என்னை விட திறமையான பலர் வாய்ப்புக் கிடைக்காமல் காணாமல் போயிருக்கிறார்கள்: கமல்ஹாசன் ஓபன் டாக்!

என்னை விட திறமையான பலர் வாய்ப்புக் கிடைக்காமல்  காணாமல் போயிருக்கிறார்கள்: கமல்ஹாசன் ஓபன் டாக்!

என்னை விட திறமையானவர்கள் பலர், வாய்ப்புக் கிடைக்காமல் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படம் வெற்றி பெற்றதை அடுத்து அதற்கான சக்சஸ் மீட் சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத், உதயநிதி ஸ்டாலின், கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன், தயாரிப்பாளர் கேயார், செண்பகமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: நான் டிவி நிகழ்ச்சி பண்ணும்போது அதிகமாகக் கிண்டலடித்தார் கள். பிரியம் கொண்ட நிறைய பேர் கையைப் பிடித்துக்கொண்டு தயவு செய்து சின்னத்திரைக்கு போகாதீர்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சிந்தனை வட்டம் சிறியதாக இருந்ததைதான் அது காட்டுகிறது. நான் எடுத்த முடிவு தவறோ என்று கொஞ்ச நேரம் என்னையே சந்தேகப்பட வைத்தார்கள். நல்லவேளை சுதாரித்துக்கொண்டேன். அதன் பலன், நான் பல வீடுகளுக்குச் செல்ல முடிந்தது.

என் புரமோஷன் பிக்பாஸிலேயே ஆரம்பித்துவிட்டது. 'நம்ம கமல், மீண்டும் நடிக்கிறார்ல' என்று ஞாபகப்படுத்த வேண்டியதாக இருந்தது. அதனால்தான் மறுபடியும் மறுபடியும் யூடியூப்பில் பழைய படத்தையாவது போட்டுக் காட்டிக்கொண்டிருந்தோம். காரணம் இங்கு மறதி ஜாஸ்தி. மறதி ஒரு தேசிய வியாதின்னு என் படத்து வசனத்தையே சொல்றேன். இப்படி படிப்படியாக வந்ததுதான் 'விக்ரம்' படத்தின் வெற்றி. அதனால் இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

நான், வாட்ச் கிஃப்டா கொடுத்தேன், கார் கொடுத்தேன்னு சொல்றாங்க. அதையெல்லாம் விட உழைக்கும் மக்கள், தன் கூலியில் இருந்து ஒரு பங்கைக் கொடுத்திருக்கிறார்கள், அதுதான் கிஃப்ட். என் திறமைக்கு அதிகமாக தமிழக மக்கள் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். என்னை விட திறமையானவர்கள் பலர், வாய்ப்புக் கிடைக்காமல், என்னை மாதிரி குருமார்கள் கிடைக்காமல் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நல்ல படத்தை ரசிகர்கள் விட்டுவிட மாட்டார்கள். ஆனால், அது நல்ல படமாக இருக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in