
பிரபல நடிகர்கள் உமா ரியாஸ்- ரியாஸ் கான் மகனான ஷாரிக் ஹசன் தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
'அலைகள் ஓய்வதில்லை', 'சம்சாரம் அது மின்சாரம்' போன்ற பல படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர் கமலா காமேஷ். இவரின் மகள் உமா. இவரும் சினிமா, சீரியல், யூடியூப் சேனல் என பிஸியாக வலம் வருகிறார். இவருக்கும் நடிகர் ரியாஸ் கானுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியின் மகன் ஷாரிக் ஹசன். இவர் தற்போது 'ஜிகிரி தோஸ்த்' என்ற படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் முன்பு பிக் பாஸ் மூலம் பிரபலமானார்.
ஜாலியான நண்பர்கள் பயணம் செல்லும்போது ஏற்படும் திடீர் திருப்பங்களின் கதையாக உருவாகி இருக்கிறது ‘ஜிகிரி தோஸ்த்’. இயக்குநர் ஷங்கரிடம் ’2.0’ படத்தில் பணியாற்றியவரும், ’திறந்த புத்தகம்’, ’கால் நூற்றாண்டுக் காதல்’, ’நீங்க நல்லவரா கெட்டவரா’ ஆகிய குறும்படங்களை இயக்கி, விருது பெற்றவருமான அரண் தயாரித்து , நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம்தான் ’ஜிகிரி தோஸ்த்’.
ஷாரிக் ஹசனுடன் அம்மு அபிராமி, வி ஜே ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கவுதம் சுந்தர்ராஜன் பாடகரும் நடிகருமான சிவம் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யகால நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை இது.
விக்கியின் பிறந்த நாளை ஒட்டி நண்பர்கள் மகாபலிபுரம் செல்கிறார்கள். வழியில் ஒரு பெண்ணை கேங்ஸ்டர் கூட்டம் ஒன்று காரில் கடத்திக்கொண்டு போவதை இவர்கள் பார்க்கிறார்கள். லோகியைத் தவிர மற்ற இருவரும் அவளைக் காப்பாற்ற விக்கி கண்டுபிடித்து இருக்கும் டெரரிஸ்ட் ட்ராக்கர் என்ற கருவி மூலம் முயற்சிக்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. நண்பர்களின் கலாட்டாவோடு படம் ஜாலியாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
படம் வெளியாகும் தேதி, டீசர், டிரெய்லர் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.