
உலகம் முழுமைக்கும் வெளியாகும் துணிவு திரைப்படம் அதன் வெளியீட்டுக்கு முன்பாகவும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் லண்டன் சாலைகளில் மேற்கொள்ளப்படும் துணிவு விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் பலப்பிரயேகத்தில் குதிக்கிறது அஜித்தின் துணிவு திரைப்படம். வெளியீட்டுக்கு முன்பாக அதிர்வுகளை ஏற்படுத்துவதிலும் துணிவு முந்தி வருகிறது. திரைகளின் எண்ணிக்கையில் துணிவு முன்னிலை வகித்ததன் பின்னே அரசியல் மற்றும் சினிமா உலக சர்ச்சைகள் தனியாக வெடித்தன.
அண்மையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டும், சுமார் 480 திரையரங்குகளில் துணிவு வெளியாக உள்ளது. உலகமெங்கும் வெளியாகும் துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு விவரங்களும் வியப்பில் ஆழ்த்துகின்றன. உலகத்தின் மிகப்பெரும் திரையரங்குகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் லீ கிராண்ட் ரெக்ஸில் இரவு 12 மணிக்கு துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கான புரமோஷன் வகையில் துணிவு தனி ராஜபாட்டையில் பயணிக்கிறது. லண்டன் சாலைகளில் பாயும் துணிவு திரைப்படத்துக்கான அவுட்டோர் புரமோஷனின் அங்கமான எல்இடி திரை விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் பஞ்ச் வசனங்களில் ஒன்றான ‘செய்றோம்’ என்பதன் கீழ் இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.