புதுப் பட சிறப்பு காட்சி - சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தமிழகத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் ரசிகர்கள் சிறப்பு காட்சியின் போது, திரையரங்குகள் முன்பு 24 மணி நேரமும் பெரும் கூட்டமாக நின்று கொண்டு பட்டாசு வெடிப்பது, கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

அதனால், இந்த ரசிகர் காட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போதும், நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், பொது அமைதியை பேணவும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் விதிகள் வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், இதுதொடர்பாக, உள்துறை செயலர் அனுப்பிய கடிதத்தையும் தாக்கல் செய்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரசிகர்கள் காட்சிகளால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மனுதாரர் சரியாக விளக்கவில்லை என கூறினர். மேலும், அரசு உள்துறை செயலாளர் கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in