ரசிகர்களிடம் அதே அன்பு மீண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை!

உற்சாகத் துள்ளலில் லைலா
லைலா
லைலாVINTAGE

புத்தாண்டு பிறக்கிறது என்றாலே அனைவருக்கும் உற்சாகம்தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைத் துறையில் அந்தக் கொண்டாட்டங்களும் குறைந்துபோனது. காரணம், கரோனா! ஒருவழியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா தடைகள் நீங்கியதால் முடங்கிக் கிடந்த தியேட்டர்கள் எல்லாம் சோம்பல் முறித்து சகஜ நிலைக்குத் திரும்பின. தியேட்டரில் ரிலீஸ் செய்வோமா ஓடிடியில் உலவ விடுவோமா என யோசித்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் தங்களது படங்களை தெம்பாக தியேட்டர்களுக்குக் கொண்டு வந்தார்கள். நிலைமை சகஜமானதால் புதுப் படங்களும் அதிகம் வெளிவர ஆரம்பித்தன. அதுவும் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளின் படங்களும், அவர்களது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளும் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிகம் வெளியானது. அதுமட்டுமல்லாது, ஓடிடியில் வெளியான வெப் சீரீஸ்களிலும் நமது நாயகிகள் புதுத்தடம் பதித்து புரட்சி செய்தார்கள்.

அப்படி இந்த வருடம் வெளியான படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்கள் கொடுத்த கதாநாயகிகள் சிலரிடம் இந்த வருடம் குறித்தான நினைவுகள் மற்றும் அடுத்த வருடத்திற்கான திட்டம் என்ன என்பது குறித்தும் பேசினோம்.

லைலா:

நல்ல விஷயங்கள் போலவே சில கெட்ட விஷயங்களையும் இந்த வருடம் கொடுத்திருக்கிறது. 'சர்தார்' மற்றும் 'வதந்தி' வெப் சீரிஸ் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறேன். ஆனால், என் அம்மா இந்த வருடம் உடல்நிலை சரியில்லாமல் இருந்து தவறிவிட்டார். அதனால், மிக நல்லதும் ரொம்ப கெட்டதுமாக இந்த வருடம் எனக்கு அமைந்திருக்கிறது.


சினிமாவில் கம்பேக் கொடுத்த போது ரசிகர்களிடம் இருந்து அதே அன்பு மீண்டும் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இதை இயக்குநர் மித்ரனிடம் சொன்னபோது, “நிச்சயம் மீண்டும் உங்களை வரவேற்பார்கள் என்று எனக்கே தெரியும். ஏன் உங்களுக்குத் தெரியவில்லை” எனக் கேட்டுச் சிரித்தார்.

'வதந்தி' தொடரில் டீன் ஏஜ் பொண்ணுக்கு அம்மாவாக நடிக்க முதலில் எனக்கு விருப்பமில்லைதான். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்காக ஒத்துக்கொண்டேன். எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கிறிஸ்துமஸ் விழாவை வழக்கம்போல குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ளேன். பிறக்கும் வருடத்தில் இன்னும் நிறைய படங்கள் மூலம் உங்களைச் சந்திக்கிறேன்.

ஷிவாத்மிகா:

உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் இந்த கேள்வியே கொஞ்சம் பயங்கரமாகதான் இருக்கிறது. ஆனால், 2022 எனக்கு நன்றாகவே இருந்தது. என் பெயரை மீனாட்சி என்றே நினைவு வைத்துக்கொள்ளும் அளவிற்கு 'நித்தம் ஒரு வானம்' படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தது. அது ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாருக்குமே ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். எல்லாமே நல்லதாகவே நடக்கும் என சொல்லி விட முடியாது.

அது எனக்கும் இருந்திருக்கிறது. ஆனால், குறை சொல்லும் அளவுக்கு அது இல்லை. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என குடும்பம் என் கூட இருந்தது. பிறக்கும் வருடத்தில் இன்னும் சிறப்பான படங்கள், கதாபாத்திரங்களைக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

'கயல்' ஆனந்தி:

இந்த வருடம் எனக்கு மிக முக்கியமானது. பர்சனல், புரொஃபஷனல் என இரண்டையுமே சமாளிக்க வேண்டி இருந்தது. இந்த வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை. அடுத்த வருடம் குறித்து எந்தவிதமான திட்டமிடலும் இப்போதைக்கு இல்லை. இந்த வருடம் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் என் படம் வெளியானது. இந்த வருடத்தில் மறக்க முடியாதது நான் நடித்த 'யூகி' படம்தான்.

அந்த படம் நடித்த போது நான் நிஜமாகவே கர்ப்பமாக இருந்தேன். அது எனக்கு ஸ்பெஷலான தருணம். புத்தாண்டு கொண்டாட்டம் என் குடும்பத்தோடுதான். கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதனால், பொங்கல் வரை ஒரு குட்டி பிரேக் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

பவித்ரா லக்‌ஷ்மி:

எந்தவொரு புதுமுக நடிகருக்கும் அடுத்தடுத்து நல்ல படங்கள், கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். அது எனக்கு இந்த வருடம் சாத்தியமானது. சினிமாவில் என் அறிமுகம் தொடங்கி தமிழ், மலையாளம் என நான்கு படங்கள் மூன்று- நான்கு மாத இடைவெளிகளில் வெளியானது என் பாக்கியமாகவே நினைக்கிறேன்.

வேலை நன்றாக போன அளவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையும் சூப்பர் என்று சொல்லி விட முடியாது. அதில் சில குழப்பங்கள் இருந்தது. அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். நிச்சயம் இந்த வருடம் இன்னும் சூப்பராகி விடுவேன். புது வருடத்தை மணாலியில் தொடங்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், சில காரணங்களால் அது கேன்சல் ஆகி விட்டது. இசை கான்சர்ட்டோடுதான் இந்த வருடத்தை ஆரம்பிக்க வேண்டும்.

திவ்யா துரைசாமி:

எனக்குப் பிடித்த வருடங்களில் இதுவும் ஒன்று. 'எதற்கும் துணிந்தவன்', 'குற்றம் குற்றமே', 'சஞ்சீவன்' இவைதவிர ஒரு வெப் சீரிஸ் என அனைத்தும் வெளியானது. நீலம் புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஒரு படம், மாரி செல்வராஜ் சார் படம் என வரும் வருடமும் வேலையைப் பொறுத்தவரையில் சிறப்பாகவே இருக்கும். சினிமாவில் நாம் முக்கியமான இடத்தை நோக்கி நகரக்கூடிய அந்தப் பயணத்தில் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த குழப்பங்களும் நீங்கி சந்தோஷமாகவே இருக்கிறேன். அடுத்த வருடத்தை ஆர்வமாக எதிர்ப்பார்க்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in