ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்: 17 முறை சாதனை செய்த நடிகர்திலகம்!

ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்: 17 முறை சாதனை செய்த நடிகர்திலகம்!

தமிழ் சினிமாவில் சத்தமே இல்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியவர் நடிகர் திலகமாகத்தான் இருக்கும். அவரின் ஒவ்வொரு சாதனைகளையும் அவரேதான் முறியடித்தார். இந்தக் காலம் போல், ஊடகங்களின் பெருக்கம் அதிகமாக அன்றைக்கு இருந்திருந்தால், அவையெல்லாம் ஹேஷ்டேக்குகளாகவும் டிரெண்டிங்குகளாகவும் ஆகியிருக்கும். நடிப்பின் சிகரம், பல்கலைக்கழகம், கலைத்தாயின் தவப்புதல்வன் என்றெல்லாம் கொண்டாடப்படுகிற நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மிகச் சில சாதனைகளைப் பார்ப்போமா?

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஹீரோ 100-வது படத்தை நெருங்கினார், நடித்தாரென்றால் அவர்... சிவாஜிதான். பிறகுதான் எம்ஜிஆர், ஜெமினி, ஜெய்சங்கர், சிவகுமார், கமல், ரஜினி முதலானோரின் 100-வது படங்கள் வந்தன. அந்த வகையில், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் 100 படங்களில் நடித்தவர் எனும் பெருமை சிவாஜிக்கு உண்டு. அதேபோல் சிவாஜிதான் முதன்முதலாக 200-வது படத்தில் நடித்தார்.

அதேபோல், முக்கியமானதொரு தகவல்... ஒரே நாளில், ஒரு நடிகரின் இரண்டு படங்கள் வெளியான சாதனையைச் செய்தவரும் சிவாஜிதான். பின்னர், ஜெய்சங்கர் படங்களும், கமல் படங்களும் ரஜினி படங்களும் இன்றைக்கு விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களும் வந்திருக்கின்றன. ஆனால், ஒரே நாளில் சிவாஜியின் இரண்டு படங்கள் வெளியானது ஒருமுறையோ இரண்டு முறையோ அல்ல... மொத்தம் 17 முறை வந்திருக்கின்றன.

1954-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி ‘மனோகரா’ திரைப்படம் தெலுங்கிலும் இந்தியிலும் வெளியாகி 100 நாட்களைக் கடந்து ஓடியது. இதை இரண்டு படங்களாக எடுத்துக் கொள்ளமுடியாது என்றபோதும் சிவாஜியின் திரை வாழ்வில், வேற்று மொழியிலும் கலக்கியெடுத்த படங்களாக இவை கொண்டாடப்பட்டன.

அதே வருடத்தில், ஆகஸ்ட் 26-ம் தேதி, சிவாஜிக்கு இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாகின. இரண்டுமே மறக்கமுடியாத, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படங்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’ படம் இதேநாளில் தான் வந்தது. இதேநாளில், சிவாஜி நடித்த ‘தூக்குதூக்கி’ வெளியாகி மிகப்பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. தவிர, இந்தப் படம் இன்னொரு சரித்திரப் பதிவாகவும் அமைந்தது. சிவாஜிக்கு டி.எம்.எஸ். குரல் கொடுத்த முதல் படம் எனும் பெருமை ‘தூக்குதூக்கி’ படத்துக்குக் கிடைத்தது. ‘கூண்டுக்கிளி’யிலும் சிவாஜிக்கு டி.எம்.எஸ். பாடல் பாடியிருப்பார்.

1955-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி, சிவாஜி நடித்த ‘கோடீஸ்வரன்’ படமும் ‘கள்வனின் காதலி’ படமும் ஒரே நாளில் வெளியானது. இதில் ‘கள்வனின் காதலி’ நூறு நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. 1956-ம் ஆண்டு, ஜனவரி 14-ம் தேதி பொங்கல் வெளியீடாக ‘நான் பெற்ற செல்வம்’ படமும் ‘நல்ல வீடு’ என்கிற படமும் வெளியானது. ‘நல்ல வீடு’ மோசமான தோல்வியைச் சந்தித்தது. ‘நான் பெற்ற செல்வம்’ நூறு நாள் ஓடி வசூல் கொடுத்தது.

1959-ம் ஆண்டு, அக்டோபர் 31-ம் தேதி, ‘அவள் யார்’ என்கிற படமும் ‘பாகப்பிரிவினை’ படமும் சிவாஜி நடிப்பில் வெளியானது. ‘அவள் யார்’ யாருக்கும் தெரியாத படமாகவே போனது. ‘பாகப்பிரிவினை’ வெள்ளிவிழா சாதனையை எட்டியது. 1969-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி ‘பாவை விளக்கு’ படமும் ‘பெற்ற மனம்’ படமும் வெளியாகின. இரண்டுமே சுமாராகவே ஓடின.

1961-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி, ‘எல்லாம் உனக்காக’ படமும் ‘ஸ்ரீவள்ளி’ படமும் சிவாஜி நடிப்பில் வெளியாகின. இதில் ’ஸ்ரீவள்ளி’ 100 நாள் படமாக சாதனை படைத்தது. 1964-ம் ஆண்டு சிவாஜியின் திரை வாழ்வில் மறக்கமுடியாத ஆண்டு. தமிழ் சினிமா சரித்திரத்திலும் மறக்கமுடியாத வருடம். நவம்பர் 3-ம் தேதி, ‘நவராத்திரி’ படமும் ‘முரடன் முத்து’ படமும் ஒரே நாளில் வெளியானது. இதில் ‘நவராத்திரி’ நூறு நாள் படமானது. ‘முரடன் முத்து’ மிகச்சிறந்த படம் என்றபோதும், எண்பது நாட்களே ஓடியது. ஒருவேளை, ‘முரடன் முத்து’ இன்னொரு தேதியில் வந்திருந்தால், இதுவும் வெற்றிப்படமாக அமைந்திருக்குமோ என்னவோ?

1967-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி, தீபாவளி வெளியீடாக, சிவாஜி நடித்த ‘ஊட்டி வரை உறவு’ம் ‘இருமலர்கள்’ படமும் ஒரேநாளில் வெளியாகின. ஒன்று வண்ணப்படம். இன்னொன்று கறுப்பு வெள்ளைப்படம். இரண்டுமே பாடல்களில் ஹிட் அடித்தது. இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களாகவும் நூறு நாள் கடந்த படங்களாகவும் ஓடி சாதனை படைத்தன.

1970-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி ‘விளையாட்டுப் பிள்ளை’ படமும் ‘தர்த்தி’ என்கிற இந்திப்படமும் வெளியாகின. இரண்டு படங்களுமே ஹிட்டாகின. அதே 1970-ம் ஆண்டில், அக்டோபர் 29-ம் தேதி ‘எங்கிருந்தோ வந்தாள்’ படமும் ‘சொர்க்கம்’ படமும் சிவாஜி நடிப்பில் வெளியாகின. இரண்டுமே வண்ணப்படங்கள். இரண்டுமே சிவாஜியின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்கள். இரண்டுமே நூறு நாட்களைக் கடந்து ஓடின.

1971-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப்புத்தாண்டுக்கு, ‘சுமதி என் சுந்தரி’ வெளியானது. இதே நாளில், சாவித்திரி தயாரித்து இயக்கி சிவாஜியும் சாவித்திரியும் நடித்த ‘பிராப்தம்’ வெளியானது. இதில் ‘பிராப்தம்’ படத்துக்கு வெற்றி பெறுகிற ‘பிராப்தம்’ அமையவில்லை. சாவித்திரிக்கு பெருத்த நஷ்டத்தைக் கொடுத்தது. ‘சுமதி என் சுந்தரி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

1975-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி ‘வைர நெஞ்சம்’ படமும் ‘டாக்டர் சிவா’ படமும் சிவாஜி நடிப்பில் வெளியாகின. இரண்டுமே வண்ணப்படங்கள். இரண்டிலும் பாடல்கள் தேனாக இருந்தன. ஆனால், படங்கள் சுமாராகத்தான் ஓடின. 1982-ம் ஆண்டு, நவம்பர் 14-ம் தேதி, ‘பரிட்சைக்கு நேரமாச்சு’ படமும் ‘ஊரும் உறவும்’ படமும் வெளியாகின. இதில், ‘பரிட்சைக்கு நேரமாச்சு’ நூறு நாள் படமானது.

1984-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி, ‘இரு மேதைகள்’ எனும் படமும் கே.பாக்யராஜின் ‘தாவணிக் கனவுகள்’ படமும் சிவாஜி நடிப்பில் வெளியாகின. ‘இரு மேதைகள்’ தோற்றது. ‘தாவணிக்கனவுகள்’ படத்தில் சிவாஜிக்கு முக்கியத்துவமான ரோல் கொடுக்கப்பட்டது. நூறு நாள் படமாக அமைந்தது. 1987-ம் ஆண்டு, ஆகஸ்ட் 28-ம் தேதி, மணிவண்ணன் இயக்கி சிவாஜியும் சத்யராஜும் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ வெளியானது. ‘கிருஷ்ணன் வந்தான்’ படமும் வெளியானது. இதில் ‘ஜல்லிக்கட்டு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழாவுக்கு அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், வந்து அனைவருக்கும் கேடயம் வழங்கிப் பாராட்டினார்.

தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதே சாதனைதான். அதிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தன் திரையுலக வாழ்வில்... ஒரே நாளில் இரண்டு படங்களை, பதினேழு முறை வெளியிட்டிருக்கிறார். இது... நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், இதுவரை எவரும் செய்யாத சாதனைச் சரித்திரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in