பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவை அடுத்து, 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
பிரபல இந்தி பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் (92). இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இவர், இந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவர், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.
கரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர், இன்று காலை மரணமடைந்தார். அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு, 2 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகக் கூடுதல் செயலாளர் ஆர்.கே.சிங், இது தொடர்பாக தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். இதனால் நாடு முழுவதும் இன்றும் நாளையும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
லதா மங்கேஷ்கர் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன், மும்பை சிவாஜி பார்க்கில் இன்று மாலை 6.30 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.