‘எனக்கான நாள் இது!’ - தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ் குமார் நெகிழ்ச்சி!

 ‘எனக்கான நாள் இது!’ - தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ் குமார் நெகிழ்ச்சி!

‘சூரரைப்போற்று’ படத்திற்காக பின்னணி இசைக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறித்து ஜிவி பிரகாஷ் நெகிழ்ந்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’, ‘ஜெய் பீம்’ ஆகிய படங்கள் விருது பட்டியலில் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு இருந்தது. இதில், சிறந்த படத்திற்கான விருதை இயக்குநர் வசந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் பெற்றுள்ளது. மேலும், சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதை ‘மண்டேலா’ படத்திற்காக அஷ்வின் பெற்றுள்ளார். இதில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா, சிறந்த பின்னணி இசை ஜிவி பிரகாஷ் குமார், சிறந்த படம் மற்றும் திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் பெறும் முதல் தேசிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் ஜிவி பகிர்ந்திருப்பதாவது, ‘நிச்சயம் ஒரு பெருமை மிகுந்த நாளை நீ உனதாக்குவாய். ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய். நீ என்ன வேண்டும் என நினைக்கிறாயோ அது எல்லாம் நிச்சயம் ஒரு நாள் நடக்கும். இப்படி காத்திருந்து ஆசைப்பட்ட அந்த நாள் இறுதியில் வந்துவிட்டது. இந்த உலகிற்கும் அனைவருக்கும் நன்றி. என்னுடைய அப்பா வெங்கடேஷ், என்னுடைய குடும்பம், சைந்தவி, பவானி, அன்வி என அனைவரும் எனக்காக தந்த அனைத்திற்கும் நன்றி.

அதே போல, ‘சூரரைப்போற்று’ அணிக்கும், இயக்குநர் சுதா கொங்கராவிற்கும், சூர்யா சார், 2டி மற்றும் ராஜசேகர பாண்டியன் என இந்த தளத்தில் எனக்கான வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி’ என நெகிழ்ச்சியாக கூறி இருப்பவர் தன்னுடைய இசைக்குழுவையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இந்த விருதுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in