ஹிட் இயக்குநர்கள், மாஸ் ஹீரோக்கள் ஒன்று சேரும் போது அந்தப் படம் மீது ரசிகர்களுக்கு நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கும். போதாதற்கு, படத்தின் ரிலீஸுக்கு முன்பாக படக்குழுவினர் நடத்துகிற பப்ளிசிட்டி அட்ராசிட்டி, ரசிகர்களிடையே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்கிறது. அப்படி ஓவர் பில்டப் கொடுத்து, இந்த வருடத்தில் ரிலீஸாகி ப்ளாப் ஆன படங்களின் லிஸ்ட்டைப் பார்க்கலாம் வாங்க...
பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களால் இன்று வரையில் கொண்டாடப்பட்டு வரும் ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.
ராகவா லாரன்ஸ், கங்கனா நடிப்பில் இந்தப் படம் வெளியானது. ஆனால், ‘இதுக்கு... பருத்தி மூட்டை குடோன்லேயே கிடந்திருக்கலாம்’ என்று சமூக வலைத்தளங்களில் இந்த படத்துக்கான விமர்சனங்கள் அதிகளவில் ட்ரெண்டாகி இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.
’ஜோக்கர்’, ‘குக்கூ’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் ராஜூ முருகன், நடிகர் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்த படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படம் என்கிற அடைமொழியுடன், கார்த்தியின் வித்தியாசமான தோற்றம், திருடன், ராஜூ முருகன் இயக்கம், கார்த்தியின் அடுத்தடுத்த பில்டப் பேட்டிகள் என்று பயங்கர ஆரவாரத்துடன் வெளியான ஜப்பான், ரிலீஸான அன்றே ரசிகர்களை ஏமாற்றியது. அத்தனையும் வேஸ்ட்டா கோபா..ல்ல்ல்ல் என்று கலாய்த்து தள்ளினார்கள் ரசிகர்கள்.
’தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி- நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்த படம் என்பதால் ‘இறைவன்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை தக்க வைக்கத் தவற விட்டார் இயக்குநர் அகமது. வன்முறை, பிசிறடிக்கும் கதைக்களம் என ‘இறைவன்’ தோல்வியைத் தழுவியது.
நயன்தாராவின் 75வது படம் ‘அன்னபூரணி’. ‘ராஜா ராணி’ படத்தில் ஹிட்டடித்த ஜெய், சத்யராஜ் காம்போ மீண்டும் நயன்தாராவுடன் இந்தப் படத்தில் இணைய ரசிகர்கள் ‘அன்னபூரணி’யை அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால், சுமாரான கதையால் படம் வந்த சுவரே தெரியாமல் தோல்வியைத் தழுவியது.
நெல்சன்- ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்த படம் ‘ஜெயிலர்’. ’பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நெல்சன் ரஜினியுடன் இணைகிறார் என்பதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், படம் வெளியான பின், ரத்தமும், சதையுமாக படம் முழுக்க கதையுடன் பயணித்த துப்பாக்கி சத்தம் திரையரங்கில் ரசிகர்களை அதிர செய்தது. படத்தின் கதையும் கலவையான விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியது. வசூல் ரீதியாக இந்தப் படம் கோடிகளைக் குவித்திருந்தாலும் விமர்சன ரீதியாக படம் ரசிகர்களை ஏமாற்றியது.
’ஜெயிலர்’ வசூலை முறியடிக்கும் என்கிற பில்டப்புகளுடன் ரிலீசான படம். ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானதால் கூடுதல் எதிர்பார்ப்பு. போதாதற்கு ரஜினியின் கழுகு கதையும், ‘சூப்பர் ஸ்டார்’ டைட்டில் பஞ்சாயத்தை கிளப்பி விட, எதிர்பார்ப்பு எகிறியது.
சில்லு சில்லு உடைச்சிட்டியே... என்று வடிவேலு பாணியில் தியேட்டர் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள், நெளிந்தார்கள். வசூலிலும் ஜெயிலர் தொட்ட உயரத்தை தொட முடியாமல் ‘லியோ’ பம்மியது. வியாபார ரீதியில் வெற்றி பெற்றாலும், லியோ படத்தை தோல்வி வரிசையில் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.
’மண்டேலா’ இயக்கிய அஸ்வின் அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்த படம் ‘மாவீரன்’. கார்ட்டூன் ஆர்டிஸ்டாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதுவரை நடித்திருந்த கமர்ஷியல் ஹீரோ வட்டத்தில் இருந்து சிவகார்த்திகேயன் வெளியே வந்து இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படம் விமர்சன ரீதியில் மட்டுமல்லாமல் வசூலிலும் பெரிய உயரத்தைத் தொடவில்லை. வழக்கமான சிவகார்த்திகேயன் படங்களின் ரிலீஸ் போதான அத்தனை பில்டப்புகளுடன் வெளியான ‘மாவீரன்’ ரசிகர்களை ஏமாற்றியது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!
2023 Rewind | மனதை உலுக்கிய மரணங்கள்... மீளா துயரில் ஆழ்த்திய பிரபலங்கள்!
கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இளம்பெண்!
அதிர்ச்சி... கொசுமருந்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
குட் நியூஸ்... அரிசி விலை குறையப்போகிறது; மத்திய அரசின் ஏற்பாடுகள் தீவிரம்!