‘துணிவு’ ட்ரெய்லருடன் புத்தாண்டு கொண்டாட்டம்

30 நிமிடங்களில் 2 மில்லியன் பார்வைகள்
‘துணிவு’ ட்ரெய்லருடன் புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டங்களின் மத்தியில் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ’துணிவு’ ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

அஜித் குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ’துணிவு’. விஜய் நடித்த ’வாரிசு’ படத்துடன் நேரிடையாக மோதுவதால், துணிவு படத்துக்கான எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் தத்தளித்தனர். படத்தின் தயாரிப்பாளரான போனிகபூரும் புதுமையான புரோமோக்களில் அசத்தி வருகிறார்.

ஸ்கை டைவிங் போஸ்டர், ஹோலோகிராம் ட்ரெய்லர் என சுவாரசியமான அறிவிப்புகளுக்கு மத்தியில் டிச.31 மாலை துணிவு ட்ரெய்லர் வெளியானது. நெட்ஃபிளிக்ஸில் ’மனி ஹெய்ஸ்ட்’ வலைத்தொடரின் வங்கிக்கொள்ளை பாணியிலான அதிரடி காட்சிகளுடன் ட்ரெய்லர் விரிகிறது. வங்கிக் கொள்ளையை முன்னின்று நடத்தும் கொள்ளை பேர்வழியாக முகமூடி அணிந்து அஜித் குமார் மிரட்டுகிறார்.

அதன் பின்னர் வெள்ளை வெளேர் கேசமும், தாடியுமாக மெஷின் கன் ஏந்தி தீபாவளி பண்டிகை போல சுட்டுத் தள்ளுகிறார். இடையே அட்டகாசமான நடன அசைவுகளையும் போடுகிறார். படம் ஒரு ஜாடையில் மங்கத்தா அஜித்தையும் நினைவூட்டுகிறது. ஆனால் ’ஒன் மேன் ஷோ’வாக அஜித்தின் அமர்க்களமான விருந்து அவரது ரசிகர்களுக்கு காத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பை இயக்குநர் ஹெச்.வினோத் உருவாக்கி இருக்கிறார்.

பணம் - அதிகாரம் - சட்டம் என முக்கோணத்துக்குள் கொள்ளை அரங்கேறும் வங்கியும், அதன் மையமான ’அயோக்கியனை’யும் ட்ரெய்லர் வட்டமிடுகிறது. இது தவிர மஞ்சு வாரியாருக்கு என ஆக்‌ஷன் காட்சிகளும், நிலம், நீர், ஆகாயம் என அஜித் தூள்பரத்தும் விரட்டல்களுமாக ட்ரெய்லர் மிரட்டுகிறது.

ஆங்காங்கே அகல திரைகள் வைத்து ட்ரெய்லரை லூப் மோடில் ரசித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். மெய்யாலுமே அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கியிருக்கிறது துணிவு குழு. ட்ரெய்லர் உருவாக்கிய எதிர்பார்ப்பினை துணிவு திரைப்படம் பூர்த்தி செய்கிறதா என்பது பொங்கலுக்கு தெரிந்து விடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in