விஷாலின் மார்க் ஆண்டனி படத்திற்கு திருநங்கைகள் எதிர்ப்பு!
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக்கோரி திருநங்கை ஒருவர் கோவையில் புகார் அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ள மாமா ஆன்டி என்ற கதாபாத்திரம் திருநங்கைகளை இழிவுபடுத்துவதாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் திருநங்கைகளை பாலியல் உறவுக்கு அலைபவர்களாகவும், வன்முறையால் அடித்து வீழ்த்த வேண்டும் எனவும் பொருள்படும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இடையே, திருநங்கைகள் மீது வன்முறையை ஏவ வேண்டும் என்ற கருத்து மேலோங்கும் எனவும், எனவே இத்திரைப்படத்தில் வரும் திருநங்கைகள் தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது ஒட்டுமொத்த படத்தையே தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜாஸ்மின், இந்த காட்சிகளை வெறும் திரைப்படம் தானே என கடந்து போக முடியாது எனவும், திரைப்படங்கள் மூலமாக தான் தங்களை அவதூறான பெயர்களால் அழைப்பது அதிகரித்தது எனவும் தெரிவித்தார்.
ஐ திரைப்படம் வெளியான போது, அதில் திருநங்கைகளை இழிவாக காட்டியதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களால் அது போன்று மீண்டும் காட்சிகள் வைக்கப்படாது என படைப்பாளிகள் உறுதியளித்ததாகவும், தற்போது மீண்டும் இந்த காட்சிகள் வருவது ஆரோக்கியமானது அல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.
நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால் தனது பொறுப்புணர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் எனவும், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஆண்கள், பெண்களை தாண்டி ஏராளமான திருநங்கைகள் ரசிகர்களாக இருப்பதை உணர்ந்து, இது போன்ற படங்களை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஓய்.ஜி.மகேந்திரன் எதற்காக இந்த கதாபாத்திரத்தை ஏற்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், கற்பனை வறட்சியின் காரணமாகவே இது போன்ற காட்சிகளை இயக்குனர் ஆதிக் எழுதியுள்ளதாகவும் அவர் அப்போது குற்றம் சாட்டினார். இதை திரைப்படம் தானே என கடந்து போவதற்கு முன்பு, திருநங்கைகளுக்கு சமூகத்தில் அனைத்து அதிகாரங்களையும், வாய்ப்புகளையும் வழங்கிவிட்டு பின்னர் இது போன்ற காட்சிகளை வைக்க வேண்டும் எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.