
வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர்கள் அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கக்கூடிய ‘துணிவு’ பொங்கல் வெளியீடாக இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா படம்?
சென்னையின் பரபரப்பான முக்கிய பகுதியில் இயங்கி வருகிறது ‘யுவர் பேங்க்’. அங்கு அதிரடியாக வரும் கும்பல் ஒன்று பணத்தைக் கொள்ளையடிக்க உள்ளே நுழைந்து, வாடிக்கையாளர்களையும் வங்கி ஊழியர்களையும் பிணையக் கைதிகளாக்குகிறது. உள்ளே வாடிக்கையாளர்களில் ஒருவராக வந்த அஜித், உள்ளே இருப்பவர்களோடு அந்த கொள்ளைக் கும்பலையும் தன் வசமாக்கி தானும் கொள்ளையடிக்க வந்ததாக கூறுகிறார். இந்தத் திட்டத்தை முறியடித்து மக்களைக் காக்கவும் அஜித்தையும் அந்த கொள்ளைக்கும்பலையும் பிடிக்க காவல்துறையை அரசு முடுக்கிவிடுகிறது. அஜித் ஏன் பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்? அவருடன் வங்கியில் இருந்த கொள்ளைக் கும்பலின் நோக்கம் என்ன? இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் ‘துணிவு’ படத்தின் கதை.
படத்தில் பெரும்பாலும் வெள்ளை நிற ஆடை, வெள்ளை நிற தாடி, ஹீரோயிசம் கலந்த வில்லத்தனம், அசால்ட்டான நடிப்பு, திரை நிறைக்கும் எனர்ஜி என முதல் பாதியில் மாஸ் காட்டியிருக்கிறார் அஜித். கடந்த படங்களில் ரசிகர்கள் மிஸ் செய்த அஜித்தின் அந்த சிரிப்பும் எனர்ஜியும் மாஸ்சும் முதல் பாதியில் பல இடங்களில் பார்க்கும்போது புத்துணர்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, உள்ளே இருந்து கொண்டே வெளியில் காவல்துறையை டீல் செய்து ஜாலியாக நடனம் ஆடுவது என ரகளை செய்திருக்கிறார் அஜித்.
கண்மணியாக கவனம் ஈர்க்கிறார் மஞ்சு வாரியர். படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம். மாஸ் ஹீரோ படத்தில் அவரை மட்டுமே முன்னிறுத்தும்படியாகவும் பெரும்பாலும் கதாநாயகிகளை பாடல், காதல் காட்சிகளுக்காகவும் பயன்படுத்தும்படியாகவும் படங்கள் வந்து கொண்டிருக்க, கதையில் கதாநாயகர்களுக்கு இணையாக இடம் கொடுக்கும் வகையில் கடந்த சில படங்களில் இயக்குநர் வினோத்தும் நடிகர் அஜித்தும் கைக்கோத்திருப்பது இந்தப் படத்திலும் தொடர்கிறது.
ஆக்ஷன் காட்சிகளிலும் எமோஷனல் காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மஞ்சு வாரியர். இவர்கள் தவிர சமுத்திரக்கனி, மோகனசுந்தரம், ஜான், ஜி.எம். சுந்தர், பக்ஸ், தர்ஷன் என பலரும் கதையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதில், சமுத்திரக்கனி, மோகனசுந்தரம் ஆகியோரது கதாபாத்திரங்கள் கதைக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும், சுப்ரீம் சுந்தரின் ஸ்டண்ட் காட்சிகளும் முதல் பாதியில் அஜித் எடுக்கும் ஆக்ஷன் அவதாரமும் ரசிக்க வைக்கிறது. விறுவிறுப்பாக நகரும் முதல் பாதிக்கு ஜிப்ரானின் இசை இன்னும் வேகம் கூட்டுகிறது. பாடல்கள், வலிந்து திணித்த உணர்வைத் தருகிறது.
’சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ என தனது முந்தைய படங்களில் எல்லாம் முக்கிய கருத்தை ஒன்லைனாக கொண்டு வந்தார் இயக்குநர் வினோத். அந்த வகையில், ‘துணிவு’ படத்திலும் மக்களின் பணத்தையே கொள்ளையடிக்க நினைக்கும் வங்கியின் நிர்வாகி, மக்களின் பணத்தேவையை வங்கிகள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள், இதன் மூலம் வங்கி ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் டார்க்கெட் டார்ச்சர்கள் என பலவற்றை பேசியிருக்கிறார். அதேநேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை முதலானவற்றின் மீது படத்தில் கட்டமைக்கப்படிருக்கும் கருத்துகளும் அதன்மீது எதிர்மறையான கருத்துகளை மட்டுமே உருவாக்கும்படி அமைந்திருப்பதும் மைனஸ்.
முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் பலவீனமான திரைக்கதையால் சில இடங்களில் சுவாரஸ்யம் குறைகிறது. கணிக்க முடிந்த கிளைமாக்ஸூம், ஒருக்கட்டத்தில் கதையில் திகட்டும் ஹீரோயிசமும் ஆக்ஷனும் படத்தின் மைனஸ். ஆனாலும், படத்தின் முதல் பாதி விறுவிறுப்புக்காகவும், படத்தின் மையக்கருவுக்காகவும் ரசிக்கவைக்கிறது ‘துணிவு’.