’மஞ்சுமெல் பாய்ஸ்’ டூ ‘ஆடுஜீவிதம்’...உண்மைக் கதைகளை ஹிட்டாக்கிய மலையாள சினிமா!

மலையாள சினிமா
மலையாள சினிமா

சினிமாவில் வரும் கதைகளை விடவும் உண்மையில் நடக்கும் பல சம்பவங்கள் நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவை. அப்படி நெஞ்சை பதற வைக்கும் பல நிஜங்களை கதையாக்கி வெற்றி பெற்றிருக்கிறது சினிமா உலகம். இந்த வரிசையில் சமீபத்திய வருடங்களில் மலையாள சினிமாவில் உண்மை சம்பவங்களை படமாக்கி வெற்றிப் பெற்ற கதைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்!

’தி கோட் லைஃப்:ஆடுஜீவிதம்’ (2024):

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’
‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’

மலையாளத்தில் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘தி கோட் லைஃப்: ஆடுஜீவிதம்’. மனதை உலுக்கும் இந்தப் புத்தகத்தின் கதை நிஜத்தில் நஜீப் என்பவருடையது. தனது குடும்ப வறுமைக்காக சவுதி பாலைவனத்தில் ஆடுகளை மேய்த்து கஷ்டப்பட்ட நஜீப் இரண்டு ஆண்டுகள் துயரத்திற்குப் பிறகு ஆளே உருமாறி அங்கிருந்து தப்பித்த சர்வைவல் அட்வென்ச்சர்தான் இந்த ‘ஆடுஜீவிதம்’.

இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இயக்குநர் பிளெஸ்ஸி காத்திருந்தார். பிருத்விராஜூம் உடல் எடை கூட்டி, குறைத்து இந்தப் படத்திற்காக மாறி இருந்தார். நிஜ கதையைப் போலவே இதைப் படமாக்கவும் படக்குழு பல்வேறு சவால்களை சந்தித்தது. படமாக்கத் தொடங்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் கடந்த 28 அன்று வெளியானது.:

’மஞ்சுமெல் பாய்ஸ்’ (2024):

’மஞ்சுமல் பாய்ஸ்'
’மஞ்சுமல் பாய்ஸ்'

குணா குகையில் சிக்கிய தங்களது நண்பனை, உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய நண்பர்களது நெகிழ்ச்சி கதைதான் இந்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இதன் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவை சேர்ந்த சில நண்பர்கள் சுற்றுலா வந்தனர். அப்போது அவர்களில் சுபாஷ் என்பவர் 100 அடி ஆழ பள்ளத்தில் கால் தடுமாறி விழுந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு, ”இந்த இடத்தில் விழுந்தவர்கள் யாருமே இதுவரை பிழைத்ததில்லை. எனவே நீங்களும் நண்பரை மறந்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லுங்கள்” என்று கூறியுள்ளனர். ஆனாலும் பிடிவாதமாக இருந்த சுபாஷின் நண்பர்கள் தனது நண்பனை மீட்ட பிறகுதான் போவோம் என உறுதியாக இருந்தனர். தீயணைப்புத் துறையினர் குகைக்குள் இறங்க தயக்கம் காட்டினர்.

அப்போது சுபாஷின் நண்பர் சசி என்பவர் நான் இறங்குகிறேன் என முன் வந்து தன் நண்பனை மீட்டார். இந்தக் கதைதான் படமாக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இறுதியாக ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடல் ஒலிக்க விட்டிருந்ததும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் படத்தின் வெற்றிக்குப் பெரிய பலமாக அமைந்தது. மலையாளத்தில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ. 200 கோடி வசூலை வாரி குவித்தது.

’2018’ (2023):

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் கேரளாவை உலுக்கி எடுத்தது பேய் மழை. அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளத்தில் தத்தளித்தது மாநிலம். நிலச்சரிவு, உயிரிழப்புகள், இடப்பெயர்வு என புரட்டி எடுத்தது. அந்த நிஜ சம்பவத்துக்கு உயிரும் உணர்வும் கொடுத்து எமோஷனலான ஒரு படம்தான் ‘2018’.

இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரூ. 177 கோடி வசூல் செய்தது. கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

’டேக் ஆஃப்’ (2017):

கடந்த 2014ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்து தப்பித்து வந்த 19 மலையாள செவிலியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் படம் தான் 'டேக் ஆஃப்'. அதிக சம்பளத்திற்காக ஈராக்கிற்கு செல்கிறது கேரளாவில் இருந்து ஒரு செவிலியர் குழு. அது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய காலக் கட்டம். மொசூல் நகரத்தை ஐஎஸ்ஐஎஸ் கைப்பற்றிவிட, ஈராக்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் உதவியை நாடுகிறாள் சமீரா (கதாநாயகி பார்வதி).

அங்கு கேரள பெண்கள் இருக்கும் மருத்துவமனையையும், ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது. அனைவரும் உயிருடன் இந்தியா திரும்பினார்களா என்பதை இயக்குநர்  மகேஷ் நாராயணன் படமாக்கி வெற்றிக் கண்டார். இந்த படங்கள் மட்டுமல்லாது, ‘வைரஸ்’, 'மலையன் குஞ்சு’, ‘படா’ போன்ற மலையாளப் படங்களும் உண்மை சம்பவங்களை கொண்டு வந்து கவனம் ஈர்த்தப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in