'தெற்கிருக்கும்’ ஷாருக்: மீண்டெழுமா இந்தி சினிமா?

'தெற்கிருக்கும்’ ஷாருக்: மீண்டெழுமா இந்தி சினிமா?

தனது புதிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள சூழலில், சினிமா ஜாகையில் தென்னிந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து வருகிறார் ஷாருக் கான். பாலிவுட் பாட்சாவின் புதிய புறப்பாடு பலிக்குமா?

பாலிவுட் பாட்சாவாக புகழப்படுபவர் ஷாருக் கான். இவர் தனது 57வது பிறந்தநாளை நேற்று(நவ.02) விமரிசையாக கொண்டாடினார். போதை வழக்கில் மகன் ஆர்யன் கான் கடந்தாண்டு கைதானதில் தந்தை ஷாருக் கான் சோர்ந்திருந்தார். ஆர்யன் கைதின் பின்னணியில் அரசியல் மற்றும் அதிகார மோதல்கள் மூண்டதில் சிக்கல்கள் அதிகரித்தன. ஆர்யனின் கைது, சிறை படலம், ஜாமீன் முயற்சிகள் என தந்தை ஷாருக் கான் தடுமாறிப் போனார். நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின்னரே வழக்கின் பிடியிலிருந்து மகனை விடுவித்தார். அதன் பிறகும் தனது வழக்கமான திரைப்பட பணிகளுக்கு திரும்பாது இடைவேளை விட்டார்.

கரோனா காரணமாக துவண்டிருந்த பாலிவுட் படவுலகம், ஷாருக் கான் போன்ற சூப்பர் ஸ்டார்களின் நேரடி திரையரங்க வெளியீடுகளை பெரிதும் எதிர்பார்த்திருந்தது. மாறாக கேஜிஎஃ-2, ஆர்ஆர்ஆர், புஷ்பா, விக்ரம் என தென்னக திரைப்படங்களின் வெற்றி வரிசை பாலிவுட்டை துவம்சம் செய்தது. அவற்றுடன் போட்டியிட முடியாத இந்தி திரைப்படங்கள் பலவும் தோல்வியை தழுவின. அவற்றில் ஆமிர் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோரின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களும் அடங்கும். பாலிவுட்டை தோல்விமுகத்திலிருந்து மீட்க அடுத்த கட்டமாக ஷாருக் கானின் திரைப்படத்தை இந்தி திரையுலகம் எதிர்பார்த்திருந்தது.

அதற்கேற்ப ஷாருக் கானின் 2 திரைப்படங்கள் அடுத்தாண்டு வெளியாக உள்ளன. ஹாலிவுட்டுக்கு நிகராக உருவானதாக சொல்லப்படும் ’பதான்’ என்ற ஆக்‌ஷன் திரைப்படம் ஜனவரி 25 அன்று வெளியாக உள்ளது. புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்சின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக வெளியாகும் இந்த திரைப்படத்தில் ஷாருக் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜான் ஆபிரஹாம் எதிர் நாயகனாக நடித்துள்ள பதான் திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

பதான் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் ஷாருக் ரசிகர்கள் 2 நாள் முன்பாகவே அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கினர். தனிப்பட்ட வாழ்க்கையில் மீண்டெழுந்துள்ள ஷாருக், உத்வேகத்துடன் இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். பாந்த்ராவில் இருக்கும் தனது மன்னத் இல்லத்தின் முன்பாக திரண்ட ரசிகர்களை வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். சுமார் 1000 ரசிகர்களுக்கு ஸ்மார்ட் வாட்சுகள் பரிசளித்தார். மற்றொரு நிகழ்வில் ரசிகர் விருப்பத்துக்காக நடனமாடியும் மகிழ்வித்தார்.

பிறந்தநாளன்று ரசிகர் சந்திப்பு
பிறந்தநாளன்று ரசிகர் சந்திப்பு

ஷாருக் நடிப்பில் அடுத்தாண்டு வெளியாகும் இன்னொரு திரைப்படத்தை தமிழிலிருந்து பாலிவுட்டி கால்பதித்திருக்கும் அட்லீ இயக்குகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். ’ஜவான்’ என்ற தலைப்பிலான இதன் படப்பிடிப்பும் வடக்குக்கு மாறாக சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் மும்முரமாக தொடர்ந்து வருகிறது. தென்னக திரைப்படங்களின் பான் இந்தியா பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தென்னக இயக்குநர், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு தளம் என ’தெற்கிருக்கும்’ ஷாருக், இங்கத்திய ரசிகர்களையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த வகையில் பதான் திரைப்படம் இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கிலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in