
லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான ‘பையா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் வாரிசு நடிகரின் பெயர் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு பிறகு தனது மூன்றாவது படமாக லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘பையா’ படத்தில் ஒப்பந்தமானார். கமர்ஷியல் பட கதாநாயகனாக நடிகர் கார்த்திக்கு இந்தப் படம் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது.
இந்த வெற்றிக் கூட்டணி கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் இணைந்துள்ளது. ஆனால், இது ‘பையா2’ கிடையாது எனவும் புதிய களம் ஒன்றிலேயே இருவரும் இணைந்திருக்கிறார்கள் எனவும் சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் இயக்குநர் லிங்குசாமி ‘பையா2’ படத்தின் கதையையும் உருவாக்கியுள்ளார்.
இது குறித்தானப் பேச்சு நீண்ட நாட்களாக அடிபட்டு வரும் நிலையில், இந்தப் படம் குறித்தான சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளிதான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கானப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். ஆகாஷ் முரளி தற்போது விஷ்ணு வரதன் இயக்கத்தில் அதிதி ஷங்கருடன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.