
வேலூரில் அஜித் தலைமை நற்பணி இயக்க அலுவலகத்தில் இருந்த 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'துணிவு' படத்தின் 900 டிக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காகிதப்பட்டறை தெருவில் அஜித் தலைமை நற்பணி இயக்க அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் தலைவராக சுரேஷ்குமார், செயலாளராக சண்முகம் செயல்பட்டு வருகின்றனர், இந்நிலையில் இந்த நற்பணி இயக்க அலுவலகத்தில் ‘துணிவு’ படத்தின் ரசிகர் மன்ற டிக்கெட் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு சுரேஷ்குமார் அலுவலகத்தை பூட்டிச்சென்றார். காலையில் வந்து பார்த்தபோது அலுவலக ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நள்ளிரவில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அலுவலக மேஜையில் இருந்த ‘துணிவு’ படத்தின் 900 டிக்கெட்டுகளையும், லாக்கரில் இருந்த 16,ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அஜித் தலைமை நற்பணி மன்றம் தலைவர் சுரேஷ்குமார், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிவிடிவி காட்சிகளை வைத்து டிக்கெட் மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். 'துணிவு' படம் நாளை வெளியாக உள்ள நிலையில் டிக்கெட் திருடுபோன சம்பவம் வேலூர் மாவட்ட அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.