‘’ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும் ஆஸ்கர் செலவும்’ -ராஜமெளலி தரப்பில் புதிய விளக்கம்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி

ஆஸ்கருக்கு செலவு செய்த தொகை குறித்து ராஜமெளலி தரப்பு பேசியிருக்கிறார்கள்.

’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது பெறுவதற்காக இயக்குநர் ராஜமெளலி கோடிக்கணக்கில் செலவு செய்தார் என்ற பேச்சு இணையத்தில் எழுந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சிலரும் ராஜமெளலி ஆஸ்கர் விருதைப் பெற பெரும் தொகை செலவு செய்திருப்பதாகப் பேட்டிகள் கொடுத்திருந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில் இவை தொடர்பாக பேசியிருக்கிறார். ”ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா சார்பில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை அனுப்பாமல் போனது வருத்தம்தான். தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு நாங்கள் அனுப்பினோம். அதுபோல, ஆஸ்கர் விருதை பணம் கொடுத்துதான் என் தந்தை வாங்கினார் என்று சொல்வது சுத்தப் பொய்.

அப்படி வாங்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. உண்மையில், ஆஸ்கர் விருதுக்கான நடைமுறையில் படத்தை பரப்புரை செய்வதற்கு மட்டுமே, இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடி செலவு செய்யலாம் எனத் திட்டமிட்டோம். நாமினேஷனுக்கு படம் போனதும் ரூ.8.5 கோடி வரை செலவு செய்தோம். இதுதான் ஆஸ்கர் விருது நடைமுறைக்காக உண்மையாக நாங்கள் செலவு செய்த தொகை” என்று அந்த பேட்டியில் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in