திருச்சி லோகநாதன்: ‘கல்யாண சமையல் சாதம்’ பரிமாறிய தனித்துவக் குரலோன்!

நினைவுநாளில் சிறப்புப் பகிர்வு

திருச்சி லோகநாதன்: 
‘கல்யாண சமையல் சாதம்’ பரிமாறிய தனித்துவக் குரலோன்!

இன்றைய பாடகர்களில் யார் பாடலை எழுதியது, எந்தப் பாடகர் பாடினார், பாடலின் வரிகள் என்னென்ன என்பவையெல்லாம் பெரிதாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அப்போதெல்லாம் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படங்களே வந்திருக்கின்றன; வென்றிருக்கின்றன. இன்றைக்குப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இல்லை என்றும் இசையை முக்கிய அங்கமாகக் கொண்டு படங்கள் வருவதில்லை என்றெல்லாம் பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் அது உண்மைதான். நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே, நம் தலைமுறைக்கு முன்பிருந்தே பாடியவர்களை அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பிறந்தவர்கள் கூட ரசித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ‘ஆஹா... என்ன குரல்...’ என்று பாடகர்களை வியந்துகொண்டுதான் இன்னமும் இருக்கிறார்கள். அந்த ‘ஆஹா’ வுக்கும் ‘என்ன குரல்வளம்’ என்பதற்கும் உரிய பாடகர்களில் திருச்சி லோகநாதனும் முக்கியமானவர்!

ஒவ்வொருவர் குரலுக்கும் ஒரு த்வனி உண்டு. நம்மில் சிலபேர் பேசுவதே ஏதோ கோபமாகப் பேசுவது போல் இருக்கும். இன்னும் சிலர் பேசுவது எப்போதுமே ரகசியமாக ஏதோ சொல்வது போல இருக்கும். இன்னும் சிலரின் குரல், ரகசியமாகவும் அல்லாமல் ஆர்டர் போடுவது போல் அல்லாமல் இருக்கும். பாடகர்களின் குரலில் இப்படியான மாற்றங்கள் இருக்கும். திருச்சி லோகநாதனின் குரல், வாழ்க்கை என்கிற மிகப்பெரிய பாடத்தை, கன்னத்தில் அறைந்து சொல்லித்தருவது போல் இருக்காது. செல்லமாகக் கன்னத்தைத் தட்டி, லேசாகக் காதைத் திருகி சொல்லித் தருவது போல் இருக்கும். வார்த்தைகளுக்கு வலிக்கக் கூடாது என்று பி.பி.எஸ்., ஏ.எம்.ராஜாவெல்லாம் பாடுவர்களே... அதேபோல, அந்த வார்த்தைக் குழந்தைகளை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொஞ்சிப் பாடுவது போன்ற குரல், திருச்சி லோகநாதனுடையது!

இலவம் பஞ்சு, மென்மையானது என்பார்கள். லோகநாதனின் குரலும் பஞ்சுக்கு இணையானதுதான். ஒரு கோழியின் இறகு எடுத்து காது குடைந்த அனுபவம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இப்போது ‘பட்ஸ்’ வந்துவிட்டது. அப்படியொரு காது வருடல்... திருச்சி லோகநாதனின் குரல்!

இத்தனை பெருமைகள் கொண்ட திருச்சி லோகநாதன், இதற்காகவே தமிழ் சினிமாவில் தனித்தடம் பதித்திருக்கிறார். கூடுதலாக, சரித்திரத்தில் மிக முக்கியமானவராகவும் திகழ்கிறார். தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர் எனும் பெருமையைக் கொண்டவர் திருச்சி லோகநாதன்!

மலைக்கோட்டை மாநகரம் எனும் பெயர் பெற்றது திருச்சிராப்பள்ளி. அந்த மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்த குடும்பத்தில் பிறந்தவர் திருச்சி லோகநாதன். ஆனால் வீட்டின் அளவைவிட, மனதின் நீள அகலங்களைவிட, இசையின் மீதான காதல் மலையளவு இருந்தது; மலையின் அளவுக்கே உயர்ந்திருந்தது.

தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில், மிகப்பெரிய ஜாம்பவானாகவும் அந்தக் கால மெல்லிசை மன்னராகவும் இசைஞானியாகவும் இசைப்புயலாகவும் திகழ்ந்தவர் ஜி.ராமநாதன். அவருடைய எல்லாப் பாடல்களையும் தன் சட்டைப்பைக்குள்ளேயும் நிஜார் பைகளுக்குள்ளேயும் வைத்துக்கொண்டு, காவிரிக்கரையோரத்தில் பாடிக்கொண்டே இருப்பார் லோகநாதன். அக்கம்பக்கத்தாரெல்லாம் ‘லோகு நல்லாப் பாடுறானே...’ என்று பாராட்டினார்கள்.

திருச்சி லோகநாதனின் அப்பாவுக்கு நகை செய்வதுதான் தொழில். ஆனால் அப்பாவின் தொழிலில் பிள்ளைக்கு நாட்டமில்லை. அப்பாவுக்கும்தான். ‘அவன் எதிர்காலம் எதுன்னு அவனே முடிவுபண்ணிக்கட்டும்’ என்று நடராஜன் என்பவரிடம் இசை பயில அனுப்பிவைத்தார். குருநாதர் நடராஜன், லோகநாதனைப் பாடச் சொன்னார். அந்தக் குரலைக் கேட்டு குருநாதரே அசந்துபோனார். “டேய் தம்பீ... உன் குரல்ல ஒரு போதை இருக்குடா. கேட்டாக்க, கிறுகிறுத்துப் போவுது எனக்கு” என்று ஆசை ஆசையாகக் கற்றுக்கொடுத்தார். அவரும் வெறித்தனமாகக் கற்றுக்கொண்டார். பாடலில், நடுவாந்திரமாகப் பாடுவதுதான் யதார்த்தமானது. ‘ஹஸ்கி’ வாய்ஸில் பாடினாலும் சட்டென்று குரல் கொஞ்சம் மாறிப்போகும். அதேபோல் உச்சஸ்தாயியில் குரலெடுத்தாலும் ஒருகட்டத்தில் நம்மை அறியாமலேயே குரல் பிசிறடித்துவிடும். ஆனால், ஒரு நொடியில் உச்சஸ்தாயிக்குச் சென்றுவிட்டு, அடுத்த விநாடியே ‘ஹஸ்கி’ வாய்ஸுக்கு வருகிற வித்தை, வெகு இயல்பாகவே வந்தது திருச்சி லோகநாதனுக்கு.

வித்தை கற்பது முக்கியமில்லை. வித்தையில் விற்பன்னராக வேண்டும் என்பதுதானே இலக்கு; ஜெயிப்பு. அந்தக் காலமும் தருணமும் லோகநாதனுக்கு கூடிவந்தது. ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம். 1945-ல் ‘ராஜகுமாரி’ என்ற படம் எடுத்தது. எம்ஜிஆர் நடித்த இந்தப் படத்துக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை. எம்ஜிஆருக்காக முதன்முதலில் பாடியவர் எம்.எம்.மாரியப்பா. நம்பியாருக்கு திருச்சி லோகநாதன் பாடியிருப்பார். 'காசினிமேல் நாங்கள் வாழ்வதே சுகவாழ்வுதான் கவலை இல்லாமல் மனம் கலங்காமல் ஆசையில் பேராசையினாலே மனம் வாடிடோம்' என்ற பாடலைத்தான் முதன்முதலாகப் பாடினார். ஆக, திருச்சி லோகநாதன் முதல் பின்னணிப் பாடகர் எனும் பெருமையைக் கொண்டார்.

அதற்கு முன்பு வரை, கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா என நடிகர்களே தங்களுக்காகப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் நடிக்க, இன்னொருவர் பாடியது... குரல் கொடுத்தது திருச்சி லோகநாதன் தான். அந்தப் பெருமை எம்.எம்.மாரியப்பாவுக்கும் உண்டு. இவர் திருச்சி லோகநாதனின் பெரியப்பா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து ‘அபிமன்யு’ படத்தில் பாடினார் திருச்சி லோகநாதன். பின்னர் ஜி.ராமநாதன் இசையில், ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடலை ‘மந்திரிகுமாரி’ படத்தில் பாடினார்.

தன் பால்யத்தில், எந்த ஜி.ராமநாதனின் பாடல்களை, நினைவடுக்குகளை குருவி சேமிப்பதுபோல் சேர்த்துவைத்துப் பாடினாரோ... அதே ஜி.ராமநாதனுக்கு திருச்சி லோகநாதனின் குரல் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ‘வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்...’ என்று திருச்சி லோகநாதனை வரவேற்றது திரையுலகம். கொண்டாடினார்கள் ரசிகர்கள். படத்தின் க்ளைமாக்ஸில் வருகிற இந்த ஒரு பாடலைக் கேட்பதற்காகவே ‘ரீப்பீடட் ஆடியன்ஸ்’ கூடிக்கொண்டே போனார்கள்.

பாடல்கள் பல வகை. உற்சாகமும் உத்வேகமும் தருகிற பாடல் இந்தத் திசை என்றால், வாழ்க்கை மொத்தமும் வெறுத்துப் போனவன் பாடுகிற பாடல் அதற்கு நேர்மாறான திசை! இந்த இரண்டு வேறுபட்ட குணங்களை, தன் குரலால், குணம் மாற்றிப் பாடுகிற வித்தைதான் திருச்சி லோகநாதனின் ஆரம்பகாலப் பாடல்களின் அடித்தளமாக அமைந்து, அவரின் வெற்றிக்கு அஸ்திவாரமிட்டது.

‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே’ என்று பாடினார். டெண்ட் கொட்டகையில் மணல் திட்டில் உட்கார்ந்திருந்த ரசிகர்களை அப்படியே ஓடத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு வந்தார். கிறங்கிப் போனார்கள் ரசிகர்கள்.

'ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே/ ஓடம் போலே ஆடிடுவோமே, வாழ்நாளிலே/ ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே’

’பருவம் என்னும் காற்றிலே/ பறக்கும் காதல் தேரிலே/ பருவம் என்னும் காற்றிலே/ பறக்கும் காதல் தேரிலே/ ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார், அதிசயம் காண்பார் / நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்..?’ என்று ’யார் காணுவார்’ என்று உச்சரிக்கும் போது, ‘ஆமாம்ல, எதிர்காலம் பத்தி நமக்கு என்ன தெரியும்’ எனும் ஆறுதல் தந்துவிடுவார்.

’வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே/ வடிவம் மட்டும் வாழ்வதேன்..?/ இளமை மீண்டும் வருமா?/ மணம் பெறுமா? முதுமையே சுகமா..?/ காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?’ என்பதைப் பாடும்போதே, ‘யார் காணுவார்?’ என்று சொல்லும்போதே நமக்கு இருக்கிற துக்கமெல்லாம் வடிந்துபோயிருக்கும்.

தங்கைக்கு புத்திமதி சொல்லுகிற அண்ணன் பாடல்கள் பல இருக்கின்றன. அத்தனைக்கும் சூப்பர் ஸ்டார் பாடலாக, முதலிடம் பிடித்து நிற்பது, திருச்சி லோகநாதனின் பாடல்தான். ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சிக் கண்ணே’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடல்தான், அன்றைக்குக் கல்யாண வீடுகளில் ஒலிபரப்பாகும்.

'அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும்/ அம்மா அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்/ புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே/ தங்கச்சி கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே/ என்று பாடிவிட்டு, ’மாமியாரை மாமனாரை மதிக்கணும்/ உன்னை மாலையிட்ட கணவனையே துதிக்கணும்/ சாமக் கோழி கூவையிலே முழிக்கணும்/ குளிச்சு சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்’ என்று நம் வீட்டுக்கே வந்து ஒவ்வொரு பெண்களுக்கும் அறிவுரை சொல்லும் அன்புக்குரலாக ஒலிக்கும் அவரின் குரல்!

’கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே/ நீ காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே/ இந்த அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே/ நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே’ என்று சொல்லும்போது, நம் முப்பாட்டன்களையெல்லாம் நினைத்து கண்ணிய வழிக்கு நம்மை மடைமாற்றிவிடும் மந்திரக்குரல் அவருடையது!

‘உலவும் தென்றல் காற்றினிலே’ என்ற பாடல். பாடும் போது, நம்மையும் உலாவவிட்டு நதியில் நம்மை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ரவுண்டு வருவார் திருச்சி லோகநாதன்.

பட்சணம் செய்யும் மனைவிக்குப் போட்டியாக கணவன் வர, அங்கே இருவரும் சமையற்கட்டில் பாடுகிற பாட்டு. அதை மணக்க மணக்கக் கொடுத்திருப்பார் திருச்சி லோகநாதன். அப்படியே நேர்மாறாக, ’ஏபிசிடி படிக்கிறேன், இஎப்ஜிஹெச் எழுதுறேன்’ என்ற ஜாலியான பாடலைக் குழந்தைக் கொண்டாட்டத்துடன் பாடி அசத்தியிருப்பார்.

மனோகர் நடித்த ‘வண்ணக்கிளி’ படத்தில், ’அடிக்கிற கைதான் அணைக்கும்’ அந்தக் காலத்தின் வித்தியாசமான பாடல். அந்த விக்கல் சத்தத்தில் கரவொலி எழுப்பி ரசித்துச் சிலிர்த்தார்கள் எல்லோரும்!

‘மாயா பஜார்’ படத்தையும் எஸ்.வி.ரங்காராவையும் சாவித்திரியையும் மறந்துவிடமுடியுமா? அதில் உள்ள ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலைத்தான் மறந்திருப்போமா? ’கல்யாண சமையல் சாதம்/ காய்கறிகளும் ப்ரமாதம்/ அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும்/ என்று பாடுவதே நமக்கு திருப்தியைத் தந்திருக்கும். அடுத்து ‘ஹஹஹஹஹஹஹஹா/ ஹஹஹஹஹஹா/ ஹஹஹஹஹஹஹஹா’ என்று சிரிப்பார். நாம் சாப்பிட்ட கல்யாணச் சாப்பாடே அந்தச்சிரிப்பைக் கேட்டு செரித்துவிடும்.

’அந்தார பஜ்ஜி அங்கே/ சுந்தார சொஜ்ஜி இங்கே/ அந்தார பஜ்ஜி அங்கே/ சுந்தார சொஜ்ஜி இங்கே/ சந்தோஷ மீறிப் பொங்க/ ஹஹஹஹஹஹா.../ இதுவே எனக்குத் திங்க’ என்று சிரித்துவிட்டும் பாடுகிற ஜாலம் கேட்டதும், வயிறு முட்டச் சாப்பிட்டவர்களுக்குக் கூட வயிறு பசியில் குரல் கொடுத்துவிடும். அந்தக் காலத்தில், குழந்தையின் தொப்பையைத் தடவிக்கொண்டு, இந்தப் பாடலைப் பாடியபடியே, சாதம் ஊட்டிவிட்டவர்கள் ஏராளம். அப்படியொரு ஜாலக்குரலோன் திருச்சி லோகநாதன். 'மாயாபஜார்’ படத்தின் டைட்டிலில், திருச்சி லோகநாதனின் பெயர் இருக்காது. முன்னதாக பலரும் இந்தப்பாடல்களைப் பாடினார்கள். திருப்தி இல்லாமல், கடைசிக்கட்டத்தில், திருச்சி லோகநாதனைப் பாடினார்.

சன்னமான குரலில், சங்கதிகள் சேர்த்துக் கொண்டே வந்து உச்சம் தொடும் குரல், மயக்கிப் போட்டது. ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்பது உள்ளிட்ட எத்தனையோ பாடல்கள். அவரின் குரலைக் கேட்டால் துன்பமெல்லாம் பறந்தோடும். அவரின் குணமும் அப்படித்தான்... பல பாடல்கள் தனக்கு வந்தபோது, ‘இந்தப் பாடலை செளந்தர்ராஜனுக்குக் கொடுங்க. ரொம்பப் பொருத்தமா இருக்கும்’ என்று மடைமாற்றி விட்டிருக்கிற அன்பாளன்! அவருடைய மகன்கள் தீபன் சக்ரவர்த்தி, டி.எல்.மகராஜன், டி.எல்.தியாகராஜன் என அனைவருமே பாடகர்கள். மூன்றாவது தலைமுறையாக அவரின் பேத்தியும் பாடத் தொடங்கியிருக்கிறார்.

நம்மை ரசிக்க வைக்கிற தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர் திருச்சி லோகநாதன். 1924 ஜூலை 24-ம் தேதி பிறந்தார். 1989 நவம்பர் 17-ம் தேதி காலமானார். இன்று அவருடைய நினைவுநாள்.

‘வாராய்’ பாடலைக்கேட்க மலைகளும் ‘உலவும் தென்றல்’ பாட்டைக் கேட்க ஓடங்களும் ‘ஆசையே அலை போல’ பாடலின் குரலைக் கேட்க, அலைகளும் திருச்சி லோகநாதனின் குரலுக்கு ஏங்கிக் கொண்டே இருக்கின்றன. இரவுகளில் திருச்சி லோகநாதனின் பாடல்களை ஒருமுறைக் கேட்டுப் பாருங்கள். இதுவரை அனுபவித்திடாத வேறொரு உலகுக்கு தன் குரலால் நம்மையெல்லாம் அழைத்துச் செல்வார்!

திருச்சி லோகநாதனின் நினைவுநாளில் அவரைப் போற்றுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in