`என் உடலை நானே வெறுக்கும் அளவுக்கு கொண்டு வந்தார்கள்'- நடிகை திவ்யபாரதி வேதனை

`என் உடலை நானே வெறுக்கும் அளவுக்கு கொண்டு வந்தார்கள்'- நடிகை திவ்யபாரதி வேதனை

தனக்கு வந்துள்ள உருவகேலி குறித்தான பதிவுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை திவ்யபாரதி.

ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘பேச்சுலர்’ படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு பரிச்சியமானவர் நடிகை திவ்யபாரதி. இதற்கு முன்பு இவர் மாடலிங்கும் செய்து வந்தார். இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய திவ்யபாரதி அடிக்கடி புகைப்படங்கள், ரீல்ஸ் ஆகியவற்றைப் பகிர்ந்து வருகிறார். இதில் இவரது உருவம் பற்றி கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, ‘இந்தப் பதிவு எதையும் நிரூபிக்கவோ அல்லது விளக்கவோ கிடையாது. ஆனால், எப்படியாக இருந்தாலும் உங்களை நீங்களே நேசித்துக் கொள்ளதான் இந்தப் பதிவு.

சமீப நாட்களாக என்னுடைய பதிவுகளில் சிலர் என்னுடைய உடல் அமைப்பு குறித்தும் நான் போலியாக ஹிப் பேட்களைப் பயன்படுத்துவதாகவும் கமென்ட்டில் சொல்கிறார்கள். என்னுடைய கல்லூரி நாட்களில் ஃபேண்டா பாட்டில் உடல் அமைப்பு, ஏலியன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். என் நண்பர்கள் என்னுடைய ஸ்லாம் புக்கில் என் உருவத்தை வரைந்து கேலி செய்திருக்கிறார்கள். இதெல்லாம் சேர்த்து என் உடலை நானே வெறுக்கும் அளவுக்கு கொண்டு வந்தார்கள். மற்றவர்கள் முன்பு செல்லவே நான் பயப்படுவேன். ஆனால், இதில் என் தவறு எதுவுமில்லை. இயற்கையிலே என் உடல்வாகு அப்படித்தான்.

பிறகு 2015-ல் இன்ஸ்டாகிராம் கணக்குத் தொடங்கி மாடலிங் செய்து என் புகைப்படங்களை பதிவிட்டேன். என் உடல்வாகுவை பாராட்டி நிறைய கமென்ட்கள் வந்தது. வொர்க்கவுட் டிப்ஸ் எல்லாம் கேட்டார்கள். இப்போது வரை ஜிம் சென்றதே இல்லை. இது எல்லாம் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. எது எப்படி இருந்தாலும் அதை வெறுப்பதற்கும் விரும்புவதற்கும் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்ற உண்மை எனக்கு அப்போதுதான் புரிந்தது.

அதன் பிறகே என் உடல் மீதான நம்பிக்கையை நான் வளர்த்துக் கொண்டேன். இதுபோன்று எந்தவொரு விஷயத்திலும் உங்களுக்கு வரும் எதிர்மறைகளை புறக்கணித்து விட்டு உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் விருப்பம் போல அனைத்தும் நடக்கும்’ என கூறியுள்ளார் திவ்யபாரதி. இவரது இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in