
ஒரு நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்த பாடகர் வேல்முருகனின் மகள் ரக்ஷனா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கடந்த 13 வருடங்களாக பல வெற்றிப் பாடல்களை பாடி நாட்டுப்புறம் மற்றும் திரைப்பட பாடல்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பாடகர் வேல்முருகன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாட்டுப்புற பாடகர் என்ற பெருமையும் வேல்முருகனுக்கு உண்டு. கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வேல்முருகன் வென்றுள்ளார். இதை தவிர, 5,000 நாட்டுப்புற கலைஞர்களை வைத்து கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தற்போது இவரது மகள் ரக்ஷனா வேல்முருகன், ஒரு நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறுமி ரக்ஷனா வேல்முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, வேல்முருகன், அவரது மனைவி கலா மற்றும் இளைய மகள் உடனிருந்தனர்.