வண்ணமயமான ‘அன்னபூரணி’: வெளியானது விஜய் சேதுபதி படத்தின் அடுத்த சிங்கிள்

இளசுகளை குறிவைத்து மாறும் போக்கு
வண்ணமயமான ‘அன்னபூரணி’: வெளியானது விஜய் சேதுபதி படத்தின் அடுத்த சிங்கிள்

இளசுகள் மத்தியில் வைரலாகும் நோக்கோடு வெளியாகும் திரைப்பாடல்கள் புதிய அலையை உருவாக்க முயல்கின்றன. அதற்கு உதாரணமாகிறது இன்று வெளியாகி இருக்கும் டிஎஸ்பி படத்தின் அன்னபூரணி பாடல்.

விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் டிஎஸ்பி திரைப்படத்தின் அடுத்த சிங்கிள் இன்று(நவ.30) மாலை வெளியானது. ’அன்னபூரணி என்ன லவ்வு பண்ணு நீ’ என்ற இப்பாடலை சித் ஸ்ரீராம், லலிதா விஜய்குமார் பாடியுள்ளனர். படத்தின் இயக்குநர் பொன்ராம் எழுதிய பாடலுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் கேட்டதுமே ஒட்டிக்கொள்ளும் நோக்கோடு அன்னபூரணி பாடலும் அதற்கான இசையும் திட்டமிட்டு மெட்டமைக்கப்பட்டுள்ளன. பாடல் முழுக்க நடப்பு இளைஞர் உலகில் அதிகம் புழங்கும் பதங்களை வைத்தே வரிகளை அமைத்திருக்கிறார்கள். தனியாக பாடல் வரிகளை பார்க்கும்போது இதெல்லாம் பாட்டா என்று தோன்றுவதை டி.இமானின் தனித்துவ இசையும், சித் ஸ்ரீராமின் குரலும் ஒப்பேற்றி தாளமிட வைக்கின்றன.

ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா, லைக், ஷேர், ஃபாலோ, கூகுள், அட்மின் என சமூக ஊடகங்களின் மந்திர வார்த்தைகளை கொண்டு, அவற்றில் சதா சஞ்சரிக்கும் இளசுகளை சாய்க்கும் நோக்கில் அன்னபூரணி பாடலை சமைத்திருக்கிறார்கள். உணவில் மட்டுமன்றி அவசர உலகின் அனைத்துமே துரிதமாகி வரும் சூழலில் தங்களை தக்கவைத்துக்கொள்ள, பாட்டும் இசையும் இளசுகளுக்கு இன்னும் நெருக்கமாக படைக்க வேண்டியதாகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸை குறிவைத்து நடன அசைவுகளை வடிவமைப்பதன் நீட்சியாகவே பாடல்களை படைப்பதும் மாறி வருகிறது.

டிஎஸ்பி திரைப்படத்தின் அன்னபூரணி பாடலும் இதற்கான இலக்கணங்களோடு வண்ணமயமாய் இன்று வெளியாகி இருக்கிறது. இளம் தலைமுறைக்கு என்றே தோய்த்த வார்த்தைகளுக்கு மத்தியில் கேரள செண்டை மேளம் முழங்க நீளும் இசைகோர்ப்பில், சற்று வேறுபட்ட அனுபவத்தை வழங்கியிருக்கிறார் டி.இமான். ஆனால் விக்ரம் படத்தின் பத்தல.. பத்தல பாட்டின் அடித்தள தப்போசை அன்னபூரணியிலும் எதிரொலிப்பதை தவிர்த்திருக்கலாம்.

டிஎஸ்பி படத்தில் மீண்டும் போலீஸ் சீருடை தரிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ளார். புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், சிங்கம் புலி உள்ளிட்டோர் உடன் நடிக்க வில்லனாக பிரபாகர் தோன்றுகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என வெற்றிப்படங்களின் வழியே சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குநரான பொன்ராம், இதில் தனக்கு பழகிய கிராமப்புறத்திலிருந்து சிறு நகரத்துக்கு தாவியுள்ளார். இருவரது கூட்டணியில் பளிச்சிடும் காமெடி தடம், ட்ரெய்லர் மற்றும் பாடல்களிலும் வெளிப்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in