விஜய், அஜித் பட நடிகர் இயக்கிய படத்தின் டிரெய்லருக்குத் தடை

தேசிய மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்பு
மகேஷ் மஞ்சரேக்கர்
மகேஷ் மஞ்சரேக்கர்

தேசிய மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், பிரபல நடிகர் இயக்கியுள்ள படத்தின் டிரெய்லர் நீக்கப்பட்டுள்ளது.

தமிழில், அஜித்தின் ’ஆரம்பம்’, விஜய்யின் ’வேலைக்காரன்’ படங்களில் நடித்திருப்பவர், மகேஷ் மஞ்சரேக்கர். இந்தியில் பல படங்களை இயக்கியுள்ள இவர், அங்கு தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறார். இவர் மகள் பிரபல இந்தி நடிகை சாயி மஞ்சரேக்கர்.

மகேஷ் இப்போது, ’நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா’ (Nay Varan Bhat Loncha Kon Nay Koncha) என்ற மராத்தி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர், கடந்த 10-ம் தேதி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

’நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா’ படத்தில்...
’நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா’ படத்தில்...

பெண்கள் குறித்து ஆட்சேபகரமான மற்றும் ஆபாசமான காட்சிகள் இருப்பதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்களை தவறான கண்ணோட்டத்தில் இந்த டிரெய்லர் சித்தரிப்பதாகவும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

தேசிய மகளிர் ஆணையமும் இதன் சில காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா, இந்த டிரெய்லரை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக செயலாளர் மற்றும் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து இந்த டிரெய்லர் யூடியூபில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ஷ்ரேயன்ஸ் ஹிராவத் கூறும்போது, ‘‘18 வயது உடையோருக்கான டிரெய்லர் என்று குறிப்பிட்டுதான் தணிக்கைச் சான்றிதழ் வாங்கியுள்ளோம். இருந்தாலும் சமூக வலைதளங்களில் எதையும் கட்டுப்படுத்தும் நிலை இல்லை. தேசிய மகளிர் ஆணையம் எழுப்பிய புகாரையும் கவனத்தில் கொண்டு, அனைத்து தளங்களில் இருந்தும் டிரெய்லரை நீக்கிவிட்டோம். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை என்பதால் நீக்கி இருக்கிறோம்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in