
’வாரிசு’ படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பிலும் உற்சாகமடைந்துள்ள நடிகர் ஷாம், 'வாரிசு' படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரசியமான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “20 வருடங்களுக்கு முன்பு ’குஷி’ படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது ’வாரிசு’ படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் 'வாரிசு' குடும்பத்தில் நான் தான் ஜூனியர் என்று கூட சொல்லலாம்.
’மாஸ்டர்’, ’பீஸ்ட்’ படங்களுக்கு பிறகு குடும்ப ரசிகர்களையும் கவரும் விதமாக ஒரு படம் பண்ண வேண்டும் என விஜய் சார் நினைத்தார். அதைத்தொடர்ந்தே அவர் வம்சி பைடிப்பள்ளியை அழைத்து கதை கேட்டார். அவர் கூறிய கதை பிடித்துப்போகவே, உடனே ஒப்புக்கொண்டு விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
படப்பிடிப்பில் உடன் நடிக்கும் எந்த நடிகர்களையும் ஈகோ இல்லாமல் பார்த்துக்கொண்டார். எந்த ஒருவரை பற்றியும் தவறாக ஒரு வார்த்தை பேச மாட்டார். படப்பிடிப்பின்போது அவர் ஃபோன் பயன்படுத்தவே மாட்டார். அப்படியே யாரிடமாவது பேசவேண்டும் என்றாலும் உணவு இடைவேளையில் மட்டுமே பேசுவார். அதை பார்த்துவிட்டு நானும் படப்பிடிப்பு சமயங்களில் எனது ஃபோனை தூக்கி போட்டுவிட்டேன்.
படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களை எல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். அப்போது தன் வீட்டில் உள்ள பணியாளர்களை எல்லாம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார்.
அஜித் சாருடன் இணைந்து நான் நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நெருங்கிய நட்பில் தான் இருக்கிறேன். அவரது மகளும், எனது மகளும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அதனால் அடிக்கடி பள்ளி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவரை பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர் தனது குழந்தைகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிகழ்வுகள் எதையுமே தவிர்க்க மாட்டார். ஒரு பெற்றோர் எப்படி தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருப்பார். நான் கூட சிலமுறை பள்ளிக்கு செல்வேன். சில நேரங்களில் எனது மனைவி மட்டுமே குழந்தைகள் விஷயமாக பள்ளிக்குச் சென்று வருவார். அப்போது கூட அங்கே அஜித் வந்திருப்பதை பார்த்துவிட்டு வந்து, 'அஜித் சாரே அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தனது குழந்தைகளுக்காக வருகிறார். நீங்கள் ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்' என என்னை திட்டுவார். அஜித் சாரால் அப்படி பலமுறை என் மனைவியிடம் திட்டு வாங்கி உள்ளேன்.
விஜய் சாரிடம் கூட பேசும்போது ’துணிவு’ படமும் 'வாரிசு'டன் தான் வருகிறது என்று சொன்னபோது ஹை ஜாலி 2 படமும் வரட்டும், பார்ப்போம் என்று அதையும் பாசிட்டிவாகத்தான் அணுகினார். இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ’துணிவு’ படத்திலும் வில்லனாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால், இயக்குநர் வினோத் கேட்ட தேதிகளும் ’வாரிசு’ படத்திற்கான எனது தேதிகளும் ஒரேசமயத்தில் இருந்ததால் என்னால் ’துணிவு’ படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதேசமயம் அந்த கதாபாத்திரத்திற்காக என்னை யோசித்ததற்காக இயக்குநர் வினோத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் நடித்து வருகிறேன். அதைத்தொடர்ந்து சோலோ ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படமும் தயாராக இருக்கிறது” என்று நடிகர் ஷாம் கூறியுள்ளார்.