
‘களத்தூர் கண்ணம்மா’ படம் ஏவிஎம் தயாரித்த மிகப்பெரிய வெற்றிப் படம். இந்தப் படத்தின் பெரும் வெற்றிக்கு மாஸ்டர் கமல்ஹாசனும் ஒரு காரணம். கமலுக்கு அதுதான் முதல் படம். 1960- ல் ‘களத்தூர் கண்ணம்மா’ வெளிவந்தபோது கமலுக்கு 6 வயது. படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் துறுதுறுவென்று எதையாவது செய்துகொண்டும், இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டேயுமிருப்பார் அந்தக் குட்டிக் கமல்.
இந்தப் படத்தின் கதை திருச்சி ஜாவர் சீதாராமனுடையது. ‘அந்தநாள்’ படம் தொடங்கி ஏவிஎம் நிறுவனத்துக்காக நிறையத் திரைக்கதைகளை எழுதித்தந்தவர் ஜாவர். நடிப்புக்கு சிவாஜி என்றால் திரைக்கதை எழுத்திற்கு ஜாவர் சீதாராமன் என்கிறார் ஏவிஎம் சரவணன். ஜெமினி, ஜூபிடர் நிறுவனங்களிலெல்லாம் பணியாற்றியிருந்தாலும் ஏவிஎம் நிறுவனத்திற்குத்தான் ஜாவர் அதிகமான திரைக்கதைகளை எழுதியிருக்கிறார். ஆக ஏவிஎம் வெற்றியில் ஜாவர் சீதாராமனுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. இதையும் சரவணன் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். ஜாவர் சீதாராமனுக்கு ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பதில் கொள்ளை ஆசை. அவர் தீவிரமான புத்தக வாசிப்பாளரும்கூட. அவர் ‘களத்தூர் கண்ணம்மா’வின் கதையை உருவாக்கியதும்கூட ‘நோபடீஸ் சைல்ட்’ என்ற சீனப்படத்தைத் தழுவித்தான்.
’நோபடீஸ் சைல்டை’த் தழுவி இன்னொரு படமும் ஏவிஎம் ஸ்டூடியோவுக்குப் பக்கத்துக் காம்பவுண்டில் இருந்த புனலூரி ஸ்டூடியோவில் அப்போது தயாரானது. கல்யாண்குமார் - (அண்மையில் மறைந்த) ஜமுனா ஆகியோர் நடித்த அந்தப் படத்தை எடுத்தவர் சின்ன அண்ணாமலை. படத்தின் பெயர் ‘கடவுளின் குழந்தை’. இரண்டும் ஒரே கதைதான். எனவே, ‘களத்தூர் கண்ணம்மா’வை விரைந்து முடித்து, வெளியிட்டுவிடவேண்டும் என்கிற நெருக்கடி தோன்றியது.
இப்படியான இக்கட்டு சூழலில், அதுவரையில் எடுக்கப்பட்ட காட்சிகள் ஏவி மெய்யப்ப செட்டியாருக்குத் திருப்தியாக இல்லை. எனவே, பல காட்சிகளையும் மறுபடியும் படப்பிடிப்பு நடத்தி எடுக்கச் சொன்னார். அதனாலும் வெளியீட்டுத் தேதி தள்ளிக்கொண்டு போனது. இதனிடையே, ‘களத்தூர் கண்ணம்மா’வை அதுவரையில் இயக்கிய இயக்குநர் பிரகாஷ் ராவ் படத்தின் காட்சிகளை மறுபடியும் எடுக்க வேண்டும் என்ற செட்டியாரின் யோசனையால் நொந்துபோனார்.
அவருக்குத் தமிழ் தெரியாததால் ஏற்கெனவே பல சங்கடங்கள் உண்டாகியிருந்தன. படத்தின் பாடல்களைக் கவியரசு கண்ணதாசன் எழுதினார். படத்தின் வெற்றிக்குப் பாடல்களும் பெரிய பலம் சேர்த்தன. ஆனால், இயக்குநர் பிரகாஷ் ராவ் பாடல் வரிகளைப் புரிந்துகொள்ளத் திணறினார். கண்ணதாசனோ பாடல் வரிகளை அருவிபோலக் கொட்டினார்.
எல்லோரும் வியந்து நின்ற நேரத்தில் பிரகாஷ் ராவ் கண்ணதாசனிடம் இன்னொரு பல்லவி... இன்னொரு பல்லவி என்று நச்சரித்த வண்ணமிருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ‘அருகில் வந்தாள்...’ என்று தொடங்கும் பல்லவியைக் கொண்டது. அதற்கு கண்ணதாசன் 58 பல்லவிகளை எழுதிக் கொடுத்துவிட்டு, “இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம். அவருக்கு அத்தனை குடைச்சலைத் தந்திருக்கிறார் அந்த இயக்குநர்.
படக்குழுவினர் முதலில் குழம்பிப்போய் பிறகு எல்லா பல்லவிகளிலிருந்தும் எட்டைத் தேர்வு செய்து அதையே ஒரு முழு பாடலாக்கிக் கொண்டார்களாம். ரீ டேக் என்று மெய்யப்பச் செட்டியார் சொன்னதும் கோபம் கொண்டுவிட்டார் இயக்குநர். சம்பளமாகப் பேசிய தொகையில் பிரகாஷ் ராவ் வாங்கிய முன்பணம் பாதி. எடுக்கப்பட்ட படமும் கிட்டத்தட்ட பாதி. எனவே, அத்தோடு கணக்கு முடித்துக்கொண்டு ராவ் போய்விட்டார். மறுபடியும் எடுக்கத் தோன்றிய காட்சிகளையும் மீதிப் படத்தையும் பிரபல இயக்குநர் பீம்சிங்கை வைத்து எடுத்தார்கள். படத்தின் டைட்டிலில் இயக்குநர் பீம்சிங் என்றுதான் போட்டார்கள்.
குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசன் படப்பிடிப்புத் தளத்தையே அதகளப்படுத்திக் கொண்டிருந்தார். முதலில் எடுத்த காட்சியை மறுபடியும் எடுக்கிறபோது ஒரு நெருக்கடி வந்தது. முதலில் எடுக்கப்பட்ட காட்சியில் ஒரு மாமரம் இருக்கும். அதில் மாங்காய்கள் காய்த்துத் தொங்கும். அதே காட்சியை மறுபடியும் எடுக்கிறபோது மாம்பழ சீசன் முடிந்திருந்தது. எனவே, அந்த மாமரம் காய்களில்லாமல் காட்சி தந்தது.
படத்தின் கன்டினியூவிட்டி மிஸ் ஆகிவிடுமே. என்ன செய்யலாம் என யோசித்தபோது செயற்கையாக காகிதத்தால் செய்யப்பட்ட மாங்காய்களைத் தொங்கவிட்டார்கள். படப்பிடிப்பு திருப்தியாக முடிந்தது. குட்டிக் கமலுக்கு மாங்காய் மேல் கண். அதைத் தின்ன ஆசை.
“எனக்கு மாங்காய் வேண்டும்” என்று அழாத குறையாகக் கேட்கத் தொடங்கிய கமலுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் அந்தப் படத்தின் நாயகன் ஜெமினி கணேசன். மாமரத்தில் ஏறினார். போலியான காகித மாங்காயைப் பறித்துக்கொண்டு கீழே வந்து கமலிடம் தந்தார். கமல் அதை அசல் என்று நம்பிக் கடித்துவிட்டார். அப்போதுதான் அது காகிதக் காய் என்று புரிந்தது. உடனே, “ஐயே... டூப் மாங்காய்... டூப் மாங்காய்...” என்று வெள்ளந்தியாய் சொன்னார்.
அதேபோல படத்தில் ஒரு வீடுபோன்ற செட் போடப்பட்டிருந்தது. அதையும் கமல் அசல் வீடென்று நம்பி அதனருகே போனபோதுதான் அது செட் என்று புரிந்துகொண்டார். உடனே, “ஐயையே... இது டூப் வீடு... டூப் வீடு” என்று கத்தினார். செட்டிலிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
இன்னொரு காட்சியில், படத்தின் நாயகி சாவித்திரி கமல்ஹாசனுக்கு உப்புமா ஊட்டிவிடுவதைப் படமாக்க வேண்டும். படப்பிடிப்பு தொடங்கியது. கையில் வைத்திருந்த தட்டிலிருந்து உப்புமாவை சாவித்திரி கமலின் வாயில் ஊட்டிவிட்டார். காட்சி மிகச் சிறப்பாக வந்தது. கட் சொன்னதுதான் தாமதம். கமல் ஓரமாக ஓடிப்போய்த் தன் வாயில் அதுவரையில் ஒதுக்கி வைத்திருந்த உப்புமாவைத் துப்பிவிட்டார்.
எல்லோரும் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, “டூப் உப்புமா...” என்று சொல்லிக்கொண்டே வந்தார் கமல். மாங்காயையும், வீடு போன்ற செட்டையும் பார்த்ததால் அந்த உப்புமாவையும் போலி என்று கருதியிருக்கிறார் கமல். படத்தின் உதவி இயக்குநரான எஸ்பி.முத்துராமன் அந்த உப்புமாவை வாங்கிச் சுவைத்துச் சாப்பிட்டுக் காட்டிய பிறகே, அதுமட்டும் டூப் அல்ல அசல் என்று புரிந்துகொண்டு சிரித்தார் கமல்!
வீடியோ வடிவில் காண: