துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் `சேதுராம ஐயர்’

துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் `சேதுராம ஐயர்’

மம்மூட்டி நடித்துள்ள ’சிபிஐ 5: தி பிரைன்’ படத்தின் டிரெய்லர் துபாய் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

மம்மூட்டி, ஊர்வசி, சுரேஷ் கோபி, ஜெகதி ஸ்ரீகுமார் நடிப்பில் 1988-ம் ஆண்டு வெளியான படம், ’ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. எஸ்.என்.சுவாமி கதை எழுதிய இந்தப் படத்தை கே.மது இயக்கி இருந்தார். மம்மூட்டி, சேதுராம அய்யர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மர்டர் மிஸ்டரி படமான இது சூப்பர் ஹிட்டானது. தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு வருடம் ஓடிய இந்தப் படத்தை அடுத்து, இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாயின.

இதே கேரக்டர்களை கொண்டு, 1989-ம் ஆண்டு ஜாக்ரதா என்ற படம் வெளிவந்து வெற்றி பெற்றது. பிறகு 2004-ம் ஆண்டு ’சேதுராம் அய்யர் சிபிஐ’, 2005-ல் ’நேரறியான் சிபிஐ’ ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இப்போது இதன் ஐந்தாவது பாகம் ’சிபிஐ 5: தி பிரைன்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. மம்மூட்டி, முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார், சாய்குமார், ரெஞ்சி பணிக்கர், திலீஷ் போத்தன், கனிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்தப் படத்தின் டிரெய்லர், துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் வெளியிடப்பட்டது. இதை நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் பார்த்து ரசித்தனர்.

படம் பற்றி மம்மூட்டி கூறும்போது, ``இந்தப் படம் ரசிகர்களுக்கு த்ரில்லான அனுபவத்தைக் கொடுக்கும். காலம் கடந்தாலும் சேதுராம ஐயர் அப்படியேதான் இருக்கிறார். அவர் தனது புலனாய்வை தொடர்ந்து செய்கிறார். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் நடிகர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், சேதுராம ஐயர் நம் மண்ணின் கேரக்டர். அதனால் அவர் மாற வில்லை'' என்றார்.

Related Stories

No stories found.