இதுதான் உதயநிதிக்காக நான் எழுதிவைத்திருக்கும் கதை!

மனம் திறக்கும் கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதிKiransa

‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் கிருத்திகா உதயநிதி. ’காளி’ படத்தை அடுத்து இப்போது ஓடிடி தளத்தில் ‘பேப்பர் ராக்கெட்’டுடன் களமிறங்கி இருக்கிறார். காமதேனு மின்னிதழுக்காக அவரிடம் உரையாடியதிலிருந்து...

படப்பிடிப்பு தளத்திலும் அதிகம் டென்ஷன் ஆகாத அமைதியான இயக்குநர் நீங்கள் என்று கேள்விப்பட்டோமே..?

எந்த இயக்குநரிடமாவது உதவி இயக்குநராக வேலை பார்த்திருந்தால், படப்பிடிப்பு தளத்தில் சத்தம் போட்டால் தான் வேலை நடக்கும் என நானும் கற்றுக்கொண்டிருந்திருப்பேன். ஆனால், அப்படி வேலை செய்து எதுவும் கற்றுக்கொள்ளாததால் நான் என் இயல்பிலேயே படப்பிடிப்பு தளத்திலும் வேலை பார்க்கிறேன் என்று நினைக்கிறேன். அதுவுமின்றி, நான் நிதானமாகக் கேட்டாலே வேலை நடக்கிறது என்பதால் நானும் அப்படியே பழகிவிட்டேன்.

‘பேப்பர் ராக்கெட்’ கதைக்கான இன்ஸ்பிரேஷன் எது?

ஒரு இறப்பு தான் இந்த கதைக்கான இன்ஸ்பிரேஷன். நாம் எல்லாருமே நம் வாழ்க்கையில் இறப்பு என்பதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அம்மா, அப்பா, நண்பர்கள், உறவினர்கள் என இப்படி யாராவது ஒருவர் இறப்பு நம்மை பாதித்திருக்கும். அதை நாம் எதிர்கொண்டு இருப்போம். அதன் வித்தியாசமான பல கோணங்களை காட்டவேண்டும் என்று விரும்பினேன்.

இறந்த பிறகு என்ன நடக்கும் என நான் நிறைய யோசிப்பேன். நிறையப் பேரிடமும் கேட்பேன். ஒவ்வொருவருடைய பதிலும் ஆச்சரியமாக இருக்கும். நம் வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்கும் இதுபோன்ற எதிர்பாராத இறப்புகளுக்கு ஒரு சிறு ஆறுதலாக ‘பேப்பர் ராக்கெட்’ இருக்கும் என தோன்றியதன் விளைவு தான் இந்த வெப் சீரிஸ்.

காளிதாஸ், தான்யா என படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே வித்தியாசமானது. எப்படி இவர்களை ஒன்றிணைத்தீர்கள்?

இந்த கதையில் ஜீவா கதாபாத்திரம் பற்றி எழுதும் போதே காளிதாஸை மனதில் வைத்துத்தான் எழுதினேன். ஆனாலும் அந்த நேரத்தில் ஓடிடிக்காக அவரிடம் கேட்கும்போது சின்னத் தயக்கம் இருந்தது. ஏனெனில், கரோனா சமயம் என்பதால் அப்போது நடிகர்கள் ஓடிடியில் நடிக்க சம்மதிப்பார்களா என்று நினைத்தேன். ஆனால், கேட்டதுமே காளிதாஸ் சம்மதித்தார்.

தான்யா, இலக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான் சொல்ல நினைப்பதை அந்த கதாபாத்திரம் சொல்லும் என்பதால் ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு. தான்யாவை சந்தித்ததும் இவர் தான் இலக்கியாவுக்கு சரியானவர் என்று நினைத்தேன். கெளரி இதற்கு முன்பு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதில் சிறு கதாபாத்திரம் அவருக்கு. அவரைத் தாண்டி மற்ற நடிகர்களையும் இந்த பாத்திரத்துக்காக நான் யோசித்தாலும் மீண்டும் மீண்டும் கெளரியிடமே அந்த கதாபாத்திரம் வந்தது. ரேணுகா, கருணாகரன் என அனைத்து நடிகர்களுமே அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற் போல பொருத்தமாக அமைந்தார்கள்.

‘வணக்கம் சென்னை’, ‘நாட்படு தேறல்’, இப்போது ‘பேப்பர் ராக்கெட்’ என உங்கள் படங்களில் ஒளிப்பதிவு தனி அழகியலுடன் அமைவது எப்படி?

சின்ன வயதிலிருந்தே அதிகம் வெளியில் பயணம் செய்யக்கூடிய ஒரு நபர் நான். அதன் பாதிப்பு நான் கதை எழுதும்போதும் என்னையும் அறியாமல் வந்துவிடுகிறது என நினைக்கிறேன். நீங்கள் சொல்லும்போது தான் எனக்கே அது தெரிய வருகிறது.

இந்தக் கதைக்குமே கூட மார்த்தாண்டம், கன்னியாகுமரி, காரைக்குடி என பல ஊர்களை எழுதினேன். கதையாக எழுதும் போது அது தெரியவில்லை. ஆனால், கதைக்காக அந்த ஊர்களில் இடம் தேடி அலையும் போது பேராசையோடு எழுதிவிட்டோமோ எனத் தோன்றியது. ஆனாலும், என்னால் அதிலிருந்து விலகிக்கொள்ள முடியவில்லை.

‘வணக்கம் சென்னை’, ‘காளி’ன்னு போயிட்டு இருந்த நீங்க மியூசிக் ஆல்பம், ஓடிடி என களமிறங்கியது ஏன்?

’பேப்பர் ராக்கெட்’ கதையே இணைய தொடராகத்தான் எழுதினேன். இணைய தொடர் எனும்போது அதை ஓடிடிக்கு செய்தால் தானே சரியாக இருக்கும். நான் தியேட்டருக்கு, ஓடிடிக்கு என தனித் தனியாக கதை செய்யமாட்டேன். கதை எதற்குப் பொருந்துகிறதோ அதற்குத் தந்துவிடுவேன்.

கதாநாயகன் உதயநிதியை எப்போது இயக்கப் போகிறார் கிருத்திகா... அவருக்காக ஒரு க்ரைம் ஜானர் கதையை எழுதியிருப்பதாக இசை வெளியீட்டு விழாவில் சொல்லி இருந்தீர்களே..?

நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்று ஆரம்பத்தில் நினைத்தது இல்லை. இப்போதும் செய்யக்கூடாது என்றில்லை. சூழல் எப்படி அமைகிறது என்பதை பொறுத்துதான். அவருடைய பாதை வேறு; என்னுடைய பாதை வேறு. ஆனால், எதிர்காலத்தில் எப்படி அமையும் என்பது தெரியவில்லை.

அவருக்காக நான் எழுதி இருக்கும் கதையில், எடுத்ததுமே கதாநாயகி இறந்துவிடுவார். யார் அவரை கொலை செய்தார் என கதாநாயகன் கண்டுபிடிக்க வேண்டும். இதை நான் அவரிடம் பலமுறை கிண்டலாகச் சொல்லி இருக்கிறேன்.

’பேப்பர் ராக்கெட்’ பயணம் போல நீங்களும் உதயநிதியும் திருமணத்திற்கு முன்பு, குழந்தைகளுடன் போன பயணம் பற்றி..?

Kiransa

நாங்கள் இருவரும் இணைந்து நிறையப் பயணம் செய்வோம். ‘பேப்பர் ராக்கெட்’டில் வருவது போலவே, வேன் எடுத்துக்கொண்டு ஊட்டியில் இருந்து கொச்சின் வரை பயணித்தோம். குழந்தைகள் பிறந்ததும் நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சேர்ந்து மீண்டும் இந்த இடங்களுக்கும் வேறு இடங்களுக்கும் முழு நாளும் ரோட் ட்ரிப் எல்லாம் போயிருக்கிறோம். அதெல்லாம் தான் எனக்குள் இருந்து இந்தக் கதைக்குள் வந்திருக்கிறது.

Kiransa

இன்னொரு முக்கியமான விஷயம்... ‘பேப்பர் ராக்கெட்’ கதையை படம்பிடிக்க வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால். நம்மூரில் இருக்கும் மேகமலை, ஏலகிரி போன்ற ஊர்களுக்குப் போய்வந்த போது அதற்கான அவசியமே இல்லாமல் போய்விட்டது. நம் ஊரிலேயே நிறைய அழகான இடங்கள் இருப்பதை அப்போது கண்டறிந்தேன்.

உங்களுடைய மாமனார் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆரம்ப நாட்களில் கலைத்துறையில் இருந்தவர். உங்கள் வேலை தொடர்பாக அவரிடம் கலந்தாலோசிப்பது உண்டா?

பொதுவாக அத்தையும் மாமாவும் நான் படப்பிடிப்பில் இருக்கும் நாட்களில், “என்ன போகிறது... எப்போது வருவாய்?” என்று மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். மற்றபடி டீப்பாக எதுவும் பேசிக் கொள்வதில்லை. அதற்கான நேரமும் எங்களுக்குள் அமைவதில்லை. ‘பேப்பர் ராக்கெட்’ சீரிஸை மாமா பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அவர் பார்த்துவிட்டு என்ன சொல்வார் என்பதை தெரிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in