்ணன் தங்கை பாசம். அதிலும் திருமணமாகி புக்ககம் போன பெண்ணுக்கு உடன்பிறப்பு மீதும் தாய்வீட்டின் மீதும் பீறிடும் பாசம் தனி ரகம். அண்ணனாக சசிக்குமார். பீடத்தைவிட்டு இறங்கி வந்த அய்யனாராக ஊரைக் காக்கிறார். ஆலமரம் அவசியமின்றி ‘ஆன் தி ஸ்பாட்’டில் பஞ்சாயத்து முடித்து தண்டனையையும் கொடுத்துவிடுகிறார். இவரது தங்கையாக நடித்திருப்பதில் நடிகையர் திலகத்துக்கான கோதாவில் தாராளமாய் முன்னிற்கிறார் ஜோதிகா. சற்றே மிகை நடிப்பாக தொனித்தாலும் உணர்வுகளை மென்றவாறு வெடித்து அழுவதில் அம்மிணி அசத்துகிறார். பத்து வீடு தள்ளி இருந்தாலும் பதினைந்து வருடம் பேசாதிருக்கும் அண்ணன் - தங்கை இடையிலான உணர்ச்சிப் போராட்டத்தையும் நம்பும்படி செய்திருக்கிறார்கள்.

உறவுத் திருவிழா

மாமன் மச்சான்கள் இயல்பில் இருதுருவமாக இருப்பினும் உறவுக்கு மரியாதை கொடுத்துப் பழகுவதும், மதிப்பதும் இன்னொரு கிராமத்து அழகு. சசிக்குமார்-சமுத்திரக்கனி ஜோடி மற்றுமொருமுறை சொல்லியடித்திருக்கிறது. சசிக்குமாரின் அதிரடி சுபாவத்தைக்கூட சகித்துக்கொள்ள முடிகிறது. எதிலும் மஞ்சள் கோடு தாண்டாத வாத்தியாராக வரும் சமுத்திரக்கனிதான் இம்சிக்கிறார். அவரது படு செயற்கையும் வறட்சியுமான அற உணர்வுகள் சில இடங்களில் சூரியின் நகைச்சுவையை மிஞ்சுகின்றன. மாமன் - மச்சான் உறவில் பிணக்கு வருவதற்கான காரணங்களும், அவை படிப்படியாய் வளர்ந்து வெடிப்பதையும் உருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். அண்ணன் - தங்கை பிரிவில் அப்படி என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பை நீட்டியிருப்பதிலும் இயக்குநரின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியும் அதன் செயற்கைத்தனங்களை மீறி கதைக்கு உதவவும் செய்கிறது.

எல்லோரும் நல்லவரே

மாமன் - மச்சான் உறவுகூட ஓகே. நாத்தி - அண்ணி உறவில்கூட அத்தனை உத்தமம் சேர்த்திருக்கிறார்கள். ஆனபோதும் மாமன் - மச்சான் உறவின் ஆழம் அதில் இல்லை. விசுவாச அல்லக்கையாக வரும் சூரிக்கும் இந்த நல்லவர் பட்டம் உண்டு. சொல்லிவைத்தது போல பாசத்திலும் விட்டுக்கொடுப்பதிலும் எல்லோரும் அத்தனை நல்லவர்களாக இருக்கிறார்கள். நகைச்சுவையில் பெரிதாய் எடுபடாத சூரிக்கு வலிய முக்கியத்துவம் தரும் காட்சிகள் துறுத்தல். சில இடங்களில் அவரது நக்கல்களும் படத்தின் போக்குக்குத் தடைபோடுகின்றன. மையப் பாத்திரங்கள் மட்டுமல்ல, வில்லனின் குடும்பத்திலும்கூட நல்லவர் வருகிறார். வில்லத்தனம் செய்வாரோ என்ற மிரட்டல் தொனியில் எட்டிப்பார்க்கும் பங்காளி வேல ராமமூர்த்தியின் கதாபாத்திரமும் இந்த நல்லவர் பட்டியலில் விதிவிலக்கல்ல. அதிலும் அதி நல்லவராக தொனிக்கும் முயற்சியில் அவரது மனைவியாக வரும் தீபா அக்மார்க் மெகா சீரியலை முன்வைக்கிறார். பாசம் நேசம் என்று ஆளாளுக்கு நெஞ்சை நீவுவது ஒருகட்டத்தில் அலுக்கவும் செய்கிறது. ஆனால், அந்த ஒற்றைக் கயிற்றில்தான் படத்தின் கதையும் அழகாக நடைபோடுகிறது.

முற்போக்கா பிற்போக்கா?

பழகிய பாத்திரத்தில் தோன்றும் சமுத்திரக்கனி வழக்கம்போல ‘பஞ்ச்'களை அள்ளி வீசுகிறார் . ஒரு பாத்திரத்தில் அவர் தோன்றினாலும், ஏனைய பாத்திரங்களும் ஆளாளுக்கு சமுத்திரக்கனியாகி கருத்துக் குத்துக்களைப் பறக்கவிடுகிறார்கள். விவசாயம், குடிநீர், உறவு, நட்பென்று முத்திரை வசனங்கள் ஏராளம். அவற்றில் ரசிக்க வைத்தபோதும் சற்று வசன முழக்கத்தைக் குறைத்து காட்சி ரீதியிலும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் தந்திருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் இரா.சரவணன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர் என்பதால் சரளமாய் முற்போக்குக் கருத்துக்களை முன்வைக்கிறார். ஆனபோதும் அந்த முற்போக்கில் ’100 நாள் வேலைத் திட்டம்’, ’படிப்பாளியைத் தேர்வு செய்வது’ என அபத்தங்களும் சேர்ந்துகொள்கின்றன. சென்டிமென்ட் கதையில் க்ரைம் பின்னணியிலான முடிச்சொன்றை இயக்குநர் லாவகமாய் செருகியிருக்கிறார். ஒரு தலைமுறைக்கு முந்தைய தமிழ் சினிமாவின் வில்லத்தனம் அதில் வெளிப்பட்டாலும் பிற்பாதியில் தொய்வடையும் கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கிறது. கலையரசன் கதாபாத்திரம் அறிமுகமாவதும் படிப்படியாய் வேறு தளங்களுக்கு தாவுவதும் தனி எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.

’ஒத்த பனை காட்டேரி...’

பின்னணி இசையில் பெரிதாய் சோபிக்காவிட்டாலும் பாடல்களில் கிறங்கவைத்துவிடுகிறார் இமான். யுகபாரதி வரிகளில் ஸ்ரேயா கோஷல் தேன் குரலில் ‘அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்’ பாட்டு தங்கைகளின் தேசிய கீதமாகப் போகிறது. இன்னும் ‘எங்கே என்’, ’ஒத்தப் பனை காட்டேரி’ என்று இமான் இன்னிசை விருந்து வைத்திருக்கிறார். சித் ஸ்ரீராம் குரலில் ‘ஒத்தப் பனை’ கேட்பதற்கு நன்றாக இருந்தபோதும் காட்சிகள் படவோட்டத்துக்கு உதவாது கடந்து செல்கின்றன. தொடக்கத்தில் வரும் காட்சிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பும் தொடர்ச்சியுமற்று சற்று சோதிக்கின்றன. வேல்ராஜின் கிராமப்புற ஒளிப்பதிவில் அத்தனை குளுமை. இளம் ஜோதிகாவைவிட மத்திம வயது ஜோ இன்னும் அழகு. பல காட்சிகளில் சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனியைவிட படத் தயாரிப்பாளரான ஜோதிகாவின் இருப்பே முன்னிறுத்தப்படுகிறது.

திரையரங்குகளில் வெளியாகி இருப்பின் சி சென்டர்களில் வரவேற்பைப் பெற்றிருக்கக்கூடிய திரைப்படம் இது. பாசத்தைக் கொண்டாடுவோர் லாஜிக்கை பார்க்காது கண்கள் கசிய கூடி ரசிப்பதற்கான திரைப்படம், ‘உடன்பிறப்பே!’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in