‘இந்தியன் 2’ படத்தில் இணையும் இயக்குநர் பட்டாளம்: குருவின் கரத்தைப் பலப்படுத்தும் சிஷ்யர்கள்!

‘இந்தியன் 2’ படத்தில் இணையும் இயக்குநர் பட்டாளம்: குருவின் கரத்தைப் பலப்படுத்தும் சிஷ்யர்கள்!

இயக்குநர் ஷங்கரின் முன்னாள் சிஷ்யர்களும் முன்னணி இயக்குநர்களுமாகிய வசந்தபாலன், சிம்புதேவன், அறிவழகன் ஆகியோர் 'இந்தியன்2' படத்தில் இணைவது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 1996-ல் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'இந்தியன்'. இதன் இரண்டாம் பாகம் 2019-ல் தொடங்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாகப் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இனி 'இந்தியன்2' மீண்டும் தொடங்கப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்கப்படும் என சில வாரங்களுக்கு முன்பு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

‘இந்தியன் 2' மற்றும் தெலுங்கில் ராம் சரணுடன் இணையும் 'ஆர்.சி.15' என இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஒரே சமயத்தில் நடக்கும் என இயக்குநர் ஷங்கர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 'இந்தியன்2' படத்தில் சிம்புதேவன், வசந்தபாலன் மற்றும் அறிவழகன் ஆகிய முன்னணி இயக்குநர்கள் ஷங்கரின் அசோஷியேட் இயக்குநர்களாக இணைந்திருக்கின்றனர். அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து பின்னாட்களில் சிறந்த இயக்குநர்களாக முத்திரை பதித்த மூவரும் மீண்டும் அவரிடம் இணைந்து பணியாற்றுவது பாராட்டுகளை அள்ளியிருக்கிறது.

அடுத்த வாரம் சென்னையில், 'இந்தியன்2' படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக்குக்குப் பதிலாக நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in